பிதா ஒரு காவற்காரனை ஏற்படுத்துகிறார்
33 1எங்கள் பிதாவின் வார்த்தை எனக்கு உண்டாயிற்று:
2“மனுஷகுமாரனே, உன் ஜனங்களோடே பேசி அவர்களுக்குச் சொல்: நான் ஒரு தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணும்போது, அத்தேசத்து ஜனங்கள் தங்களில் ஒருவனைத் தெரிந்துகொண்டு அவனைத் தங்களுக்குக் காவற்காரனாக ஏற்படுத்தினால், 3அவன் தேசத்தின்மேல் பட்டயம் வருகிறதைக் கண்டு, ஜனங்களை எச்சரிக்கும்படி எக்காளம் ஊதி, 4எக்காளச் சத்தத்தைக் கேட்டும் எச்சரிப்பைப் பொருட்படுத்தாதவன் எவனோ, பட்டயம் வந்து அவனை வாரிக்கொண்டால், அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மேல் இருக்கும். 5அவன் எக்காளச் சத்தத்தைக் கேட்டும் எச்சரிப்பைப் பொருட்படுத்தவில்லை; அவனுடைய இரத்தப்பழி அவன்மேல் இருக்கும். எச்சரிப்பை ஏற்றுக்கொண்டிருந்தானானால், தன் ஜீவனைக் காப்பாற்றியிருப்பான். 6ஆனால் காவற்காரன் பட்டயம் வருகிறதைக் கண்டும் எக்காளம் ஊதாமல் இருந்து, ஜனங்கள் எச்சரிக்கப்படாமல் போய், பட்டயம் வந்து அவர்களில் ஒருவனை வாரிக்கொண்டால், அவன் தன் அக்கிரமத்தினிமித்தம் மரிப்பான்; ஆனாலும் அவனுடைய இரத்தப்பழியை நான் காவற்காரன் கையில் கேட்பேன்.
7“மனுஷகுமாரனே, உன்னை நான் இஸ்ரவேல் வம்சத்துக்குக் காவற்காரனாக ஏற்படுத்தினேன்; ஆகையால் நீ என் வாயினின்று வார்த்தையைக் கேட்டு, என் சார்பாக அவர்களை எச்சரிப்பாயாக.” 8நான் துன்மார்க்கனை நோக்கி, “துன்மார்க்கனே, நீ நிச்சயமாய் மரிப்பாய்” என்று சொல்லும்போது, அவனைத் தன் வழியைவிட்டுத் திரும்பும்படி எச்சரிக்க நீ பேசாமலிருந்தால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்தினிமித்தம் மரிப்பான்; ஆனாலும் அவனுடைய இரத்தப்பழியை உன் கையில் கேட்பேன். 9ஆனால் நீ துன்மார்க்கனை அவன் வழியைவிட்டுத் திரும்பும்படி எச்சரித்தும், அவன் தன் வழியைவிட்டுத் திரும்பாதிருந்தால், அவன் தன் பாவத்தினிமித்தம் மரிப்பான்; நீயோ உன் ஜீவனைத் தப்புவித்துக்கொண்டாய்.
திரும்பி பிழையுங்கள்
10“மனுஷகுமாரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாரோடே சொல்லவேண்டியது: நீங்கள் சொல்கிறது என்னவென்றால், ‘எங்கள் மீறுதல்களும் எங்கள் பாவங்களும் எங்கள்மேல் இருக்கிறது, அவைகளில் நாங்கள் வாடிப்போகிறோம்; நாங்கள் எப்படிப் பிழைப்போம்?’ என்கிறீர்கள். 11அவர்களை நோக்கி: “நான் என் ஜீவனைக்கொண்டு சொல்கிறேன், துன்மார்க்கன் மரிப்பது எனக்குப் பிரியமல்ல, துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதே எனக்குப் பிரியம் என்று ஆண்டவராகிய பிதா சொல்லுகிறார். திரும்புங்கள், உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் ஏன் மரிக்கவேண்டும்?” என்று சொல்.
12“மனுஷகுமாரனே, நீ உன் ஜனங்களோடே சொல்லவேண்டியது: நீதிமான் துரோகம்பண்ணுகிற நாளில் அவனுடைய நீதி அவனைத் தப்புவிக்காது; துன்மார்க்கன் தன் பொல்லாப்பைவிட்டுத் திரும்புகிற நாளில் அவனுடைய பொல்லாப்பு அவனை விழப்பண்ணாது; நீதிமான் பாவஞ்செய்கிற நாளில் தன் நீதியினால் பிழைக்கமாட்டான். 13நான் நீதிமானை நோக்கி, ‘நீ நிச்சயமாய்ப் பிழைப்பாய்’ என்று சொல்லும்போது, அவன் தன் சொந்த நீதியை நம்பி அநியாயஞ்செய்தால், அவனுடைய நீதியான செய்கைகள் ஒன்றும் நினைக்கப்படாது; அவன் செய்த அநியாயத்தினிமித்தம் மரிப்பான். 14நான் துன்மார்க்கனை நோக்கி, “நீ நிச்சயமாய் மரிப்பாய்” என்று சொல்லும்போது, அவன் தன் பாவத்தைவிட்டுத் திரும்பி, நியாயத்தையும் நீதியையும் செய்து, 15துன்மார்க்கன் அடகைத் திரும்பக் கொடுத்து, தான் கொள்ளையிட்டதைத் திரும்பச் செலுத்தி, அநியாயம் ஒன்றும் செய்யாமல், ஜீவனுக்கேற்ற கட்டளைகளின்படி நடந்தால், அவன் நிச்சயமாய்ப் பிழைப்பான், மரிக்கமாட்டான். 16அவன் செய்த பாவங்களில் ஒன்றும் அவனுக்கு விரோதமாய் நினைக்கப்படாது; அவன் நியாயத்தையும் நீதியையும் செய்தான், அவன் நிச்சயமாய்ப் பிழைப்பான்.
