எங்கள் பிதா எரேமியா மூலமாய் எச்சரிக்கிறார்
37 1பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் தேசத்தில் ராஜாவாக்கின, யோயாக்கீமின் குமாரனாகிய கோனியாவுக்குப் பதிலாக, யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா ஆண்டான். 2ஆனாலும் அவனாகிலும், அவனுடைய ஊழியக்காரராகிலும், தேசத்தின் ஜனங்களாகிலும், தீர்க்கதரிசியாகிய எரேமியா மூலமாய் எங்கள் பிதா சொன்ன வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை.
3ராஜாவாகிய சிதேக்கியா, செலேமியாவின் குமாரனாகிய யூகாலையும், ஆசாரியனாகிய மாசெயாவின் குமாரனாகிய செப்பனியாவையும் தீர்க்கதரிசியாகிய எரேமியாவினிடத்திற்கு அனுப்பி: “எங்கள் பிதாவை நோக்கி எங்களுக்காக விண்ணப்பம்பண்ணும்” என்று சொல்லச்செய்தான்.
4அப்பொழுது எரேமியா ஜனங்களுக்குள்ளே போக்கும் வரத்துமாயிருந்தான்; அவர்கள் அவனை இன்னும் சிறையில் அடைக்கவில்லை. 5பார்வோனுடைய சேனை எகிப்திலிருந்து புறப்பட்டு வந்திருந்தது; எருசலேமை முற்றிக்கை போட்டிருந்த கல்தேயர் அதைக் கேள்விப்பட்டபோது, எருசலேமை விட்டுத் திரும்பிப்போனார்கள்.
6அப்பொழுது எங்கள் பிதாவின் வார்த்தை தீர்க்கதரிசியாகிய எரேமியாவுக்கு உண்டாகி, அவர் சொன்னதாவது:
7இஸ்ரவேலின் எங்கள் பிதா சொல்லுகிறது என்னவென்றால்: என்னிடத்தில் விசாரிக்கும்படி உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்தில் நீங்கள் சொல்லவேண்டியது: இதோ, உங்களுக்கு உதவிசெய்யப் புறப்பட்டுவந்த பார்வோனுடைய சேனை தன் தேசமாகிய எகிப்துக்குத் திரும்பிப்போகும். 8அப்பொழுது கல்தேயர் திரும்பிவந்து, இந்த நகரத்தின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அக்கினியால் சுட்டெரிப்பார்கள்.
9எங்கள் பிதா சொல்லுகிறது என்னவென்றால்: ‘கல்தேயர் நிச்சயமாய் நம்மைவிட்டுப் போய்விடுவார்கள்’ என்று சொல்லி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதேயுங்கள்; அவர்கள் போகமாட்டார்கள். 10உங்களோடே யுத்தம்பண்ணுகிற கல்தேயருடைய சேனையையெல்லாம் நீங்கள் முறியடித்தாலும், அவர்களில் காயப்பட்டவர்கள்மாத்திரம் தங்கள் கூடாரங்களில் மீதியாயிருந்தாலும், அவர்கள் எழும்பி, இந்த நகரத்தை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்.
எரேமியா கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுதல்
11பார்வோனுடைய சேனையினிமித்தம் கல்தேயருடைய சேனை எருசலேமைவிட்டு நீங்கிப்போனபோது, 12எரேமியா ஜனங்களின் நடுவே அங்கே தன் பங்கை அடையும்படி பென்யமீன் தேசத்திற்குப் போகும்படி எருசலேமிலிருந்து புறப்பட்டான். 13அவன் பென்யமீன் வாசலில் வந்தபோது, அனனியாவின் குமாரனாகிய செலேமியாவின் மகனான யீரியா என்னும் காவற்சேனையின் தலைவன் அங்கே இருந்து, தீர்க்கதரிசியாகிய எரேமியாவைப் பிடித்து: “நீ கல்தேயரிடத்திற்குத் தப்பியோடிப்போகிறாய்!” என்றான்.
14அதற்கு எரேமியா: “அது பொய்! நான் கல்தேயரிடத்திற்குத் தப்பியோடிப்போகிறதில்லை” என்றான்; ஆனாலும் யீரியா அவன் சொல்லைக் கேளாமல், எரேமியாவைப் பிடித்து, அவனைப் பிரபுக்களிடத்திற்குக் கொண்டுபோனான்.
15பிரபுக்கள் எரேமியாவின்மேல் கோபங்கொண்டு, அவனை அடித்து, சிறைச்சாலையாக்கப்பட்டிருந்த யோனத்தான் என்னும் எழுத்தனுடைய வீட்டில் அவனைக் காவலில் வைத்தார்கள்.
16இப்படியாக எரேமியா நிலவறையின் புற்றறைகளுக்குள் போனான்; அங்கே அநேகநாள் இருந்தான். 17பின்பு ராஜாவாகிய சிதேக்கியா ஆள் அனுப்பி, அவனை வரவழைத்து, தன் அரமனையில் இரகசியமாய் அவனை விசாரித்து: “எங்கள் பிதாவினிடத்திலிருந்து ஏதாகிலும் வார்த்தை உண்டா?” என்று கேட்டான். அதற்கு எரேமியா: “உண்டு; நீர் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்” என்றான்.
18மேலும் எரேமியா ராஜாவாகிய சிதேக்கியாவை நோக்கி: “நீர் என்னைக் காவலில் வைக்கத்தக்கதாக நான் உமக்கு விரோதமாகவும், உம்முடைய ஊழியக்காரருக்கு விரோதமாகவும், இந்த ஜனத்திற்கு விரோதமாகவும் என்ன பாவம் செய்தேன்? 19‘பாபிலோன் ராஜா உங்களுக்கு விரோதமாகவும் இந்த தேசத்திற்கு விரோதமாகவும் வரமாட்டான்’ என்று உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொன்ன உங்கள் தீர்க்கதரிசிகள் இப்பொழுது எங்கே? 20இப்போதும் ராஜாவாகிய என் ஆண்டவனே, தயவுசெய்து எனக்குச் செவிகொடும்; என் விண்ணப்பம் உமக்கு முன்பாக ஏற்றுக்கொள்ளப்படுவதாக; நான் அங்கே சாகாதபடிக்கு, என்னை எழுத்தனாகிய யோனத்தானுடைய வீட்டிற்குத் திரும்ப அனுப்பிவிடாதேயும்” என்றான்.
21அப்பொழுது ராஜாவாகிய சிதேக்கியா கட்டளையிட, அவர்கள் எரேமியாவைக் காவற்சாலையின் முற்றத்தில் வைத்து, நகரத்தின் அப்பமெல்லாம் தீர்ந்துபோகுமளவும், அப்பஞ்சுடுகிறவர்களுடைய வீதியிலிருந்து அனுதினமும் ஒரு அப்பத்தை அவனுக்குக் கொடுக்கச்செய்தார்கள். இப்படியாக எரேமியா காவற்சாலையின் முற்றத்தில் தங்கியிருந்தான்.