வாசியுங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள். பரிந்துரையுங்கள்.

♥ மதிப்புரைகள்

எசேக்கியேல் 44

புத்தகம்

அதிபதிக்காக ஒதுக்கப்பட்ட முத்திரையிடப்பட்ட வாசல்

அதிகாரம் 44.

பின்பு அவர் என்னைப் பரிசுத்த ஸ்தலத்தின் கிழக்குமுகமான வெளிவாசலுக்குத் திரும்பவும் அழைத்துக்கொண்டுபோனார்; அது அடைக்கப்பட்டிருந்தது. அவர் என்னை நோக்கி: “இந்த வாசல் அடைக்கப்பட்டேயிருக்கும்; இது திறக்கப்படாது, இதின் வழியாய் ஒருவனும் உட்பிரவேசிக்கவும் மாட்டான்; ஏனெனில் எங்கள் பிதா இதின் வழியாய் உட்பிரவேசித்தார்; ஆகையால் இது அடைக்கப்பட்டேயிருக்கும். அதிபதியே, அதிபதிதானே, எங்கள் பிதாவுக்கு முன்பாக அப்பம் புசிக்கும்படி அங்கே உட்காரலாம்; அவன் அந்த வாசலின் மண்டபத்தின் வழியாய் உட்பிரவேசித்து, அந்த வழியாயே திரும்பிப் புறப்படக்கடவன்.”

பின்பு அவர் என்னை வடக்கு வாசல் வழியாய் ஆலயத்தின் முகப்புக்கு அழைத்துக்கொண்டுவந்தார்; நான் பார்த்தேன், இதோ, எங்கள் பிதாவின் மகிமை அவருடைய ஆலயத்தை நிரப்பிற்று; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்தேன்.

எங்கள் பிதா என்னை நோக்கி: “மனுஷகுமாரனே, என் ஆலயத்தின் கட்டளைகளையும் அதின் நியாயங்களையும் குறித்து நான் உன்னோடே சொல்லும் யாவற்றையும் நீ கவனித்து, உன் கண்களால் பார்த்து, உன் காதுகளால் கேள்; ஆலயத்தினுள் பிரவேசிக்கிற வழியையும் பரிசுத்த ஸ்தலத்தின் புறப்பாடுகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்.

கலகக்காரராகிய இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: ஆண்டவராகிய பிதா சொல்லுகிறது என்னவென்றால்: “இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் அருவருப்புகள் யாவும் போதும்; நீங்கள் என் அப்பத்தையும் கொழுப்பையும் இரத்தத்தையும் செலுத்துகையில், இருதயத்திலும் மாம்சத்திலும் விருத்தசேதனமில்லாத அந்நியரை என் பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கும்படி உட்பிரவேசிக்கப்பண்ணி, என் ஆலயத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினீர்கள்; உங்கள் அருவருப்புகள் யாவற்றாலும் என் உடன்படிக்கையை மீறினீர்கள். நீங்கள் என் பரிசுத்த வஸ்துக்களைக் காவல்செய்யாமல், உங்களுக்குப் பதிலாக மற்றவர்களை என் பரிசுத்த ஸ்தலத்தில் காவல்காக்கிறவர்களாக வைத்தீர்கள். ஆண்டவராகிய பிதா சொல்லுகிறது என்னவென்றால்: “இஸ்ரவேல் புத்திரரின் நடுவே வாசம்பண்ணுகிற அந்நியர் எல்லாருக்குள்ளும், இருதயம் கடினமும் மாம்சத்தில் விருத்தசேதனமில்லாதவனுமான அந்நியன் ஒருவனும் என் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கலாகாது.