17“உன் ஜனங்களோ, ‘ஆண்டவராகிய பிதாவின் வழி செம்மையல்ல’ என்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய சொந்த வழியே செம்மையல்ல. 18நீதிமான் தன் நீதியைவிட்டுத் திரும்பி அநியாயஞ்செய்தால், அவன் அதினிமித்தம் மரிப்பான். 19துன்மார்க்கன் தன் பொல்லாப்பைவிட்டுத் திரும்பி, நியாயத்தையும் நீதியையும் செய்தால், அவன் அதினால் பிழைப்பான். 20ஆனாலும் நீங்கள், ‘ஆண்டவராகிய பிதாவின் வழி செம்மையல்ல’ என்கிறீர்கள். இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்களில் ஒவ்வொருவனையும் அவனவன் வழிகளின்படியே நியாயந்தீர்ப்பேன்.”
எருசலேம் விழுந்துவிட்டது
21எங்கள் சிறையிருப்பின் பன்னிரண்டாம் வருஷம் பத்தாம் மாதம் ஐந்தாந்தேதியிலே, எருசலேமிலிருந்து தப்பி ஓடிவந்த ஒருவன் என்னிடத்தில் வந்து, “நகரம் விழுந்துவிட்டது” என்றான். 22தப்பி ஓடிவந்தவன் வருகிறதற்கு முந்தின மாலையிலே எங்கள் பிதாவின் கரம் என்மேல் இருந்தது; அந்த மனுஷன் காலமே என்னிடத்தில் வருமுன்னே எங்கள் பிதா என் வாயைத் திறந்தார். என் வாய் திறக்கப்பட்டது, நான் இனி மவுனமாயிருக்கவில்லை.
23அப்பொழுது எங்கள் பிதாவின் வார்த்தை எனக்கு உண்டாயிற்று:
24மனுஷகுமாரனே, இஸ்ரவேல் தேசத்திலுள்ள அந்தப் பாழிடங்களில் குடியிருக்கிறவர்கள், “ஆபிரகாம் ஒரே மனுஷனாயிருந்தும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டான்; நாங்களோ அநேகராயிருக்கிறோம்; நிச்சயமாய் இந்தத் தேசம் எங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டது” என்று சொல்லுகிறார்கள். 25ஆகையால் நீ அவர்களை நோக்கி: ஆண்டவராகிய பிதா சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் இரத்தத்தோடே மாம்சம் புசித்து, உங்கள் விக்கிரகங்களுக்கு நேராக உங்கள் கண்களை ஏறெடுத்து, இரத்தம் சிந்துகிறீர்கள்; இப்படியிருக்க தேசத்தைச் சுதந்தரிப்பீர்களோ? 26நீங்கள் உங்கள் பட்டயங்களை நம்பி, அருவருப்பானவைகளைச் செய்து, அவனவன் தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்துகிறீர்கள்; இப்படியிருக்க தேசத்தைச் சுதந்தரிப்பீர்களோ?
27நீ அவர்களை நோக்கி: ஆண்டவராகிய பிதா சொல்லுகிறது என்னவென்றால், “நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன், பாழிடங்களில் இருக்கிறவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; வெளியில் இருக்கிறவர்களைக் காட்டு மிருகங்களுக்கு இரையாகக் கொடுப்பேன்; அரண்களிலும் குகைகளிலும் இருக்கிறவர்கள் கொள்ளைநோயால் மரிப்பார்கள். 28நான் தேசத்தைப் பாழும் வனாந்தரமுமாக்குவேன்; அதின் பெருமையான பலம் ஒழிந்துபோகும்; இஸ்ரவேலின் மலைகள் ஒருவரும் கடந்துபோகாதபடி பாழாய்க்கிடக்கும். 29அவர்கள் செய்த சகல அருவருப்புகளினிமித்தம் நான் தேசத்தைப் பாழும் பாழிடமுமாக்கும்போது, நானே அவர்கள் பிதா என்று அறிந்துகொள்வார்கள்.”
30மனுஷகுமாரனே, உன் ஜனங்கள் மதில்களண்டையிலும் வீட்டு வாசல்களிலும் உன்னைக்குறித்துப் பேசி, ஒருவரோடொருவர், அவனவன் தன் சகோதரனோடே: “எங்கள் பிதாவினிடத்திலிருந்து என்ன வார்த்தை வருகிறதோ, வந்து கேட்போம்” என்கிறார்கள். 31ஜனங்கள் கூடிவருகிறதுபோல் அவர்கள் உன்னிடத்தில் வந்து, என் ஜனமாக உனக்கு முன்பாக உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவைகளின்படி செய்யாதிருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் வாயினால் அன்பைப் பேசுகிறார்கள், அவர்களுடைய இருதயமோ தங்கள் சொந்த ஆதாயத்தைப் பின்தொடருகிறது. 32இதோ, நீ அவர்களுக்கு இனிமையான குரலால் பாடப்பட்டு, நன்றாய் வாசிக்கப்படுகிற ஒரு காதல் பாட்டைப்போல் இருக்கிறாய்; அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள், ஆனால் அவைகளின்படி செய்கிறதில்லை. 33இது நிறைவேறும்போது — நிச்சயமாய் நிறைவேறும் — தங்கள் நடுவில் ஒரு தீர்க்கதரிசி இருந்தான் என்று அறிந்துகொள்வார்கள்.”