சிதறடிக்கப்பட்ட முடியின் அடையாளம்
5 1“மனுபுத்திரனே, நீ கூர்மையான ஒரு பட்டயத்தை எடுத்து, சவரக்காரனுடைய கத்தியைப்போல் அதை உன் தலையின்மேலும் தாடியின்மேலும் ஓடவிட்டு, பின்பு தராசை எடுத்து அந்த முடியைப் பங்கிட்டுவிடு. 2முற்றுகையின் நாட்கள் முடியும்போது, மூன்றில் ஒரு பங்கை நகரத்தின் நடுவில் நெருப்பிலே சுட்டெரி; மூன்றில் ஒரு பங்கை எடுத்து, நகரத்தைச் சுற்றிலும் பட்டயத்தால் வெட்டு; மூன்றில் ஒரு பங்கைக் காற்றிலே தூற்று; நான் அவர்கள் பின்னாக ஒரு பட்டயத்தை உருவுவேன். 3அவைகளில் சிலவற்றை எடுத்து, உன் அங்கியின் மடிப்புகளில் கட்டிவை. 4பின்னும் இவைகளில் சிலவற்றை எடுத்து, நெருப்பிலே எறிந்து, அதிலே சுட்டெரி; அங்கிருந்து இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும் நெருப்பு பரவும்.’
5ஆண்டவராகிய பிதா சொல்லுகிறது என்னவென்றால்: இதுவே எருசலேம். நான் அதை ஜாதிகளின் நடுவில் வைத்தேன், அதைச் சுற்றிலும் தேசங்களை வைத்தேன். 6ஆனாலும் அது ஜாதிகளைவிட மிக துன்மார்க்கமாய் என் நியாயங்களுக்கு விரோதமாகவும், தன்னைச் சுற்றியிருக்கிற தேசங்களைவிட மிகுதியாய் என் கட்டளைகளுக்கு விரோதமாகவும் கலகம்பண்ணிற்று; ஏனெனில் அவர்கள் என் நியாயங்களைத் தள்ளிவிட்டு, என் கட்டளைகளின்படி நடக்கவில்லை.
7ஆகையால் ஆண்டவராகிய பிதா சொல்லுகிறது என்னவென்றால்: “உங்களைச் சுற்றியிருக்கிற ஜாதிகளைவிட நீங்கள் அதிக கலகக்காரராயிருந்து, என் கட்டளைகளின்படி நடவாமலும், என் நியாயங்களைக் கைக்கொள்ளாமலும், உங்களைச் சுற்றியிருக்கிற ஜாதிகளுடைய முறைமைகளின்படியாகிலும் செய்யாமலும் போனபடியினால், 8ஆண்டவராகிய பிதா சொல்லுகிறது என்னவென்றால்: ‘இதோ, நான், நானே உனக்கு விரோதமாயிருக்கிறேன்; ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உன் நடுவில் நியாயத்தீர்ப்புகளைச் செய்வேன். 9உன்னுடைய எல்லா அருவருப்புகளினிமித்தமும், நான் முன்னொருபோதும் செய்யாததையும், இனி ஒருபோதும் செய்யாததையும் உன் நடுவில் செய்வேன். 10ஆகையால் உன் நடுவில் தகப்பன்மார் தங்கள் பிள்ளைகளைத் தின்பார்கள், பிள்ளைகள் தங்கள் தகப்பன்மாரைத் தின்பார்கள்; உன்மேல் நியாயத்தீர்ப்புகளைச் செய்து, உன்னில் மீதியானவர்கள் அனைவரையும் எல்லாத் திசைகளிலும் காற்றுக்குத் தூற்றிப்போடுவேன்.’
11“என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன், நீ உன்னுடைய எல்லா அருவருப்புகளினாலும் வெறுக்கத்தக்க செய்கைகளினாலும் என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினபடியால், நானும் உன்னை விட்டு விலகிப்போவேன்; என் கண் ஒருவரையும் தப்பவிடாது, நான் இரங்கவுமாட்டேன் என்று ஆண்டவராகிய பிதா உரைக்கிறார். 12‘உன்னில் மூன்றில் ஒரு பங்கு உன் நடுவில் கொள்ளைநோயாலும் பஞ்சத்தாலும் மடிவார்கள்; மூன்றில் ஒரு பங்கு உன்னைச் சுற்றிலும் பட்டயத்தால் விழுவார்கள்; மூன்றில் ஒரு பங்கை நான் எல்லாத் திசைகளிலும் தூற்றி, உருவின பட்டயத்துடன் அவர்களைப் பின்தொடருவேன்.
13“அப்பொழுது என் கோபம் தீரும்; அவர்கள்மேலான என் உக்கிரத்தை ஆற்றி, ஆறுதலடைவேன். என் உக்கிரத்தை அவர்கள்மேல் தீர்த்தபின்பு, அவர்களுடைய பிதாவாகிய நான் என் வைராக்கியத்திலே பேசினேன் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
14“உன்னைச் சுற்றியிருக்கிற ஜாதிகளுக்குள்ளும், கடந்துபோகிற யாவருடைய கண்களுக்கு முன்பாகவும், நான் உன்னைப் பாழிடமாகவும் நிந்தையாகவும் ஆக்குவேன். 15நான் கோபத்திலும் உக்கிரத்திலும் கடுமையான தண்டனைகளிலும் உன்மேல் நியாயத்தீர்ப்புகளைச் செய்யும்போது, உன்னைச் சுற்றியிருக்கிற ஜாதிகளுக்கு நீ நிந்தையாகவும் பரியாசமாகவும், எச்சரிப்பாகவும் திகிலாகவும் இருப்பாய். உன் பிதாவாகிய நான் பேசினேன். 16உன்னை அழிக்கும்படி அனுப்பப்படுகிற பஞ்சத்தின் கொடிய அம்புகளை நான் உன்மேல் எய்யும்போது, உன்மேல் பஞ்சத்தை அதிகரிக்கச்செய்து, உன் அப்பம் என்னும் ஆதரவை முறித்துப்போடுவேன். 17நான் உன்மேல் பஞ்சத்தையும் காட்டு மிருகங்களையும் அனுப்புவேன்; அவைகள் உன்னைப் பிள்ளையற்றவளாக்கும்; கொள்ளைநோயும் இரத்தப்பழியும் உன் நடுவே கடந்துசெல்லும்; உன்மேல் பட்டயத்தையும் வரப்பண்ணுவேன். உன் பிதாவாகிய நான் பேசினேன்.’”