மோசேயும் ஆரோனும் நியமிக்கப்படுதல்
7 1எங்கள் பிதா மோசேயை நோக்கி: “பார், நான் உன்னைப் பார்வோனுக்குத் தேவனாக ஏற்படுத்தினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாய் இருப்பான். 2நான் உனக்குக் கட்டளையிடுகிற யாவற்றையும் நீ சொல்லுவாய்; உன் சகோதரனாகிய ஆரோன் இஸ்ரவேலரைத் தன் தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி பார்வோனுக்குச் சொல்லுவான். 3ஆனாலும் நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்து தேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் பெருகப்பண்ணுவேன். 4பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான்; ஆகையால் நான் எகிப்துக்கு விரோதமாய் என் கையை நீட்டி, மகா நியாயத்தீர்ப்புகளால் என் சேனைகளாகிய என் ஜனத்தை, இஸ்ரவேலின் சந்ததியை, எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணுவேன். 5நான் எகிப்துக்கு விரோதமாய் என் கையை நீட்டி, இஸ்ரவேலின் ஜனத்தை அவர்கள் நடுவிலிருந்து புறப்படப்பண்ணும்போது, நானே பிதா என்று எகிப்தியர் அறிந்துகொள்வார்கள்” என்றார்.
6மோசேயும் ஆரோனும் அப்படியே செய்தார்கள்; எங்கள் பிதா தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள். 7அவர்கள் பார்வோனோடே பேசினபோது, மோசே எண்பது வயதுள்ளவனும், ஆரோன் எண்பத்துமூன்று வயதுள்ளவனுமாய் இருந்தார்கள்.
8பின்பு எங்கள் பிதா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
9“ ‘உங்கள் சத்தியத்தை ஒரு அற்புதத்தால் நிரூபியுங்கள்’ என்று பார்வோன் உங்களிடம் சொல்லும்போது, நீ ஆரோனை நோக்கி: ‘உன் கோலை எடுத்து, பார்வோனுக்கு முன்பாக எறிந்துவிடு, அது சர்ப்பமாகும்’ என்று சொல்” என்றார்.
10மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், எங்கள் பிதா கட்டளையிட்டபடியே செய்தார்கள்; ஆரோன் தன் கோலைப் பார்வோனுக்கும் அவன் ஊழியக்காரருக்கும் முன்பாக எறிந்தான், அது சர்ப்பமாயிற்று. 11அப்பொழுது பார்வோனும் ஞானிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான்; எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையால் அப்படியே செய்தார்கள். 12அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் கோலை எறிந்தான், அவைகள் சர்ப்பங்களாயின; ஆனாலும் ஆரோனின் கோல் அவர்களுடைய கோல்களை விழுங்கிப்போட்டது. 13எங்கள் பிதா சொல்லியிருந்தபடியே, பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.
நைல் நதி இரத்தமாய் மாறுதல்
14அப்பொழுது எங்கள் பிதா மோசேயை நோக்கி: “பார்வோனின் இருதயம் கடினமாய் இருக்கிறது; ஜனங்களைப் போகவிடமாட்டேன் என்கிறான். 15காலமே பார்வோன் தண்ணீரண்டைக்குப் புறப்பட்டுப் போகும்போது, நீ அவனிடத்தில் போய், அவனைச் சந்திக்க நைல் நதிக்கரையிலே நின்று, சர்ப்பமாய் மாறின கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, 16அவனை நோக்கி: ‘என் ஜனத்தார் வனாந்தரத்திலே எனக்கு ஆராதனை செய்யும்படி அவர்களைப் போகவிடு என்று சொல்லி, எபிரெயரின் எங்கள் பிதா என்னை உன்னிடத்தில் அனுப்பினார்; ஆனாலும் இதுவரைக்கும் நீ செவிகொடுக்கவில்லை. 17எங்கள் பிதா சொல்லுகிறது என்னவென்றால்: நானே பிதா என்பதை நீ இதனாலே அறிந்துகொள்வாய்; இதோ, என் கையிலிருக்கிற கோலினால் நான் நைல் நதியின் தண்ணீரை அடிப்பேன், அது இரத்தமாய் மாறும். 18நைல் நதியிலுள்ள மீன்கள் செத்து, நதி நாறிப்போம்; நைல் நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியர் அருவருப்படைவார்கள்’ என்று சொல்” என்றார். 19மேலும் எங்கள் பிதா மோசேயை நோக்கி: “நீ ஆரோனிடம்: ‘உன் கோலை எடுத்து, எகிப்தின் தண்ணீர்களின்மேலும், அவர்களுடைய ஆறுகள், கால்வாய்கள், குளங்கள், நீர்த்தேக்கங்கள் எல்லாவற்றின்மேலும் உன் கையை நீட்டு, அவைகள் இரத்தமாகும்’ என்று சொல்; எகிப்து முழுவதிலும், மரப்பாத்திரங்களிலும் கற்பாத்திரங்களிலும்கூட இரத்தம் நிரம்பியிருக்கும்” என்றார்.
20மோசேயும் ஆரோனும் எங்கள் பிதா கட்டளையிட்டபடியே செய்தார்கள்; பார்வோனுக்கும் அவன் ஊழியக்காரருக்கும் முன்பாக ஆரோன் கோலை ஓங்கி நைல் நதியின் தண்ணீரை அடித்தான், அதன் தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிற்று. 21நைல் நதியிலுள்ள மீன்கள் செத்தன, நதி நாறிப்போயிற்று; எகிப்தியர் நைல் நதியின் தண்ணீரைக் குடிக்கக்கூடாமற்போயிற்று; எகிப்து தேசம் முழுவதிலும் இரத்தம் இருந்தது. 22ஆனாலும் எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையால் அப்படியே செய்தார்கள்; ஆகையால் எங்கள் பிதா சொல்லியிருந்தபடியே, பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. 23பார்வோன் திரும்பித் தன் வீட்டிற்குள் போய்விட்டான்; இதையும் அவன் தன் மனதிலே வைக்கவில்லை. 24எகிப்தியர் எல்லாரும் நைல் நதியின் தண்ணீரைக் குடிக்கக்கூடாதபடியால், குடிக்கத் தண்ணீருக்காக நதியோரத்தில் தோண்டினார்கள். 25எங்கள் பிதா நைல் நதியை அடித்தபின்பு ஏழு நாட்கள் முழுதும் கடந்துபோயின.