ஆனாலும் இஸ்ரவேலர் வழிதப்பி, தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி என்னைவிட்டு அலைந்துபோன காலத்தில் என்னைவிட்டுத் தூரமாய்ப்போன லேவியரோ, தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள். அவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்தில் ஆலயத்தின் வாசல்களைக் காவல்காக்கிறவர்களாகவும், ஆலயத்திலே பணிவிடைசெய்கிறவர்களாகவும் இருப்பார்கள்; அவர்களே ஜனத்திற்காகச் சர்வாங்கதகனபலியையும் மற்றப் பலியையும் அடித்து, அவர்களுக்குப் பணிவிடைசெய்யும்படி அவர்களுக்கு முன்பாக நிற்பார்கள். அவர்கள் தங்கள் விக்கிரகங்களுக்கு முன்பாக ஜனத்திற்குப் பணிவிடைசெய்து, இஸ்ரவேல் வம்சத்தாரை அக்கிரமத்தில் இடறப்பண்ணினபடியால், நான் அவர்களுக்கு விரோதமாய் என் கையை உயர்த்தி ஆணையிட்டேன்; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள் என்று ஆண்டவராகிய பிதா சொல்லுகிறார். அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி என்னிடத்தில் சேரவும், என் பரிசுத்த வஸ்துக்களில் ஒன்றிலும், மகா பரிசுத்தமானவைகளிலும் நெருங்கவுமாட்டார்கள்; அவர்கள் செய்த தங்கள் அருவருப்புகளின் அவமானத்தைச் சுமப்பார்கள். ஆகிலும் ஆலயத்தின் எல்லாப் பணிவிடையிலும், அதிலே செய்யப்படும் யாவற்றிலும், அவர்களை ஆலயத்தின் காவலாளர்களாக வைப்பேன்.

இஸ்ரவேலர் என்னைவிட்டு வழிதப்பிப்போன காலத்தில் என் பரிசுத்த ஸ்தலத்தின் காவலைக் காத்த சாதோக்கின் குமாரராகிய லேவியரான ஆசாரியர்களோ, எனக்குப் பணிவிடைசெய்ய என்னிடத்தில் சேர்ந்து, கொழுப்பையும் இரத்தத்தையும் எனக்குச் செலுத்தும்படி எனக்கு முன்பாக நிற்பார்கள் என்று ஆண்டவராகிய பிதா சொல்லுகிறார். “அவர்களே என் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்து, எனக்குப் பணிவிடைசெய்ய என் பந்தியண்டையில் சேர்ந்து, என் காவலைக் காப்பார்கள்.

அவர்கள் உட்பிராகாரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிக்கும்போது, சணல்நூல் வஸ்திரங்களைத் தரித்துக்கொள்ளக்கடவர்கள்; அவர்கள் உட்பிராகாரத்தின் வாசல்களிலும் ஆலயத்திலும் பணிவிடைசெய்கையில் ஆட்டுமயிர் வஸ்திரம் அவர்கள்மேல் இருக்கலாகாது. அவர்கள் தலைகளில் சணல்நூல் பாகைகளையும், இடைகளில் சணல்நூல் ஜலவஸ்திரங்களையும் தரித்துக்கொள்ளக்கடவர்கள்; வேர்வையுண்டாக்குகிற எதையும் அணிந்துகொள்ளாதிருப்பார்களாக. அவர்கள் வெளிப்பிராகாரத்தில் ஜனத்தண்டையிலே புறப்படும்போது, தாங்கள் பணிவிடைசெய்த வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளைப் பரிசுத்த அறைகளில் வைத்துவிட்டு, வேறே வஸ்திரங்களைத் தரித்துக்கொள்ளக்கடவர்கள்; தங்கள் வஸ்திரங்களால் ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணாதபடிக்கு இப்படிச் செய்யவேண்டும்.

அவர்கள் தங்கள் தலைகளைச் சிரையாமலும், மயிரை நீளமாய் வளரவிடாமலும், தங்கள் தலைமயிரைக் கத்தரித்துக்கொள்ளக்கடவர்கள். எந்த ஆசாரியனும் உட்பிராகாரத்தில் பிரவேசிக்கும்போது திராட்சரசம் குடிக்கலாகாது. அவர்கள் ஒரு விதவையையாகிலும் தள்ளிவிடப்பட்டவளையாகிலும் விவாகம்பண்ணாமல், இஸ்ரவேல் வம்சத்தாரின் சந்ததியிலுள்ள கன்னிகைகளையாவது, ஒரு ஆசாரியனுடைய விதவையையாவது விவாகம்பண்ணக்கடவர்கள். அவர்கள் பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமல்லாததற்கும் உள்ள வித்தியாசத்தை என் ஜனத்திற்குப் போதித்து, தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும் உள்ள வித்தியாசத்தை அறிவிக்கக்கடவர்கள்.

