ஈசாக்குக்கு வாக்குத்தத்தம் புதுப்பிக்கப்படுதல்
26 1 ஆபிரகாமின் நாட்களில் உண்டான முந்தின பஞ்சத்தைத் தவிர, தேசத்தில் வேறொரு பஞ்சம் உண்டாயிற்று. ஆகையால் ஈசாக்கு கேராருக்குப் பெலிஸ்தரின் ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்திற்குப் போனான்.
2 எங்கள் பிதா அவனுக்குத் தரிசனமாகி, “எகிப்திற்குப் போகாதே; நான் உனக்குச் சொல்லும் தேசத்தில் குடியிரு.” என்றார். 3 இந்தத் தேசத்தில் தங்கியிரு; நான் உன்னோடே இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன்; இந்தத் தேசங்கள் யாவையும் உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்; உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன். 4 நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, இந்தத் தேசங்கள் யாவையும் உன் சந்ததிக்குத் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்; 5 ஏனெனில், ஆபிரகாம் என் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, என் காவலையும், என் கற்பனைகளையும், என் கட்டளைகளையும், என் நியாயப்பிரமாணங்களையும் கைக்கொண்டான்.
6 அப்படியே ஈசாக்கு கேராரில் குடியிருந்தான். 7 அவ்விடத்து மனிதர் அவனுடைய மனைவியைக் குறித்து விசாரித்தபோது, அவன், “இவள் என் சகோதரி” என்றான்; “என் மனைவி” என்று சொல்ல அவன் பயந்தான்; ஏனெனில், “ரெபெக்காள் அழகுள்ளவளாய் இருக்கிறபடியால், அவளினிமித்தம் இவ்விடத்து மனிதர் என்னைக் கொன்றுபோடுவார்கள்” என்று நினைத்தான். 8 ஈசாக்கு அங்கே அநேக நாள் தங்கியிருந்தபின், பெலிஸ்தரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஒரு பலகணி வழியாய்ப் பார்த்து, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளை அணைத்துக் கொஞ்சுகிறதைக் கண்டான். 9 அப்பொழுது அபிமெலேக்கு ஈசாக்கை அழைப்பித்து, “இவள் நிச்சயமாய் உன் மனைவியே! ‘இவள் என் சகோதரி’ என்று நீ எப்படிச் சொன்னாய்?” என்றான். அதற்கு ஈசாக்கு அவனை நோக்கி, “அவளினிமித்தம் நான் சாகநேரிடும் என்று நினைத்தேன்” என்றான்.
10 அப்பொழுது அபிமெலேக்கு, “நீ எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன? ஜனங்களில் ஒருவன் சுலபமாய் உன் மனைவியோடே சயனித்திருக்கலாமே; அப்பொழுது எங்கள்மேல் குற்றம் சுமத்தியிருப்பாயே” என்றான். 11 பின்பு அபிமெலேக்கு எல்லா ஜனங்களையும் நோக்கி, “இந்த மனிதனையாவது இவன் மனைவியையாவது தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான்” என்று கட்டளையிட்டான்.
12 ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைத்து, அந்த வருடத்திலே நூறுமடங்கு பலனை அறுத்தான்; எங்கள் பிதா அவனை ஆசீர்வதித்தார். 13 அந்த மனிதன் செல்வந்தனாகி, மிகுந்த ஐசுவரியவானாகுமட்டும் மேன்மேலும் விருத்தியடைந்தான். 14 அவனுக்கு ஆட்டுமந்தைகளும், மாட்டுமந்தைகளும், அநேக வேலைக்காரரும் இருந்தார்கள்; அதினால் பெலிஸ்தர் அவன்மேல் பொறாமைகொண்டார்கள். 15 அவனுடைய தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய தகப்பனுடைய வேலைக்காரர் வெட்டியிருந்த கிணறுகளையெல்லாம் பெலிஸ்தர் தூர்த்து, மண்ணினால் நிரப்பியிருந்தார்கள். 16 அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி, “நீ எங்களைப்பார்க்கிலும் மிகவும் பலத்தவனானபடியால், எங்களைவிட்டுப் போய்விடு” என்றான்.
