பிதாவானவர் சிதேக்கியாவின் விண்ணப்பத்திற்குப் பதிலளிக்கிறார்
21 1பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்செய்கையில், சிதேக்கியா ராஜா மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரையும், மாசெயாவின் குமாரனாகிய ஆசாரியன் செப்பனியாவையும் எரேமியாவினிடத்தில் அனுப்பினபோது, எங்கள் பிதாவினிடத்திலிருந்து எரேமியாவுக்கு உண்டான வார்த்தை: 2“பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எங்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறபடியால், எங்களுக்காக எங்கள் பிதாவை நோக்கி விண்ணப்பம்செய்யும்; ஒருவேளை எங்கள் பிதா தம்முடைய எல்லா அற்புதங்களின்படியும் எங்களுக்குச் செய்வதினால், சத்துரு எங்களைவிட்டு விலகிப்போவான்” என்று சொல்லச்சொன்னார்கள்.
3அப்பொழுது எரேமியா அவர்களை நோக்கி: “நீங்கள் சிதேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்:
4இஸ்ரவேலின் பிதா சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவுக்கும், மதிலுக்கு வெளியே உங்களை முற்றுகையிடுகிற கல்தேயருக்கும் விரோதமாய் நீங்கள் உங்கள் கைகளில் பிடித்திருக்கிற யுத்த ஆயுதங்களை நான் திருப்பி, இந்த நகரத்தின் நடுவிலே ஒன்றுசேர்ப்பேன். 5நான்தானே நீட்டின கையினாலும், பலத்த புயத்தினாலும், கோபத்தினாலும், உக்கிரத்தினாலும், மகா கடுங்கோபத்தினாலும் உங்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுவேன். 6இந்த நகரத்தின் குடிகளாகிய மனுஷரையும் மிருகங்களையும் சங்கரிப்பேன்; அவர்கள் மகா கொள்ளைநோயால் சாவார்கள். 7அதற்குப்பின்பு, யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும், அவனுடைய ஊழியக்காரரையும், இந்த நகரத்தில் கொள்ளைநோய்க்கும் பட்டயத்துக்கும் பஞ்சத்துக்கும் தப்பியிருக்கிற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய கையிலும், அவர்களுடைய பிராணனை வாங்கத் தேடுகிற அவர்களுடைய சத்துருக்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன் என்று எங்கள் பிதா சொல்லுகிறார்; அவன் அவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டுவான்; அவன் தப்பவிடமாட்டான், மன்னிக்கமாட்டான், இரக்கம் காட்டமாட்டான்.
8மேலும் இந்த ஜனங்களை நோக்கி நீ சொல்லவேண்டியது என்னவென்றால், எங்கள் பிதா சொல்லுகிறது: இதோ, நான் ஜீவனுக்கான வழியையும் மரணத்துக்கான வழியையும் உங்களுக்கு முன்பாக வைக்கிறேன். 9இந்த நகரத்தில் தங்கியிருக்கிறவன் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் சாவான்; உங்களை முற்றுகையிடுகிற கல்தேயரிடத்தில் போய்ச் சரணடைகிறவனோ பிழைத்திருப்பான்; அவனுடைய பிராணன் அவனுக்குக் கொள்ளையாய்க் கிடைத்ததுபோலத் தப்பிப்பிழைப்பான். 10நான் இந்த நகரத்துக்கு விரோதமாய் நன்மைக்கல்ல, தீமைக்கே என் முகத்தைத் திருப்பினேன் என்று எங்கள் பிதா சொல்லுகிறார்; அது பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும், அவன் அதை அக்கினியால் சுட்டெரிப்பான்.
பிதாவானவர் தாவீதின் வம்சத்திற்குச் சொன்ன வார்த்தை
11யூதாவின் ராஜவம்சத்தாரை நோக்கி: எங்கள் பிதாவின் வார்த்தையைக் கேளுங்கள் என்று சொல்.
12தாவீதின் வம்சத்தாரே, எங்கள் பிதா சொல்லுகிறது என்னவென்றால்: ஒவ்வொரு காலையிலும் நீதியாய் நியாயம் விசாரியுங்கள்; கொள்ளையிடப்பட்டவனை ஒடுக்குகிறவனுடைய கையிலிருந்து விடுவியுங்கள்; இல்லாவிட்டால் உங்கள் துன்மார்க்கமான செய்கைகளினிமித்தம் என் கோபம் அக்கினியைப்போல் பற்றியெரியும், அதை அவிக்க ஒருவரும் இராதிருப்பார். 13இதோ, பள்ளத்தாக்கின்மேல் குடியிருக்கிறவளே, உனக்கு விரோதமாய் நான் இருக்கிறேன், சமபூமியின் கன்மலையே என்று எங்கள் பிதா சொல்லுகிறார்—“எங்களுக்கு விரோதமாய் இறங்கிவருகிறவன் யார்? எங்கள் வாசஸ்தலங்களுக்குள் பிரவேசிக்கிறவன் யார்?” என்று சொல்லுகிறவளே. a a v13 எருசலேம் தன்னைச் சுற்றியிருந்த பள்ளத்தாக்குகளுக்கு மேலான உயர்ந்த மேட்டின்மேல் அமைந்திருந்தது; இது, தங்கள் நகரம் யாராலும் தாக்கமுடியாதது என்ற பொய்யான நம்பிக்கையை அதின் குடிகளுக்கு உண்டாக்கியது. 14உங்கள் செய்கைகளின் பலனுக்குத்தக்கதாக நான் உங்களைத் தண்டிப்பேன், என்று எங்கள் பிதா சொல்லுகிறார். அவளுடைய வனத்திலே நான் தீ மூட்டுவேன், அது அவளைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் பட்சித்துப்போடும்.”