வழக்கு நடக்கும்போது அவர்கள் என் நியாயங்களின்படி நியாயந்தீர்க்கக்கடவர்கள்; அவர்கள் என் குறித்த பண்டிகைகளிலெல்லாம் என் நியாயப்பிரமாணங்களையும் என் கட்டளைகளையும் கைக்கொண்டு, என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாய் ஆசரிக்கக்கடவர்கள்.

ஒரு ஆசாரியன் செத்த மனுஷனண்டையில் போய்த் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளலாகாது; ஆனாலும் தகப்பன், தாய், குமாரன், குமாரத்தி, சகோதரன், புருஷனில்லாத சகோதரி ஆகிய இவர்களுக்காக அவன் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளலாம். அவன் சுத்திகரிக்கப்பட்டபின்பு, அவனுக்கு ஏழுநாள் எண்ணக்கடவர்கள். அவன் பரிசுத்த ஸ்தலத்திலே பணிவிடைசெய்யும்படி உட்பிராகாரமாகிய பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கிற நாளிலே, அவன் தன் பாவநிவாரணபலியைச் செலுத்தக்கடவன் என்று ஆண்டவராகிய பிதா சொல்லுகிறார்.

“அவர்களுடைய சுதந்தரம் இதுவே: நானே அவர்களுடைய சுதந்தரம்; இஸ்ரவேலில் அவர்களுக்கு ஒரு காணியாட்சியையும் கொடாதிருங்கள்; நானே அவர்களுடைய காணியாட்சி. அவர்கள் போஜனபலியையும் பாவநிவாரணபலியையும் குற்றநிவாரணபலியையும் புசிப்பார்கள்; இஸ்ரவேலில் சாபத்தீடாக்கப்பட்ட யாவும் அவர்களுடையதாயிருக்கும். சகலவித முதற்பலன்களில் முதற்கனிகள் யாவும், நீங்கள் காணிக்கையாகச் செலுத்தும் சகலவித காணிக்கைகள் யாவும் ஆசாரியர்களுடையதாயிருக்கும்; உங்கள் வீட்டின்மேல் ஆசீர்வாதம் தங்கும்படிக்கு, உங்கள் மாவின் முதற்பாகத்தை ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவீர்கள். தானாய்ச் செத்ததும், துண்டாடப்பட்டதுமான யாதொரு பறவையையாவது மிருகத்தையாவது ஆசாரியர்கள் புசிக்கலாகாது.”

A young man reading the Father's Heart Bible print edition in a coffee shop இப்போது அச்சில்

கருத்துகள்

இந்த அதிகாரம் உங்களுக்குள் எழுப்பிய எண்ணம், கேள்வி அல்லது ஒரு வார்த்தை — இங்கே பகிருங்கள். ஒவ்வொரு கருத்தும் உங்கள் பெயரைப் பங்களிப்பாளர் சுவரில் சேர்க்கிறது.

வாசிப்பது, கேட்பது, நகலெடுப்பது, பகிர்வது அனைவருக்கும் திறந்திருக்கிறது — கணக்கு தேவையில்லை. கருத்திடுவது, தனிப்படுத்துவது, உங்கள் இடத்தை நினைவில் வைப்பது இலவசக் கணக்குடன் வருகின்றன, ஒவ்வொரு கருத்தும் உங்கள் பெயரைப் பங்களிப்பாளர் சுவரில் சேர்க்கிறது.

குடும்பத்தில் இணையுங்கள் — இலவசம் →
  • இன்னும் கருத்துகள் இல்லை. உங்கள் குரலைச் சேர்க்கும் முதல் நபராக இருங்கள்.