எங்கள் பிதாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டுதல்
5 1அப்பொழுது ஆகாய் என்னும் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலும் இருந்த யூதர்களுக்கு, இஸ்ரவேலின் தேவனாகிய எங்கள் பிதாவின் நாமத்தினாலே, அவர்கள்மேல் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். 2அப்பொழுது சலாத்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமில் எங்கள் பிதாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டத் தொடங்கினார்கள்; எங்கள் பிதாவின் தீர்க்கதரிசிகள் அவர்களோடிருந்து அவர்களுக்கு ஆதரவாயிருந்தார்கள்.
3அப்பொழுது நதிக்கு அப்புறத்திலிருந்த தேசாதிபதியாகிய தத்னாயும், சேத்தார்பொஸ்னாயும், அவர்களுடைய கூட்டாளிகளும் வந்து: இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்தக் கட்டிடத்தை முடிக்கவும் உங்களுக்கு உத்தரவு கொடுத்தவர் யார் என்று கேட்டார்கள். 4அன்றியும் அவர்கள்: இந்தக் கட்டிடத்தைக் கட்டுகிற மனிதரின் பேர்கள் என்னென்ன என்றும் கேட்டார்கள். 5ஆனாலும் அவர்களுடைய பிதாவின் கண் யூத மூப்பர்கள்மேல் நோக்கமாயிருந்தது; ஆகையால் இந்தக் காரியம் தரியுவுக்கு எட்டி, அதைக்குறித்து எழுத்துமூலமாய் மறுஉத்தரவு வருமட்டும் ஒருவரும் அவர்களைத் தடைசெய்யவில்லை.
தரியு ராஜாவுக்கு எழுதப்பட்ட நிருபம்
6நதிக்கு அப்புறத்துத் தேசாதிபதியாகிய தத்னாயும், சேத்தார்பொஸ்னாயும், நதிக்கு அப்புறத்திலிருந்த அவனுடைய உடன்உத்தியோகஸ்தரும் தரியு ராஜாவுக்கு அனுப்பின நிருபத்தின் நகல்: 7அவர்கள் அவனுக்கு அனுப்பின மறுஉத்தரவின் விவரமாவது: தரியு ராஜாவுக்குச் சம்பூரண சமாதானம் உண்டாவதாக.
8ராஜாவுக்குத் தெரியவேண்டியது என்னவென்றால்: நாங்கள் யூதாநாட்டிலிருக்கிற மகா தேவனுடைய ஆலயத்துக்குப் போனோம்; அது பெரிய கற்களால் கட்டப்படுகிறது; சுவர்களில் மரங்கள் பதிக்கப்படுகிறது; இந்த வேலை ஜாக்கிரதையாய் நடந்து, அவர்களுடைய கைகளில் வாய்க்கிறது. 9அப்பொழுது நாங்கள் அந்த மூப்பர்களை நோக்கி: இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்தக் கட்டிடத்தை முடிக்கவும் உங்களுக்கு உத்தரவு கொடுத்தவர் யார் என்று கேட்டோம். 10உமக்கு அறிவிக்கும்படிக்கும், அவர்களுடைய தலைவர்களின் பேர்களை எழுதிவைக்கும்படிக்கும், அவர்களுடைய பேர்களையும் கேட்டோம். 11அதற்கு அவர்கள் எங்களுக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் வானத்துக்கும் பூமிக்கும் தேவனாயிருக்கிற எங்கள் பிதாவின் ஊழியக்காரர்; அநேக வருஷங்களுக்கு முன்னே இஸ்ரவேலின் மகா ராஜா ஒருவர் கட்டி முடித்திருந்த இந்த ஆலயத்தை நாங்கள் திரும்பக் கட்டுகிறோம். 12ஆனாலும் எங்கள் பிதாக்கள் வானத்தின் தேவனாகிய எங்கள் பிதாவுக்குக் கோபமூட்டினபடியால், அவர் அவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய கல்தேயனான நேபுகாத்நேச்சாரின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் இந்த ஆலயத்தை அழித்து, ஜனங்களைப் பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டுபோனான். 13ஆகிலும் பாபிலோன் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்தில், இந்த எங்கள் பிதாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டவேண்டும் என்று கோரேஸ் ராஜா கட்டளையிட்டான். 14அன்றியும் நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்த ஆலயத்திலிருந்து எடுத்து, பாபிலோன் கோவிலுக்குக் கொண்டுபோயிருந்த எங்கள் பிதாவின் ஆலயத்துக்குரிய பொன் வெள்ளிப் பாத்திரங்களைக் கோரேஸ் ராஜா பாபிலோன் கோவிலிலிருந்து எடுப்பித்து, தான் தேசாதிபதியாக நியமித்த சேஸ்பாத்சார் என்னும் ஒருவனிடத்தில் ஒப்புவித்து, 15அவனை நோக்கி: நீ இந்தப் பாத்திரங்களை எடுத்துக்கொண்டுபோய், எருசலேமிலிருக்கிற தேவாலயத்திலே வை; தேவனுடைய ஆலயம் தன் ஸ்தானத்திலே திரும்பக் கட்டப்படக்கடவது என்று சொன்னான். 16அப்பொழுது இந்தச் சேஸ்பாத்சார் வந்து, எருசலேமிலிருக்கிற எங்கள் பிதாவின் ஆலயத்திற்கு அஸ்திபாரங்களைப் போட்டான்; அதுமுதல் இதுவரைக்கும் அது கட்டப்பட்டுவருகிறது, இன்னும் முடியவில்லை என்றார்கள்.
17இப்போதும் ராஜாவுக்குச் சம்மதியானால், எருசலேமிலிருக்கிற தேவனுடைய இந்த ஆலயத்தைத் திரும்பக் கட்டவேண்டும் என்று கோரேஸ் ராஜா கட்டளையிட்டது உண்டோ என்று, பாபிலோனிலுள்ள ராஜாவின் பொக்கிஷசாலையிலே தேடிப்பார்க்கப்படவேண்டும்; பின்பு இந்தக் காரியத்தைக்குறித்து ராஜா தமது தீர்மானத்தை எங்களுக்கு அனுப்பவேண்டும்.