ஏசாவின் வம்சம்
36 1 ஏசாவின் (அதாவது ஏதோமின்) வம்ச வரலாறு இதுவே. 2 ஏசா கானானின் குமாரத்திகளிலிருந்து தன் மனைவிகளைச் சேர்த்துக்கொண்டான்: ஏத்தியனாகிய ஏலோனின் மகள் ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் மகளான ஆனாவின் மகள் அகோலிபாமாளையும், 3 இஸ்மவேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய பஸ்மாத்தையும் அவன் மணந்தான். 4 ஆதாள் ஏசாவுக்கு எலிப்பாசைப் பெற்றாள், பஸ்மாத் ரெகுவேலைப் பெற்றாள், 5 அகோலிபாமாள் எயூஷையும், யாலாமையும், கோராகையும் பெற்றாள். இவர்களே கானான் தேசத்தில் ஏசாவுக்குப் பிறந்த குமாரர். 6 பின்பு ஏசா தன் மனைவிகளையும், தன் குமாரரையும், தன் குமாரத்திகளையும், தன் வீட்டார் அனைவரையும், தன் மிருகஜீவன்களையும், தன் மற்ற எல்லா மிருகங்களையும், தான் கானான் தேசத்தில் சம்பாதித்த சகல ஆஸ்திகளையும் கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபுக்குச் சேயமையான ஒரு தேசத்துக்குப் போனான். 7 அவர்களுடைய ஆஸ்திகள் மிகுதியாயிருந்ததால் அவர்கள் ஒன்றாய்க் குடியிருக்கக்கூடாதிருந்தது; அவர்களுடைய மிருகஜீவன்களின் நிமித்தம் அவர்கள் தங்கியிருந்த தேசம் இருவரையும் தாங்கமுடியாதிருந்தது. 8 ஆகையால் ஏசா சேயீர் மலைநாட்டில் குடியேறினான். (ஏசாதான் ஏதோம்.)
9 சேயீர் மலைநாட்டிலுள்ள ஏதோமியரின் தகப்பனாகிய ஏசாவின் வம்ச வரலாறு இதுவே. 10 ஏசாவின் குமாரரின் நாமங்கள் இவைகளே: ஏசாவின் மனைவியாகிய ஆதாளின் குமாரன் எலிப்பாஸ், ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் குமாரன் ரெகுவேல். 11 எலிப்பாசின் குமாரர் தேமான், ஓமார், சேப்போ, கத்தாம், கேனாஸ் என்பவர்கள். 12 திம்னாள் என்பவள் ஏசாவின் குமாரனாகிய எலிப்பாசுக்கு மறுமனையாட்டியாயிருந்து, அவனுக்கு அமலேக்கைப் பெற்றாள். இவர்களே ஏசாவின் மனைவியாகிய ஆதாளின் குமாரர். 13 ரெகுவேலின் குமாரர் இவர்களே: நாகாத், சேரா, சம்மா, மீசா என்பவர்கள். இவர்களே ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் குமாரர். 14 சிபியோனின் மகளான ஆனாவின் மகளும் ஏசாவின் மனைவியுமாகிய அகோலிபாமாளின் குமாரர் இவர்களே: அவள் ஏசாவுக்கு எயூஷையும், யாலாமையும், கோராகையும் பெற்றாள்.
15 ஏசாவின் குமாரரில் பிரபுக்களானவர்கள் இவர்களே. ஏசாவின் மூத்த குமாரனாகிய எலிப்பாசின் குமாரர்: பிரபு தேமான், பிரபு ஓமார், பிரபு சேப்போ, பிரபு கேனாஸ், 16 பிரபு கோராகு, பிரபு கத்தாம், பிரபு அமலேக். இவர்களே ஏதோம் தேசத்தில் எலிப்பாசிலிருந்து வந்த பிரபுக்கள்; இவர்களே ஆதாளின் குமாரர். 17 ஏசாவின் குமாரனாகிய ரெகுவேலின் குமாரர் இவர்களே: பிரபு நாகாத், பிரபு சேரா, பிரபு சம்மா, பிரபு மீசா. இவர்களே ஏதோம் தேசத்தில் ரெகுவேலிலிருந்து வந்த பிரபுக்கள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் குமாரர். 18 ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் குமாரர் இவர்களே: பிரபு எயூஷ், பிரபு யாலாம், பிரபு கோராகு. இவர்களே ஆனாவின் மகளும் ஏசாவின் மனைவியுமாகிய அகோலிபாமாளிலிருந்து வந்த பிரபுக்கள். 19 இவர்களே ஏசாவின் (அதாவது ஏதோமின்) குமாரர், இவர்களே அவர்களுடைய பிரபுக்கள்.