17 அப்படியே ஈசாக்கு அவ்விடத்தைவிட்டுப் போய், கேரார் பள்ளத்தாக்கிலே கூடாரம்போட்டு, அங்கே குடியிருந்தான். 18 தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டப்பட்டு, ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டிருந்த கிணறுகளை ஈசாக்கு திரும்பத் திறந்து, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான். 19 ஈசாக்கின் வேலைக்காரர் அந்தப் பள்ளத்தாக்கிலே வெட்டி, ஊறுகிற நீரூற்றுள்ள ஒரு கிணற்றைக் கண்டார்கள். 20 அப்பொழுது கேராரின் மேய்ப்பர் ஈசாக்கின் மேய்ப்பரோடே, “இந்தத் தண்ணீர் எங்களுடையது” என்று வாக்குவாதம்பண்ணினார்கள்; அவர்கள் தன்னோடே வழக்காடினபடியால், அவன் அந்தக் கிணற்றுக்கு ஏசேக் என்று பேரிட்டான். a a v20 ஏசேக் என்னும் பேருக்கு ‘வாக்குவாதம்’ என்று அர்த்தம். 21 பின்பு அவர்கள் வேறொரு கிணற்றை வெட்டினார்கள்; அதைக்குறித்தும் வாக்குவாதம்பண்ணினார்கள்; ஆகையால் அவன் அதற்குச் சித்னா என்று பேரிட்டான். b b v21 சித்னா என்னும் பேருக்கு ‘விரோதம்’ என்று அர்த்தம். 22 அவன் அவ்விடத்தைவிட்டுப் போய், வேறொரு கிணற்றை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; ஆகையால் அவன், “இப்பொழுது எங்கள் பிதா நமக்கு இடமுண்டாக்கினார்; இத்தேசத்தில் நாம் பலுகுவோம்” என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான். c c v22 ரெகொபோத் என்னும் பேருக்கு ‘இடம்’ அல்லது ‘விசாலமான இடங்கள்’ என்று அர்த்தம்.
23 அவ்விடத்தைவிட்டு அவன் பெயெர்செபாவுக்குப் போனான்.
24 அன்று ராத்திரியிலே எங்கள் பிதா அவனுக்குத் தரிசனமாகி, “நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் பிதா; பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் நான் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன்” என்றார்.
25 அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, எங்கள் பிதாவின் நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான்; அவ்விடத்திலே ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு கிணற்றை வெட்டினார்கள்.
26 அப்பொழுது அபிமெலேக்கு தன் ஆலோசகனாகிய அகுசாத்தையும், தன் சேனாபதியாகிய பிகோலையும் கூட்டிக்கொண்டு, கேராரிலிருந்து அவனிடத்திற்கு வந்தான். 27 ஈசாக்கு அவர்களை நோக்கி, “நீங்கள் என்னைப் பகைத்து, உங்களிடத்திலிருந்து என்னை அனுப்பிவிட்டீர்களே; பின்னை ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்?” என்றான்.
28 அதற்கு அவர்கள்: “சர்வவல்லமையுள்ள பிதா உம்மோடே இருக்கிறார் என்பதை நாங்கள் தெளிவாய்க் கண்டோம்; ஆகையால், ‘நமக்குள்ளே, அதாவது உமக்கும் எங்களுக்கும் நடுவே இப்பொழுது ஒரு ஆணை உண்டாயிருப்பதாக; உம்மோடே ஒரு உடன்படிக்கைபண்ணுவோம்’ என்று சொன்னோம்; 29 நாங்கள் உம்மைத் தொடாமல், உமக்கு நன்மையையே செய்து, உம்மைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குப் பொல்லாப்புச் செய்யாதிருப்பீராக; நீர் இப்பொழுது சர்வவல்லமையுள்ள பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்றார்கள்.
30 அப்பொழுது அவன் அவர்களுக்கு ஒரு விருந்துபண்ணினான்; அவர்கள் புசித்துக் குடித்தார்கள். 31 மறுநாள் அதிகாலமே அவர்கள் ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக்கொண்டார்கள்; பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடே போனார்கள். 32 அன்றையதினமே ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் வெட்டின கிணற்றைக்குறித்து அவனுக்கு அறிவித்து, “எங்களுக்குத் தண்ணீர் கிடைத்தது” என்றார்கள். 33 அவன் அதற்குச் சேபா என்று பேரிட்டான்; ஆகையால் அந்தப் பட்டணத்திற்கு இந்நாள்வரைக்கும் பெயெர்செபா என்று பேர். d d v33 சேபா என்பதற்கு ‘ஆணை’ என்றும், பெயெர்செபா என்பதற்கு ‘ஆணையின் கிணறு’ என்றும் அர்த்தம்.
34 ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனாகிய பேரியின் குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனாகிய ஏலோனின் குமாரத்தியாகிய பஸ்மத்தையும் விவாகம்பண்ணினான். 35 இவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனத்துக்கமாய் இருந்தார்கள்.