பிதாவானவர் கோகுக்கு விரோதமாய்ப் பேசுகிறார்
38 1எங்கள் பிதாவின் வார்த்தை எனக்கு உண்டாகி வந்தது:
2மனுஷகுமாரனே, மாகோகு தேசத்தானாகிய கோகுக்கு உன் முகத்தைத் திருப்பி, மேசேக்குக்கும் தூபாலுக்கும் அதிபதியாகிய அவனுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனம் உரை. 3நீ சொல்லவேண்டியது: ஆண்டவராகிய பிதா சொல்லுகிறது என்னவென்றால்: “மேசேக்குக்கும் தூபாலுக்கும் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாயிருக்கிறேன். 4நான் உன்னைத் திருப்பி, உன் தாடைகளில் துறடுகளைப் போட்டு, உன்னையும் உன் எல்லாச் சேனையையும், குதிரைகளையும், சர்வாயுதம் தரித்த குதிரைவீரர்களையும், பரிசைகளையும் கேடகங்களையும் ஏந்தி பட்டயங்களைப் பிடித்திருக்கிற திரளான கூட்டத்தையும் புறப்படப்பண்ணுவேன். 5பெர்சியரும், எத்தியோப்பியரும், லீபியரும் அவர்களோடே இருக்கிறார்கள்; அவர்கள் எல்லாரும் பரிசைகளையும் தலைச்சீராக்களையும் தரித்திருக்கிறார்கள்; 6கோமேரும் அதின் எல்லா இராணுவங்களும், வடதிசையின் கடையாந்தரத்திலிருந்து தொகர்மா வம்சத்தாரும் அவர்களுடைய எல்லா இராணுவங்களுமாகிய அநேக ஜனங்கள் உன்னோடே இருக்கிறார்கள்.
7நீ ஆயத்தப்படு; நீயும் உன்னிடத்தில் கூடின உன் எல்லாக் கூட்டத்தாரும் ஆயத்தப்பட்டு, அவர்களுக்குக் காவலாளனாயிரு. 8அநேக நாட்களுக்குப் பின்பு நீ விசாரிக்கப்படுவாய். பிற்காலத்தில் நீ, யுத்தத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு தேசத்திற்கு விரோதமாய் வருவாய்; அந்தத் தேசத்தின் ஜனங்கள் அநேக ஜாதிகளிலிருந்து சேர்க்கப்பட்டு, நெடுநாள் பாழாய்க் கிடந்த இஸ்ரவேலின் மலைகளின்மேல் குடியேற்றப்பட்டார்கள். அவர்கள் ஜாதிகளிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டு, இப்பொழுது எல்லாரும் சுகமாய் வாசம்பண்ணுகிறார்கள். 9நீயும் உன் எல்லா இராணுவங்களும், உன்னோடிருக்கிற அநேக ஜனங்களும் புயல்போல் எழும்பி, தேசத்தை மூடும் மேகத்தைப்போல் வருவீர்கள்.”
10ஆண்டவராகிய பிதா சொல்லுகிறது என்னவென்றால்: “அந்நாளிலே உன் மனதில் எண்ணங்கள் எழும்பும், நீ ஒரு தீய தந்திரத்தை யோசிப்பாய். 11நீ சொல்வது: ‘மதிலில்லாத கிராமங்களுள்ள தேசத்துக்கு விரோதமாய்ப் போவேன்; மதில்களும் தாழ்ப்பாள்களும் கதவுகளும் இல்லாமல் சுகமாய் வாசம்பண்ணுகிற சமாதானமுள்ள ஜனத்தின்மேல் தாக்குதல் நடத்துவேன்’ என்பாய், 12மறுபடியும் குடியேற்றப்பட்ட பாழ்நிலங்களின்மேலும், ஆடுமாடுகளையும் பொருள்களையும் சம்பாதித்து, பூமியின் மத்தியில் வாசம்பண்ணுகிறவர்களாய் ஜாதிகளிலிருந்து சேர்க்கப்பட்ட ஜனத்தின்மேலும், கொள்ளையிடவும் சூறையாடவும் உன் கையைத் திருப்பும்படிக்கே இப்படிச் செய்வாய். 13சேபாவும், தேதானும், தர்ஷீசின் வர்த்தகரும் அதின் பாலசிங்கங்கள் யாவும் உன்னை நோக்கி: ‘நீ கொள்ளையிட வந்தாயோ? சூறையாடவும், வெள்ளியையும் பொன்னையும் எடுத்துக்கொள்ளவும், ஆடுமாடுகளையும் பொருள்களையும் பிடிக்கவும், மகா கொள்ளையைச் சூறையாடவும் உன் கூட்டத்தைச் சேர்த்தாயோ?’ என்று உன்னைக் கேட்பார்கள்.”
