தேனைப்போல் இனிப்பான சுருள்
3 1அவர் என்னை நோக்கி: “மனுஷகுமாரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளைப் புசித்து, பின்பு போய் இஸ்ரவேல் வம்சத்தாரோடே பேசு” என்றார்.
2அப்பொழுது நான் என் வாயைத் திறந்தேன்; அவர் அந்தச் சுருளை எனக்குப் புசிக்கக் கொடுத்தார்.
3அவர் என்னை நோக்கி: “மனுஷகுமாரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளினால் உன் வயிற்றுக்கு உணவூட்டி, உன் குடல்களை நிரப்பு” என்றார். நான் அதைப் புசித்தேன்; அது என் வாயிலே தேனைப்போல் இனிப்பாயிருந்தது.
4பின்பு அவர் என்னை நோக்கி: “மனுஷகுமாரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாரிடத்தில் போய், என் வார்த்தைகளை அவர்களோடே பேசு.
5“விளங்காத பேச்சும் கடினமான மொழியும் உள்ள ஒரு ஜனத்தினிடத்தில் நீ அனுப்பப்படவில்லை; இஸ்ரவேல் வம்சத்தாரிடத்திலேயே அனுப்பப்படுகிறாய். 6உன்னால் வார்த்தைகளை விளங்கிக்கொள்ள முடியாத, விளங்காத பேச்சும் கடினமான மொழியும் உள்ள அநேக ஜனங்களிடத்திலும் அல்ல. மெய்யாகவே, நான் உன்னை அவர்களிடத்தில் அனுப்பியிருந்தால், அவர்கள் உனக்குச் செவிகொடுத்திருப்பார்கள். 7ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் உனக்குச் செவிகொடுக்க மனதில்லாதிருப்பார்கள்; ஏனெனில் அவர்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாதிருக்கிறார்கள்; இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் கடினமான நெற்றியும் முரட்டு இருதயமும் உள்ளவர்கள். 8இதோ, அவர்களுடைய முகங்களுக்கு எதிராக உன் முகத்தையும், அவர்களுடைய நெற்றிகளுக்கு எதிராக உன் நெற்றியையும் கடினமாக்கினேன். 9கன்மலையைப் பார்க்கிலும் கடினமான வைரத்தைப்போல் உன் நெற்றியை ஆக்கினேன். அவர்களுக்கு நீ பயப்படாதே, அவர்களுடைய முகங்களைக் கண்டு கலங்காதே; அவர்கள் கலகக்கார வம்சத்தார்” என்றார்.
10அவர் என்னை நோக்கி: “மனுஷகுமாரனே, நான் உன்னோடே சொல்லும் என் வார்த்தைகளையெல்லாம் உன் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, உன் காதுகளால் கேள். 11சிறைப்பட்டவர்களாகிய உன் ஜனத்தாரிடத்தில் நீ போய், அவர்களோடே பேசு. அவர்கள் கேட்டாலும் சரி, கேளாமற்போனாலும் சரி, ‘ஆண்டவராகிய பிதா இவ்விதமாய்ச் சொல்லுகிறார்’ என்று அவர்களோடே சொல்” என்றார்.
12அப்பொழுது எங்கள் பிதாவின் ஆவி என்னை எடுத்துக்கொண்டது; எனக்குப் பின்னாக ஒரு பெரிய அதிர்ச்சியின் சத்தத்தைக் கேட்டேன்: “எங்கள் பிதாவின் மகிமை அவருடைய வாசஸ்தலத்திலிருந்து ஸ்தோத்திரிக்கப்படுவதாக!” 13ஜீவன்களுடைய செட்டைகள் ஒன்றோடொன்று உராய்கிற சத்தமும், அவைகளின் அருகிலிருந்த சக்கரங்களின் சத்தமும், ஒரு பெரிய அதிர்ச்சியின் சத்தமுமாயிருந்தது. 14ஆவியானவர் என்னை எடுத்து என்னைக் கொண்டுபோனார்; நான் என் ஆவியின் உக்கிரத்தோடு மனங்கசந்துபோனேன்; எங்கள் பிதாவின் கை என்மேல் பலமாயிருந்தது. 15நான் கேபார் நதியண்டையிலுள்ள தெல்அபீபிலே சிறைப்பட்டிருந்தவர்களிடத்தில் வந்து, அவர்கள் நடுவே திகைப்புற்று ஏழுநாள் உட்கார்ந்திருந்தேன்.
