வாசியுங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள். பரிந்துரையுங்கள்.

♥ மதிப்புரைகள்

எசேக்கியேல் 11

புத்தகம்

நகரத்தில் துன்மார்க்க ஆலோசனை

அதிகாரம் 11.

ஆவியானவர் என்னைத் தூக்கி, கிழக்குமுகமாயிருக்கிற எங்கள் பிதாவின் ஆலயத்தின் கிழக்கு வாசலுக்கு என்னைக் கொண்டுபோனார். வாசலின் நடையில் இருபத்தைந்து மனுஷர் இருந்தார்கள்; அவர்களுக்குள்ளே அசூரின் குமாரனாகிய யசனியாவையும், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியாவையும், ஜனத்தின் தலைவர்களாகிய இவர்களைக் கண்டேன்.

அவர் என்னை நோக்கி: மனுஷகுமாரனே, இந்த நகரத்தில் தீங்கு நினைத்து, துன்மார்க்க ஆலோசனை சொல்லுகிற மனுஷர் இவர்களே; இவர்கள்: வீடுகளைக் கட்டுகிறதற்குக் காலம் சமீபித்திருக்கிறதல்லவா? இந்த நகரம் பானை, நாங்கள் இறைச்சி என்று சொல்லுகிறார்கள். ஆகையால் அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு; மனுஷகுமாரனே, தீர்க்கதரிசனம் சொல்லு என்றார்.

அப்பொழுது எங்கள் பிதாவின் ஆவி என்மேல் இறங்கி, என்னை நோக்கி: எங்கள் பிதா சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் இப்படிச் சொல்லுகிறீர்கள்; உங்கள் மனதில் எழும்புகிறதை நான் அறிவேன் என்று சொல் என்றார். இந்த நகரத்தில் நீங்கள் அநேகரைக் கொலைசெய்து, அதின் வீதிகளைக் கொலையுண்டவர்களால் நிரப்பினீர்கள்.

ஆகையால் ஆண்டவராகிய பிதா சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இந்த நகரத்தின் நடுவில் கொலைசெய்து போட்டவர்களே இறைச்சி, இந்த நகரம் பானை; ஆனாலும் நீங்கள் அதற்குள்ளிருந்து துரத்திவிடப்படுவீர்கள். நீங்கள் பட்டயத்துக்குப் பயந்தீர்கள்; ஆகையால் நான் உங்கள்மேல் பட்டயத்தை வரப்பண்ணுவேன் என்று ஆண்டவராகிய பிதா சொல்லுகிறார். நான் உங்களை நகரத்திலிருந்து வெளியே கொண்டுபோய், அந்நியர் கையில் உங்களை ஒப்புக்கொடுத்து, உங்களுக்கு விரோதமாய் நியாயத்தீர்ப்புகளைச் செய்வேன். நீங்கள் பட்டயத்தால் விழுவீர்கள்; இஸ்ரவேலின் எல்லையிலே நான் உங்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் உங்கள் பிதா என்று அறிவீர்கள். இந்த நகரம் உங்களுக்குப் பானையாயிராது; நீங்களும் அதற்குள் இறைச்சியாயிருக்கமாட்டீர்கள்; இஸ்ரவேலின் எல்லையிலே நான் உங்களை நியாயந்தீர்ப்பேன். அப்பொழுது நான் உங்கள் பிதா என்று அறிவீர்கள்; நீங்கள் என் கட்டளைகளின்படி நடவாமலும், என் நியாயங்களைக் கைக்கொள்ளாமலும், உங்களைச் சுற்றியிருக்கிற ஜாதிகளுடைய நியாயங்களின்படி நடந்தீர்கள்.

புதிய இருதயத்தைப் பிதா வாக்குப்பண்ணுகிறார்

நான் தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருக்கையில், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியா செத்தான். அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்து: ஆ, ஆண்டவராகிய பிதாவே! இஸ்ரவேலில் மீதியாயிருக்கிறவர்களை நீர் முழுவதும் அழித்துப்போடுவீரோ? என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டேன்.

