மீண்டும் பலிபீடத்தண்டை
13 1 ஆபிராம் எகிப்திலிருந்து நெகேபுக்குப் புறப்பட்டுப் போனான்; அவனும் அவன் மனைவியும் அவனுக்கு உண்டான யாவும், லோத்தும் அவனோடேகூடப் போனார்கள். 2 ஆபிராம் ஆடுமாடுகளிலும், வெள்ளியிலும், பொன்னிலும் மிகவும் ஐசுவரியவானாயிருந்தான். 3 அவன் நெகேபிலிருந்து பயணம் செய்து, பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவே தன் கூடாரம் முன்பு இருந்த இடமாகிய பெத்தேல்வரைக்கும் கட்டம் கட்டமாகப் போனான், 4 அங்கே அவன் முதன்முதலில் ஒரு பலிபீடத்தைக் கட்டியிருந்தான். அங்கே ஆபிராம் எங்கள் பிதாவின் நாமத்தைத் தொழுதுகொண்டான். 5 ஆபிராமோடேகூடப் பயணம் செய்த லோத்துக்கும் ஆடுகளும் மாடுகளும் கூடாரங்களும் இருந்தன. 6 ஆனால் அவர்கள் ஒன்றாய் வாழுகிறதற்கு அந்த நிலம் போதவில்லை; ஏனெனில் அவர்களுடைய ஆஸ்திகள் மிகுதியாயிருந்ததால் அவர்கள் ஒன்றாய்த் தங்கியிருக்கக் கூடாதிருந்தது. 7 ஆபிராமுடைய மந்தை மேய்ப்பர்களுக்கும் லோத்துடைய மந்தை மேய்ப்பர்களுக்கும் நடுவே வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்தில் கானானியரும் பெரிசியரும் அந்த நிலத்தில் குடியிருந்தார்கள். 8 அப்பொழுது ஆபிராம் லோத்தை நோக்கி, “தயவுசெய்து, எனக்கும் உனக்கும், என் மேய்ப்பர்களுக்கும் உன் மேய்ப்பர்களுக்கும் நடுவே வாக்குவாதம் வேண்டாம்; நாம் ஒரே குடும்பத்தார் அல்லவா” என்றான். 9 நிலம் முழுவதும் உனக்கு முன்பாக இருக்கிறதல்லவா? தயவுசெய்து, நாம் பிரிந்து போவோம். நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போவேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போவேன்.
10 லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, யோர்தானின் சமபூமி முழுவதும் சோவார்வரைக்கும் எங்கும் நன்றாய்த் தண்ணீர்ப் பாய்ச்சலுள்ளதாய், எங்கள் பிதாவின் தோட்டத்தைப்போலவும், எகிப்து தேசத்தைப்போலவும் இருக்கக் கண்டான். (இது அவர் சோதோமையும் கொமோராவையும் அழிப்பதற்கு முன்பாய் இருந்தது.) 11 அப்பொழுது லோத்து யோர்தானின் சமபூமி முழுவதையும் தனக்குத் தெரிந்துகொண்டு, கிழக்கே பயணமாய்ப் போனான்; அவ்விருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தார்கள். 12 ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்; லோத்து சமபூமியின் பட்டணங்களில் குடியிருந்து, சோதோம்வரைக்கும் தன் கூடாரங்களைப் போட்டான். 13 சோதோம் ஊரார் பொல்லாதவர்களாயும், எங்கள் பிதாவுக்கு விரோதமாய் மிகவும் பாவஞ்செய்கிறவர்களாயும் இருந்தார்கள்.
14 லோத்து அவனை விட்டுப் பிரிந்தபின்பு, எங்கள் பிதா ஆபிராமை நோக்கி, “நீ இருக்கிற இடத்திலிருந்து உன் கண்களை ஏறெடுத்து, வடக்கேயும் தெற்கேயும், கிழக்கேயும் மேற்கேயும் பார். 15 நீ பார்க்கிற இந்த நிலம் முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் தருவேன். 16 உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போல் ஆக்குவேன்; பூமியின் தூளை ஒருவனால் எண்ணிமுடியுமானால், உன் சந்ததியையும் எண்ணிமுடியும். 17 நீ எழுந்து, அந்த நிலத்தின் நீளமும் அகலமும் எங்கும் நடந்து திரி; ஏனெனில் அதை நான் உனக்குத் தருகிறேன்” என்றார்.
18 அப்பொழுது ஆபிராம் தன் கூடாரங்களைப் பெயர்த்து, எபிரோனிலுள்ள மம்ரே என்னும் கர்வாலி மரங்களண்டையில் போய்க் குடியிருந்தான்; அங்கே எங்கள் பிதாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். a a v18 மம்ரே என்பது எபிரோனுக்கு அருகிலிருந்த ஒரு பகுதி; ஆபிராம் பின்பு அங்கே தங்கியிருந்தான்.