மனுஷனுக்கு நம்பிக்கை உண்டோ?
14 1"ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன், குறுகிய நாட்களுள்ளவனும், தொல்லை நிறைந்தவனுமாயிருக்கிறான். 2அவன் பூவைப்போல் மலர்ந்து வாடிப்போகிறான்; நிழலைப்போல் ஓடிப்போய் நிலைத்திரான். 3இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைப் பதிக்கிறீரோ? என்னை உம்மோடே நியாயத்திற்குக் கொண்டுவருகிறீரோ? 4தீட்டானதிலிருந்து சுத்தமானதை வெளிப்படுத்தத்தக்கவன் யார்? ஒருவனுமில்லை. 5அவனுடைய நாட்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறபடியால், அவனுடைய மாதங்களின் எண்ணிக்கை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக்கூடாத எல்லைகளையும் நீர் ஏற்படுத்தினீர். 6அவன் இளைப்பாறும்படி அவனைவிட்டு விலகியிரும், அவன் ஒரு கூலிக்காரனைப்போல் தன் நாளை முடிக்குமட்டும்.
7"ஒரு மரத்திற்கு நம்பிக்கை உண்டு: அது வெட்டப்பட்டாலும் திரும்பத் தளிர்க்கும், அதின் கிளைகள் ஒழிந்துபோகாது. 8அதின் வேர் நிலத்தில் பழையதாகி, அதின் அடிமரம் மண்ணில் இறந்துபோனாலும், 9தண்ணீரின் வாசனையினால் அது துளிர்விட்டு, ஒரு புதிய நாற்றைப்போல் கிளைகளை விடும். 10ஆனால் மனுஷன் மரித்து விழுந்துபோகிறான்; ஒருவன் தன் ஜீவனை விடுகிறான், பின்பு அவன் எங்கே? 11ஏரியிலிருந்து தண்ணீர் மறைந்துபோவதுபோலவும், ஆறு வற்றி உலர்ந்துபோவதுபோலவும், 12மனுஷன் படுத்துக்கிடந்து எழுந்திரான்; வானங்கள் ஒழிந்துபோகுமட்டும், அவன் விழிக்கவுமாட்டான், தன் நித்திரையினின்று எழுப்பப்படவுமாட்டான்.
13"நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உம்முடைய கோபம் தணியுமட்டும் என்னை மறைத்து, எனக்கு ஒரு குறித்த காலத்தை ஏற்படுத்தி, என்னை நினைத்தருளினால் நலமாயிருக்கும்! 14மனுஷன் மரித்தால் திரும்பப் பிழைப்பானோ? என் கடின சேவையின் நாட்களெல்லாம் நான் காத்திருப்பேன், என் மறுபிறப்பு வருமட்டும். 15நீர் கூப்பிடுவீர், நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உம்முடைய கைகளின் கிரியையின்மேல் ஆவலாயிருப்பீர். 16அப்பொழுது நீர் என் காலடிகளை எண்ணுவீர்; என் பாவத்தின்மேல் நீர் கண்காணிப்பாயிரார். 17என் மீறுதல் ஒரு பையிலே முத்திரையிடப்படும், என் அக்கிரமத்தை நீர் மூடிவிடுவீர்.
18"ஆனால் ஒரு மலை விழுந்து அழிந்து போவதுபோலவும், ஒரு கன்மலை தன் இடத்தைவிட்டு நகர்த்தப்படுவதுபோலவும், 19தண்ணீர் கற்களைத் தேய்த்துவிடுவதுபோலவும், அதின் பெருவெள்ளம் பூமியின் மண்ணை அடித்துக்கொண்டுபோவதுபோலவும், நீர் மனுஷனுடைய நம்பிக்கையை அழித்துப்போடுகிறீர். 20நீர் அவனை என்றென்றைக்கும் மேற்கொள்ளுகிறீர், அவன் ஒழிந்துபோகிறான்; அவனுடைய முகத்தை மாற்றி அவனை அனுப்பிவிடுகிறீர். 21அவனுடைய குமாரர் கனமடைந்தாலும் அவன் அதை அறியான்; அவர்கள் தாழ்த்தப்பட்டாலும் அவன் அதைக் கவனியான். 22அவன் தன் சொந்த சரீரத்தின் வேதனையை மாத்திரமே உணருகிறான், தனக்காக மாத்திரமே துக்கிக்கிறான்."