அப்பொழுது எங்கள் பிதாவின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர் சொன்னது:

மனுஷகுமாரனே, உன் சகோதரர், உன் சகோதரராகிய உன் இனத்தார், இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரையும் குறித்து, எருசலேமின் குடிகள்: நீங்கள் தேவனுக்குத் தூரமாயிருங்கள்; இந்த தேசம் எங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டது என்று சொல்லுகிறார்கள்.

ஆகையால் நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: ஆண்டவராகிய பிதா சொல்லுகிறது என்னவென்றால், நான் அவர்களை ஜாதிகளுக்குள்ளே தூரமாய் அனுப்பி, தேசங்களில் அவர்களைச் சிதறடித்தாலும், அவர்கள் போன தேசங்களில் நான் அவர்களுக்குக் கொஞ்சக்காலம் பரிசுத்த ஸ்தலமாயிருந்தேன்.

ஆகையால் நீ சொல்லவேண்டியது: ஆண்டவராகிய பிதா சொல்லுகிறது என்னவென்றால், நான் உங்களை ஜனங்களிலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டி, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குத் தருவேன்.

அவர்கள் அங்கே வந்து, அதிலுள்ள சகல அருவருப்பான விக்கிரகங்களையும், சகல அருவருப்புகளையும் அதிலிருந்து அகற்றிப்போடுவார்கள். நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தைத் தந்து, அவர்களுக்குள்ளே புதிய ஆவியைக் கட்டளையிடுவேன்; அவர்களுடைய மாம்சத்திலிருந்து கல்லான இருதயத்தை எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்குக் கொடுத்து, அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யும்படிக்கு இப்படிச் செய்வேன்; அப்பொழுது அவர்கள் என் பிள்ளைகளாயிருப்பார்கள், நான் அவர்களுடைய பிதாவாயிருப்பேன். ஆனாலும் தங்கள் அருவருப்புகளையும் தங்கள் இழிவான செய்கைகளையும் இருதயத்தால் விரும்பிப் பின்பற்றுகிறவர்களுடைய நடக்கையை அவர்களுடைய தலையின்மேலே சுமரப்பண்ணுவேன் என்று ஆண்டவராகிய பிதா சொல்லுகிறார்.

அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்தன, அவைகள் அருகே சக்கரங்களும் இருந்தன; இஸ்ரவேலின் பிதாவின் மகிமை அவைகளுக்கு மேலாக இருந்தது. எங்கள் பிதாவின் மகிமை நகரத்தின் நடுவிலிருந்து எழும்பி, நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் நின்றது. பின்பு ஆவியானவர் என்னைத் தூக்கி, எங்கள் பிதாவின் ஆவியினாலே தரிசனத்திலே என்னைக் கல்தேயாவில் சிறைப்பட்டவர்களிடத்திற்குக் கொண்டுபோனார்; அப்பொழுது நான் கண்ட தரிசனம் என்னைவிட்டு எழும்பிப்போயிற்று. அப்பொழுது எங்கள் பிதா எனக்குக் காண்பித்த எல்லாக் காரியங்களையும் நான் சிறைப்பட்டவர்களுக்குச் சொன்னேன்.

A young man reading the Father's Heart Bible print edition in a coffee shop இப்போது அச்சில்

கருத்துகள்

இந்த அதிகாரம் உங்களுக்குள் எழுப்பிய எண்ணம், கேள்வி அல்லது ஒரு வார்த்தை — இங்கே பகிருங்கள். ஒவ்வொரு கருத்தும் உங்கள் பெயரைப் பங்களிப்பாளர் சுவரில் சேர்க்கிறது.

வாசிப்பது, கேட்பது, நகலெடுப்பது, பகிர்வது அனைவருக்கும் திறந்திருக்கிறது — கணக்கு தேவையில்லை. கருத்திடுவது, தனிப்படுத்துவது, உங்கள் இடத்தை நினைவில் வைப்பது இலவசக் கணக்குடன் வருகின்றன, ஒவ்வொரு கருத்தும் உங்கள் பெயரைப் பங்களிப்பாளர் சுவரில் சேர்க்கிறது.

குடும்பத்தில் இணையுங்கள் — இலவசம் →
  • இன்னும் கருத்துகள் இல்லை. உங்கள் குரலைச் சேர்க்கும் முதல் நபராக இருங்கள்.