பிதாவானவர் உண்மையற்றவர்களைவிட்டு விலகுகிறார்
5 1ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்! இஸ்ரவேல் வம்சத்தாரே, கவனியுங்கள்! செவிகொடுங்கள், குடும்பத்தாரே ராஜாவின் குடும்பத்தாரே! நியாயத்தீர்ப்பு உங்களுக்கே உரியது, ஏனெனில் நீங்கள் மிஸ்பாவிலே ஒரு கண்ணியாக இருந்திருக்கிறீர்கள் தாபோரின்மேல் விரிக்கப்பட்ட வலையாகவும் இருந்திருக்கிறீர்கள்.
2“கலகக்காரர் கொலைபாதகத்தில் ஆழமாய் இறங்கியிருக்கிறார்கள், ஆனாலும் நான் அவர்கள் எல்லாரையும் தண்டித்துத் திருத்துவேன். 3எப்பிராயீமை நான் அறிவேன், இஸ்ரவேல் என்னைவிட்டு மறைவாயில்லை; எப்பிராயீமே, இப்பொழுது நீ வேசித்தனம் செய்திருக்கிறாய், இஸ்ரவேல் தீட்டுப்பட்டிருக்கிறது.
4“அவர்களுடைய செய்கைகள் அவர்களைத் தங்கள் பிதாவினிடத்தில் திரும்பவிடாது, ஏனெனில் வேசித்தனத்தின் ஆவி அவர்களுக்குள் இருக்கிறது, அவர்கள் எங்கள் பிதாவை அறியாதிருக்கிறார்கள். 5இஸ்ரவேலின் அகந்தை அவனுக்கு விரோதமாய் சாட்சியிடுகிறது; இஸ்ரவேலும் எப்பிராயீமும் தங்கள் அக்கிரமத்திலே இடறிவிழுகிறார்கள்; யூதாவும் அவர்களோடே இடறிவிழுகிறது. 6தங்கள் ஆட்டுமந்தைகளோடும் மாட்டுமந்தைகளோடும் அவர்கள் எங்கள் பிதாவைத் தேடப் போவார்கள், ஆனாலும் அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களைவிட்டு விலகிப்போனார். 7அவர்கள் எங்கள் பிதாவுக்கு விரோதமாய் உண்மையற்று நடந்துகொண்டார்கள், ஏனெனில் அவர்கள் முறைகேடான பிள்ளைகளைப் பெற்றார்கள். இப்பொழுது மாதப்பிறப்பு விழுங்கிப்போடும் அவர்களையும் அவர்களுடைய நிலங்களையும்.
8“கிபியாவிலே கொம்பை ஊதுங்கள், ராமாவிலே எக்காளத்தை ஊதுங்கள். பெத்தாவேனிலே யுத்தசத்தமிடுங்கள்; பென்யமீனே, உனக்குப் பின்னாகப் பார்! 9தண்டனையின் நாளிலே எப்பிராயீம் பாழாய்ப்போகும்; இஸ்ரவேலின் கோத்திரங்களுக்குள்ளே நிச்சயமானதை நான் அறிவிக்கிறேன். 10யூதாவின் பிரபுக்கள் எல்லைக்கல்லை நகர்த்துகிறவர்களைப்போல் ஆனார்கள்; அவர்கள்மேல் என் கோபத்தை தண்ணீரைப்போல் ஊற்றுவேன். 11எப்பிராயீம் ஒடுக்கப்பட்டு, நியாயத்தீர்ப்பிலே நசுக்கப்பட்டான், ஏனெனில் அவன் வீணான விக்கிரகங்களைப் பின்பற்றத் தீர்மானமாயிருந்தான். 12ஆகையால் நான் எப்பிராயீமுக்குப் பொட்டுப்பூச்சியைப்போல் இருக்கிறேன், யூதாவின் குடும்பத்துக்கு உளுத்தலைப்போலவும் இருக்கிறேன்.
13“எப்பிராயீம் தன் சொந்த வியாதியைக் கண்டான், யூதா தன் திறந்த புண்ணைக் கண்டான்; அப்பொழுது எப்பிராயீம் அசீரியாவுக்கு ஓடி, அதன் மகா ராஜாவை வேண்டிக்கொண்டான். ஆனாலும் அந்த ராஜா உங்களைக் குணமாக்கவும், உங்கள் சீழ்பிடித்த காயத்தைச் சொஸ்தமாக்கவும் மாட்டான். 14ஏனெனில் நான் எப்பிராயீமுக்குச் சிங்கத்தைப்போல் இருப்பேன், யூதாவின் குடும்பத்துக்குப் பாலசிங்கத்தைப்போல் இருப்பேன். நான், நானே பீறிப்போட்டு விலகிப்போவேன்; நான் தூக்கிக்கொண்டுபோவேன், ஒருவரும் தப்புவிக்கமாட்டார்கள். 15நான் திரும்பவும் என் ஸ்தானத்துக்குப் போவேன், அவர்கள் தங்கள் குற்றத்தை உணர்ந்து என் முகத்தைத் தேடும்வரைக்கும்; தங்கள் நெருக்கத்திலே அவர்கள் என்னை ஆவலோடே தேடுவார்கள்.”