7 1 பின்பு எங்கள் பிதா நோவாவை நோக்கி: "நீயும் உன் குடும்பத்தார் அனைவரும் பேழைக்குள் வாருங்கள்; இந்தத் தலைமுறையில் எனக்கு முன்பாக நீ நீதிமானாயிருக்கிறதை நான் கண்டேன். 2 சுத்தமான சகல மிருகங்களிலும் ஏழேழு ஜோடிகளையும், ஆணும் அதின் பெட்டையுமாக, சுத்தமல்லாத மிருகங்களில் ஒரு ஜோடியையும், ஆணும் அதின் பெட்டையுமாக உன்னோடே கூட்டிக்கொள். 3 ஆகாயத்துப் பறவைகளிலும் ஏழேழு ஜோடிகளை, ஆணும் பெண்ணுமாக, பூமியனைத்தின்மேலும் அவைகளின் வித்தை உயிரோடே காக்கும்படி கூட்டிக்கொள். 4 ஏனெனில் இன்னும் ஏழு நாட்களுக்குப் பின்பு, நான் நாற்பது பகலும் நாற்பது இரவும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான் உண்டாக்கின உயிருள்ள யாவையும் தரையின்மேல் இராதபடிக்கு அழித்துப்போடுவேன்" என்றார்.
5 எங்கள் பிதா தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நோவா செய்தான்.
6 பூமியின்மேல் ஜலப்பிரளயம் வந்தபோது, நோவா அறுநூறு வயதுள்ளவனாயிருந்தான். 7 நோவா ஜலப்பிரளயத்தின் தண்ணீருக்குத் தப்பும்படி, தன் குமாரரோடும், தன் மனைவியோடும், தன் குமாரரின் மனைவிகளோடும் பேழைக்குள் பிரவேசித்தான். 8 சுத்தமான மிருகங்களிலும், சுத்தமல்லாத மிருகங்களிலும், பறவைகளிலும், தரையின்மேல் ஊரும் எல்லாவற்றிலும், 9 எங்கள் பிதா நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாக இரண்டிரண்டாய் நோவாவினிடத்தில் பேழைக்குள் வந்தன. 10 ஏழு நாட்களுக்குப் பின்பு, ஜலப்பிரளயத்தின் தண்ணீர் பூமியின்மேல் வந்தது. 11 நோவாவின் ஆயுசின் அறுநூறாம் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன, வானத்தின் மதகுகளும் திறவுண்டன. 12 நாற்பது பகலும் நாற்பது இரவும் பூமியின்மேல் மழை பெய்தது.
13 அந்நாளிலேதானே நோவாவும், அவன் குமாரராகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களும், நோவாவின் மனைவியும், அவன் குமாரரின் மூன்று மனைவிகளும் பேழைக்குள் பிரவேசித்தார்கள். 14 அவர்களும், தங்கள் தங்கள் ஜாதியின்படி சகல காட்டுமிருகங்களும், தங்கள் தங்கள் ஜாதியின்படி சகல நாட்டுமிருகங்களும், தங்கள் தங்கள் ஜாதியின்படி பூமியின்மேல் ஊரும் சகல பிராணிகளும், தங்கள் தங்கள் ஜாதியின்படி சகல பறவைகளும், சிறகுள்ள யாவையும் பிரவேசித்தன. 15 ஜீவசுவாசமுள்ள மாம்சமான யாவும் இரண்டிரண்டாய் நோவாவினிடத்தில் பேழைக்குள் வந்தன. 16 எங்கள் பிதா அவனுக்குக் கட்டளையிட்டபடியே, சகல மாம்சத்திலுமுள்ள ஆணும் பெண்ணும் பிரவேசித்தன. பின்பு எங்கள் பிதா அவனை உள்ளே அடைத்தார். 17 பூமியின்மேல் நாற்பது நாள் ஜலப்பிரளயம் நிலைத்திருந்தது; தண்ணீர் பெருகி, பேழையை மேலே தூக்கி, அதைத் தரையிலிருந்து உயர எழும்பப்பண்ணிற்று. 18 தண்ணீர் பூமியின்மேல் மிகவும் பலங்கொண்டு பெருகிற்று; பேழை தண்ணீரின்மேல் மிதந்து சென்றது. 19 தண்ணீர் பூமியின்மேல் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகி, வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன. 20 தண்ணீர் மலைகளுக்கு மேலாக ஏறக்குறைய இருபத்திரண்டு அடி உயரம் பெருகி, அவைகளை மூடிற்று. 21 பூமியின்மேல் நடமாடின சகல ஜீவன்களும் மடிந்தன: பறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் திரளாய் ஊரும் சகல பிராணிகளும், சகல மனுஷரும் மடிந்தனர். 22 வெட்டாந்தரையிலிருந்த யாவற்றிலும், நாசியில் ஜீவசுவாசமுள்ள யாவும் மரித்தன. 23 எங்கள் பிதா தரையின்மேலிருந்த உயிருள்ள யாவையும், மனுஷர் முதல் மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள்வரையிலும் அழித்துப்போட்டார்; அவைகள் பூமியிலிருந்து அழிக்கப்பட்டன; நோவாவும் அவனோடே பேழையில் இருந்தவர்களும் மாத்திரம் மீந்திருந்தார்கள். 24 தண்ணீர் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகுதியாயிருந்தது.