14ஆகையால், மனுஷகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, கோகை நோக்கிச் சொல்லவேண்டியது: ஆண்டவராகிய பிதா சொல்லுகிறது என்னவென்றால்: “என் ஜனமாகிய இஸ்ரவேலர் சுகமாய் வாசம்பண்ணும் அந்நாளிலே நீ அதை அறியாமலிருப்பாயோ? 15நீயும் உன்னோடிருக்கிற அநேக ஜனங்களும், குதிரைகளின்மேல் ஏறுகிற திரளான கூட்டமும், பலத்த சேனையுமாய், வடதிசையின் கடையாந்தரத்திலுள்ள உன் இடத்திலிருந்து வருவாய். 16தேசத்தை மூடும் மேகத்தைப்போல் நீ என் ஜனமாகிய இஸ்ரவேலருக்கு விரோதமாய் வருவாய். கோகே, ஜாதிகள் கண்களுக்கு முன்பாக நான் உன்னிலே என்னைப் பரிசுத்தர் என்று விளங்கப்பண்ணும்போது, அவர்கள் என்னை அறியும்படிக்கு, கடைசி நாட்களில் உன்னை என் தேசத்துக்கு விரோதமாய் வரப்பண்ணுவேன்.”
17ஆண்டவராகிய பிதா சொல்லுகிறது என்னவென்றால்: நான் உன்னை அவர்களுக்கு விரோதமாய் வரப்பண்ணுவேன் என்று அந்நாட்களில் அநேக வருஷங்களாய்த் தீர்க்கதரிசனம் சொன்ன என் ஊழியக்காரராகிய இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளைக்கொண்டு பூர்வகாலத்தில் நான் குறித்துச் சொன்னவன் நீதானல்லவா? 18கோகு இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாய் வரும் அந்நாளிலே, என் உக்கிரகோபம் என் நாசியில் மூளும் என்று ஆண்டவராகிய பிதா சொல்லுகிறார். 19“என் எரிச்சலினாலும் என் கோபாக்கினியினாலும் நான் சொல்லுகிறேன்: அந்நாளிலே இஸ்ரவேல் தேசத்தில் மகா பூமியதிர்ச்சி உண்டாகும். 20சமுத்திரத்தின் மீன்களும், ஆகாயத்துப் பறவைகளும், வெளியின் மிருகங்களும், தரையில் ஊரும் சகல பிராணிகளும், பூமியிலுள்ள எல்லா மனுஷரும் என் சமுகத்தில் அதிரும். மலைகள் தள்ளுண்டுபோகும், கடிசாரங்கள் இடிந்துவிழும், சகல மதில்களும் தரையிலே விழும்.” 21என் எல்லா மலைகளிலும் அவனுக்கு விரோதமாய் நான் பட்டயத்தை வரவழைப்பேன் என்று ஆண்டவராகிய பிதா சொல்லுகிறார்; அவனவன் பட்டயம் அவனவன் சகோதரனுக்கு விரோதமாய்த் திரும்பும். 22“நான் கொள்ளைநோயினாலும் இரத்தத்தினாலும் அவனை நியாயந்தீர்ப்பேன்; அவன்மேலும், அவன் இராணுவங்கள்மேலும், அவனோடிருக்கிற அநேக ஜனங்கள்மேலும், பெருமழையையும், பெரிய கல்மழையையும், அக்கினியையும், கந்தகத்தையும் பொழியப்பண்ணுவேன். 23இப்படி நான் என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி, அநேக ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக என்னை அறியப்பண்ணுவேன். அப்பொழுது நான் பிதா என்று அவர்கள் அறிந்துகொள்வார்கள்.”