யோபு பதிலளிக்கிறார்: துன்மார்க்கர் ஏன் செழிக்கிறார்கள்?
21 1அப்பொழுது யோபு பதிலளித்தார்: 2"என் வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள்; இதுவே நீங்கள் எனக்குத் தரும் ஆறுதலாய் இருக்கட்டும். 3நான் பேசும்வரை பொறுத்துக்கொள்ளுங்கள்; நான் பேசி முடிந்தபின் நீங்கள் பரிகாசம் செய்யக்கூடும். 4என்னைப் பொறுத்தமட்டில், என் முறையீடு வெறும் மனிதனுக்கு விரோதமானதோ? நான் ஏன் என் பொறுமையை இழக்கக்கூடாது? 5என்னைப் பாருங்கள், திகைத்துப்போங்கள்; உங்கள் கையை உங்கள் வாயின்மேல் வையுங்கள். 6நான் அதை நினைக்கும்போது நடுங்குகிறேன்; திகில் என் சரீரத்தைப் பிடித்துக்கொள்ளுகிறது. 7துன்மார்க்கர் ஏன் உயிரோடிருந்து, முதிர்வயதடைந்து, வல்லமையில் பெருகுகிறார்கள்? 8அவர்களுடைய பிள்ளைகள் அவர்கள் கண்முன் அவர்களோடு நிலைபெற்று பாதுகாப்பாய் இருக்கிறார்கள்; அவர்களுடைய சந்ததி அவர்கள் கண்பார்வையில் நிலைத்திருக்கிறது. 9அவர்களுடைய வீடுகள் பயமில்லாமல் பத்திரமாய் இருக்கிறது; தேவனுடைய கோல் அவர்கள்மேல் விழுவதில்லை. 10அவர்களுடைய காளை பொலிந்து தவறாமல் ஈனுகிறது; அவர்களுடைய பசு கன்றுபோட்டு கருவழிவதில்லை. 11தங்கள் குழந்தைகளை மந்தையைப்போல் தாராளமாய் விட்டுவிடுகிறார்கள்; அவர்களுடைய பிள்ளைகள் துள்ளிக்குதிக்கிறார்கள். 12மேளத்தோடும் சுரமண்டலத்தோடும் பாடி, குழலின் ஓசைக்கு மகிழ்ந்து களிகூருகிறார்கள். 13தங்கள் நாட்களைச் செழிப்பிலே கழிக்கிறார்கள்; சமாதானத்தோடே பாதாளத்திற்கு இறங்குகிறார்கள். 14ஆயினும் அவர்கள் தேவனை நோக்கி, ‘எங்களைவிட்டு விலகும்! உம்முடைய வழிகளை அறிய எங்களுக்கு விருப்பமில்லை. 15நாங்கள் சர்வவல்லவரைச் சேவிக்கிறதற்கு அவர் யார்? அவரை நோக்கி மன்றாடுவதால் எங்களுக்கு என்ன லாபம்?’ என்கிறார்கள். 16ஆனாலும் அவர்களுடைய செழிப்பு அவர்களுடைய கையில் இல்லை; துன்மார்க்கருடைய ஆலோசனை என்னைவிட்டு தூரமாயிருக்கட்டும். 17துன்மார்க்கருடைய விளக்கு எத்தனைமுறை அணைந்துபோகிறது? அவர்கள்மேல் அவர்களுடைய அழிவு எத்தனைமுறை வந்து விழுகிறது? தேவன் தமது கோபத்திலே எத்தனைமுறை வேதனைகளைப் பங்கிட்டுக் கொடுக்கிறார்? 18காற்றுக்கு முன்னிருக்கும் வைக்கோலைப்போலவும், புயல் அடித்துக்கொண்டுபோகும் பதரைப்போலவும் அவர்கள் எத்தனைமுறை ஆகிறார்கள்? 19‘தேவன் ஒருவனுடைய தண்டனையை அவனுடைய பிள்ளைகளுக்கென்று சேமித்துவைக்கிறார்’ என்கிறீர்கள். அவனே அதை உணரும்படி, அவனுக்கே அவர் பதிலளிக்கட்டும். 20அவனுடைய சொந்தக் கண்களே அவனுடைய அழிவைக் காணட்டும்; சர்வவல்லவருடைய கோபாக்கினையை அவன் குடிக்கட்டும். 21அவனுடைய மாதங்கள் அறுப்புண்டுபோனபின், அவனுக்குப்பின் இருக்கும் அவனுடைய குடும்பத்தைக்குறித்து அவன் என்ன கவலைப்படுவான்? 22தேவனுக்கு அறிவை யாராவது போதிக்கக்கூடுமோ? உன்னதத்திலிருப்பவர்களையும் நியாயந்தீர்க்கிறவர் அவரே. 23ஒருவன் முழு பெலத்தோடே மரிக்கிறான், முற்றிலும் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கையில்; 24அவனுடைய சரீரம் நன்கு போஷிக்கப்பட்டும், அவனுடைய எலும்புகளின் மச்சை இன்னும் ஈரமாகவும் இருக்கிறது. 25மற்றொருவன் மனங்கசந்த ஆத்துமாவோடே மரிக்கிறான், ஒருபோதும் நன்மையை ருசிபார்க்காதவனாய். 26இருவரும் ஒருமித்துப் புழுதியிலே படுத்துக்கொள்ளுகிறார்கள்; புழுக்கள் அவ்விருவரையும் மூடிக்கொள்ளுகிறது. 27இதோ, உங்கள் நினைவுகளையும், எனக்கு அநியாயம் செய்ய நீங்கள் வகுக்கும் சூழ்ச்சிகளையும் நான் அறிவேன். 28‘பிரபுவின் வீடு இப்பொழுது எங்கே? துன்மார்க்கர் வாழ்ந்த கூடாரம் எங்கே?’ என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். 29வழிப்போக்கர்களை நீங்கள் ஒருபோதும் கேட்டதில்லையா? அவர்கள் தரும் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டீர்களா? 30தீயவன் ஆபத்துநாளிலே தப்புவிக்கப்படுகிறான், கோபாக்கினையின் நாளிலே அவன் விடுவிக்கப்படுகிறான் என்பதையே. 31அவனுடைய நடத்தையைக்குறித்து அவன் முகத்துக்கு நேரே அவனைக் கடிந்துகொள்ளுகிறவன் யார்? அவன் செய்ததற்குத்தக்கதாக அவனுக்குப் பதில் சரிக்கட்டுகிறவன் யார்? 32அவன் பிரேதக்குழிக்குச் சுமந்துகொண்டு போகப்படுகிறான்; அவனுடைய கல்லறையின்மேல் காவல் வைக்கப்படுகிறது. 33பள்ளத்தாக்கின் மண்கட்டிகள் அவனுக்கு இனிதாயிருக்கிறது; எல்லாரும் அவனைப் பின்பற்றிச் செல்லுகிறார்கள்; அவனுக்கு முன்சென்றவர்கள் எண்ணிமுடியாதவர்கள். 34இப்படியிருக்க, வீணான வார்த்தைகளால் நீங்கள் எனக்கு எப்படி ஆறுதல் சொல்லுவீர்கள்? உங்கள் பதில்கள் பொய்யேயன்றி வேறல்ல."