பிதாவானவர் ஒரு காவற்காரனை நியமிக்கிறார்
16ஏழுநாள் முடிந்தபின்பு, எங்கள் பிதாவின் வார்த்தை எனக்கு உண்டாயிற்று:
17“மனுஷகுமாரனே, நான் உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவற்காரனாக வைத்தேன்; ஆகையால் என் வாயினின்று வார்த்தையைக் கேட்கும்போது, என் சார்பாக அவர்களை எச்சரி. 18நான் துன்மார்க்கனை நோக்கி, ‘நீ நிச்சயமாய் சாவாய்’ என்று சொல்லும்போது, அவனை உயிரோடே காக்கும்படி அவனுடைய பொல்லாத வழியைக்குறித்து அவனை எச்சரிக்காமலும் அவனுக்குச் சொல்லாமலும் போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்; ஆனாலும் அவனுடைய இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்.
19“ஆனால் நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் பொல்லாப்பையும் தன் பொல்லாத வழியையும் விட்டுத் திரும்பாமற்போனால், அவன் தன் அக்கிரமத்திலே சாவான்; நீயோ உன் ஆத்துமாவைத் தப்புவித்துக்கொள்வாய்.
20“மறுபடியும், நீதிமான் தன் நீதியைவிட்டுத் திரும்பி அநியாயம் செய்கையில், நான் அவனுக்கு முன்பாக ஒரு இடறலை வைக்கும்போது அவன் சாவான். நீ அவனை எச்சரிக்காதபடியால், அவன் தன் பாவத்திலே சாவான்; அவன் செய்த நீதிகள் நினைக்கப்படாதேபோகும்; அவனுடைய இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன். 21ஆனாலும் நீதிமான் பாவம் செய்யாதபடிக்கு நீ அவனை எச்சரித்து, அவன் பாவம் செய்யாமலிருந்தால், அவன் எச்சரிப்பைக் கவனித்தபடியால் நிச்சயமாய் பிழைப்பான்; நீயும் உன் ஆத்துமாவைத் தப்புவித்துக்கொள்வாய்” என்றார்.
22எங்கள் பிதாவின் கை அங்கே என்மேல் இருந்தது; அவர் என்னை நோக்கி: “நீ எழுந்து பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப்போ; அங்கே நான் உன்னோடே பேசுவேன்” என்றார்.
23அப்படியே நான் எழுந்து பள்ளத்தாக்குக்குப் போனேன்; இதோ, கேபார் நதியண்டையில் நான் கண்ட மகிமையைப்போல எங்கள் பிதாவின் மகிமை அங்கே நின்றது; நான் முகங்குப்புற விழுந்தேன்.
24அப்பொழுது ஆவியானவர் எனக்குள் பிரவேசித்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்து, என்னோடே பேசி: “நீ போய், உன் வீட்டுக்குள்ளே உன்னை அடைத்துக்கொள். 25ஆனால் நீயோ, மனுஷகுமாரனே, இதோ, அவர்கள் உன்மேல் கயிறுகளைப் போட்டு, அவைகளால் உன்னைக் கட்டுவார்கள்; அதினால் நீ ஜனங்கள் நடுவே போகக்கூடாதிருப்பாய்.
26உன் நாக்கை உன் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும்படி செய்வேன்; நீ ஊமையாகி, அவர்களைக் கடிந்துகொள்ளக்கூடாதவனாயிருப்பாய்; ஏனெனில் அவர்கள் கலகக்கார வம்சத்தார். 27ஆனாலும் நான் உன்னோடே பேசும்போது உன் வாயைத் திறப்பேன்; அப்பொழுது நீ அவர்களை நோக்கி: ‘ஆண்டவராகிய பிதா இவ்விதமாய்ச் சொல்லுகிறார்’ என்று சொல்லுவாய். கேட்கிறவன் கேட்கட்டும், கேளாதவன் கேளாதிருக்கட்டும்; ஏனெனில் அவர்கள் கலகக்கார வம்சத்தார்.”