20 அந்தத் தேசத்தில் குடியிருந்த ஓரியனாகிய சேயீரின் குமாரர் இவர்களே: லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, 21 திஷோன், ஏசேர், திஷான். இவர்களே ஏதோம் தேசத்தில் சேயீரின் குமாரராகிய ஓரியரின் பிரபுக்கள். 22 லோத்தானின் குமாரர் ஓரி, ஏமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள். 23 சோபாலின் குமாரர் இவர்களே: அல்வான், மானகாத், ஏபால், சேப்போ, ஓனாம் என்பவர்கள். 24 சிபியோனின் குமாரர் இவர்களே: அயா, ஆனா என்பவர்கள். தன் தகப்பனாகிய சிபியோனின் கழுதைகளை மேய்த்துக்கொண்டிருக்கும்போது வனாந்தரத்தில் வெந்நீரூற்றுகளைக் கண்டுபிடித்தவன் இந்த ஆனாதான். 25 ஆனாவின் பிள்ளைகள் இவர்களே: திஷோன், ஆனாவின் மகள் அகோலிபாமாள் என்பவர்கள். 26 திஷோனின் குமாரர் இவர்களே: எம்தான், எஸ்பான், இத்தரான், கேரான் என்பவர்கள். 27 ஏசேரின் குமாரர் இவர்களே: பில்கான், சகவான், ஆக்கான் என்பவர்கள். 28 திஷானின் குமாரர் இவர்களே: ஊத்ஸ், ஆரான் என்பவர்கள். 29 ஓரியரின் பிரபுக்கள் இவர்களே: பிரபு லோத்தான், பிரபு சோபால், பிரபு சிபியோன், பிரபு ஆனா, 30 பிரபு திஷோன், பிரபு ஏசேர், பிரபு திஷான். இவர்களே சேயீர் தேசத்தில் தங்கள் வம்சங்களின்படி இருந்த ஓரியரின் பிரபுக்கள்.
இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு முன் ஆண்ட ராஜாக்கள்
31 இஸ்ரவேல் புத்திரர்மேல் ஒரு ராஜாவும் ஆளுகைசெய்யும் முன்பே ஏதோம் தேசத்தில் ஆண்ட ராஜாக்கள் இவர்களே: 32 பேயோரின் குமாரனாகிய பேலா ஏதோமில் ஆண்டான்; அவனுடைய பட்டணத்தின் பேர் தின்காபா. 33 பேலா மரித்தபின், போஸ்றா ஊரானாகிய சேராவின் குமாரன் யோபாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 34 யோபாப் மரித்தபின், தேமானியரின் தேசத்தானாகிய ஊஷாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 35 ஊஷாம் மரித்தபின், மோவாபின் நாட்டில் மீதியானியரை முறியடித்த பேதாத்தின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்; அவனுடைய பட்டணத்தின் பேர் ஆவீத். 36 ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 37 சம்லா மரித்தபின், ஐப்பிராத்து நதியருகேயுள்ள ரெகொபோத் ஊரானாகிய சவுல் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 38 சவுல் மரித்தபின், அக்போரின் குமாரன் பாகால்கானான் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 39 அக்போரின் குமாரனாகிய பாகால்கானான் மரித்தபின், ஆதார் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்; அவனுடைய பட்டணத்தின் பேர் பாகூ, அவனுடைய மனைவியின் பேர் மெகேதபேல்; இவள் மேசகாபின் மகளாகிய மத்ரேத்தின் மகள்.
40 ஏசாவிலிருந்து வந்த பிரபுக்களின் நாமங்கள், அவர்களுடைய வம்சங்களின்படியும் இடங்களின்படியும் பேர்பேராக இவைகளே: பிரபு திம்னாள், பிரபு அல்வா, பிரபு எத்தேத், 41 பிரபு அகோலிபாமாள், பிரபு ஏலா, பிரபு பினோன், 42 பிரபு கேனாஸ், பிரபு தேமான், பிரபு மிப்சார், 43 பிரபு மக்தியேல், பிரபு ஈராம். இவர்களே தாங்கள் சுதந்தரித்த தேசத்தில் தங்கள் குடியிருப்புகளின்படி இருந்த ஏதோமின் பிரபுக்கள். ஏதோமியரின் தகப்பனாகிய ஏசா இவன்தான்.