வெண்கல பலிபீடம்
27 1"சீத்திம் மரத்தினால் பலிபீடத்தைச் செய்: ஏழரை அடி நீளமும், ஏழரை அடி அகலமும், சதுரமாகவும், நான்கரை அடி உயரமாகவும் இருக்கக்கடவது. 2அதின் நான்கு மூலைகளிலும் கொம்புகளைச் செய்; அந்தக் கொம்புகள் அதனோடு ஒரே துண்டாய் இருக்கக்கடவது; அதை வெண்கலத்தால் மூடு. 3அதின் சாம்பலை அள்ளுவதற்குப் பானைகளையும், சாம்பல்முகவைகளையும், கலங்களையும், முள்துறடுகளையும், நெருப்புச்சட்டிகளையும் செய்; அதின் பணிமுட்டுகள் யாவையும் வெண்கலத்தால் செய். 4அதற்கு வலைப்பின்னல் போன்ற ஒரு வெண்கல ஜல்லடியைச் செய்; அந்த வலையின் நான்கு மூலைகளிலும் நான்கு வெண்கல வளையங்களைச் செய். 5அதைப் பலிபீடத்தின் சட்டத்திற்குக் கீழே வை; அப்படி அந்த வலை பலிபீடத்தின் பாதி உயரம்வரை எட்டும்படி இருக்கக்கடவது. 6பலிபீடத்திற்குத் தண்டுகளைச் செய்; சீத்திம் மரத்தினால் அந்தத் தண்டுகளைச் செய்து, அவைகளை வெண்கலத்தால் மூடு. 7பலிபீடத்தைச் சுமப்பதற்கு அதின் இரண்டு பக்கங்களிலும் இருக்கிற வளையங்களில் அந்தத் தண்டுகளைப் பாய்ச்சு. 8மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்டபடியே அதைப் பலகைகளால் உள்வெளியாகச் செய்; அப்படியே அதைச் செய்யக்கடவர்கள்.
பிராகாரம்
9"வாசஸ்தலத்தின் பிராகாரத்தைச் செய்: தென்பக்கத்திற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூல் தொங்குதிரைகள்; அந்தப் பக்கத்திற்கு ஏறக்குறைய நூற்றைம்பது அடி நீளமாய் இருக்கக்கடவது. 10இருபது தூண்களும், அவைகளுக்கு இருபது வெண்கலப் பாதங்களும்; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளியினால் செய்யப்படக்கடவது. 11வடபக்கத்திலும் நூற்றைம்பது அடி நீளமான தொங்குதிரைகளும், அவற்றிற்கு இருபது தூண்களும், இருபது வெண்கலப் பாதங்களும், தூண்களுக்கு வெள்ளிக் கொக்கிகளும் பூண்களும் இருக்கக்கடவது. 12பிராகாரத்தின் மேற்பக்க அகலத்திற்கு: எழுபத்தைந்து அடி நீளமான தொங்குதிரைகளும், பத்துத் தூண்களும், பத்துப் பாதங்களும் இருக்கக்கடவது. 13கிழக்குப் பக்கத்தில், சூரியன் உதிக்கும் திசையை நோக்கிய பிராகாரத்தின் அகலம் ஏறக்குறைய எழுபத்தைந்து அடியாய் இருக்கக்கடவது. 14வாசலின் ஒரு பக்கத்திற்கு ஏறக்குறைய இருபத்திரண்டரை அடி தொங்குதிரைகளும், மூன்று தூண்களும், மூன்று பாதங்களும் இருக்கக்கடவது. 15மறுபக்கத்தில் இருபத்திரண்டரை அடி தொங்குதிரைகளும், மூன்று தூண்களும், மூன்று பாதங்களும் இருக்கக்கடவது. 16பிராகாரத்தின் வாசற்திரை: முப்பது அடி; இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், திரித்த மெல்லிய பஞ்சுநூலும் கொண்டு சித்திரத் தையலாய்த் தைக்கப்பட்டதாகவும், நான்கு தூண்களும், நான்கு பாதங்களும் உள்ளதாகவும் இருக்கக்கடவது. 17பிராகாரத்தைச் சுற்றிலும் இருக்கிற எல்லாத் தூண்களும் வெள்ளிப் பூண்களால் பூணப்பட்டு, கொக்கிகள் வெள்ளியினாலும், பாதங்கள் வெண்கலத்தினாலும் இருக்கக்கடவது. 18பிராகாரம்: ஏறக்குறைய நூற்றைம்பது அடி நீளமும், எங்கும் எழுபத்தைந்து அடி அகலமும், ஏழரை அடி உயரமும் உள்ளதாய், திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும், வெண்கலப் பாதங்களாலும் இருக்கக்கடவது. 19வாசஸ்தலத்தின் எல்லாப் பணிமுட்டுகளும், எந்த வேலைக்கு உபயோகிக்கப்பட்டாலும், அதின் எல்லா முளைகளும், பிராகாரத்தின் முளைகளும் யாவும் வெண்கலத்தால் செய்யப்படக்கடவது.
இடைவிடாத விளக்கிற்கான எண்ணெய்
20"விளக்கு எப்போதும் எரிந்துகொண்டிருக்கும்படி, வெளிச்சத்திற்காக இடித்துப் பிழிந்த சுத்தமான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு. 21ஆசரிப்புக் கூடாரத்தில், சாட்சிப் பெட்டிக்கு முன்பாக இருக்கிற திரைக்கு வெளிப்புறமாக, ஆரோனும் அவன் குமாரரும் அதை எங்கள் பிதாவுக்கு முன்பாக மாலைதொடங்கிக் காலைவரைக்கும் ஒழுங்குபடுத்தக்கடவர்கள்; இது இஸ்ரவேல் புத்திரர் சார்பாய், அவர்களுடைய தலைமுறைதோறும் நித்திய நியமமாய் இருக்கக்கடவது." a a v21 'சாட்சி' என்பது உடன்படிக்கைப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த நியாயப்பிரமாணத்தின் கற்பலகைகளைக் குறிக்கிறது.