அடிவானத்தில் வெட்டுக்கிளிகள்
10 1பின்பு எங்கள் பிதா மோசேயை நோக்கி: “பார்வோனிடத்தில் போ; என் அடையாளங்களை அவர்கள் நடுவே வைக்கும்படி, நான் அவனுடைய இருதயத்தையும் அவனுடைய ஊழியக்காரரின் இருதயங்களையும் கடினப்படுத்தினேன். 2நான் எகிப்தியரை எப்படிப் பரிகாசம் பண்ணினேன் என்பதையும், அவர்கள் நடுவே என் அடையாளங்களை வைத்தேன் என்பதையும் உன் மகனுக்கும் பேரனுக்கும் சொல்; அதனால் நானே உங்கள் பிதா என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.”
3மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய்: “எபிரெயருடைய பிதா சொல்லுகிறது என்னவென்றால்: ‘எத்தனை காலம் நீ எனக்கு முன்பாக உன்னைத் தாழ்த்த மறுப்பாய்? எனக்கு ஊழியம் செய்யும்படி என் ஜனத்தைப் போகவிடு.’ 4நீ என் ஜனத்தைப் போகவிட மறுத்தால், இதோ, நாளைக்கு நான் உன் எல்லைக்குள் வெட்டுக்கிளிகளை வரப்பண்ணுவேன். 5அவைகள் தரையைப் பார்க்கமுடியாதபடி பூமியின் மேற்பரப்பை மூடி, கல்மழையினின்று தப்பி உங்களுக்கு மீதியாயிருந்ததைத் தின்று, வெளியிலே உங்களுக்காக முளைத்திருக்கிற சகல மரங்களையும் தின்றுபோடும். 6உன் வீடுகளும், உன் ஊழியக்காரரின் வீடுகளும், எகிப்தியர் அனைவரின் வீடுகளும் அவைகளால் நிறையும்; உன் பிதாக்களும் பாட்டன்மாரும் பூமியில் இருந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் இப்படிப்பட்டதைக் கண்டதில்லை.” பின்பு அவன் திரும்பிப் பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.
7அப்பொழுது பார்வோனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி: “இந்த மனுஷன் எத்தனை காலம் நமக்குக் கண்ணியாயிருப்பான்? அந்த ஜனங்கள் தங்கள் தேவனுக்கு ஊழியம் செய்யும்படி அவர்களைப் போகவிடும்; எகிப்து பாழாய்ப் போயிற்று என்பது இன்னும் உமக்குத் தெரியவில்லையா?” என்றார்கள்.
8அப்பொழுது மோசேயும் ஆரோனும் திரும்பப் பார்வோனிடத்தில் கொண்டுவரப்பட்டார்கள். அவன்: “போங்கள், தேவனுக்கு ஊழியம் செய்யுங்கள்; ஆனாலும் போகிறவர்கள் யார்?” என்றான்.
9அதற்கு மோசே: “எங்கள் இளைஞரோடும் முதியோரோடும் போவோம்; எங்கள் குமாரரோடும் குமாரத்திகளோடும், ஆடுமாடுகளோடும் போவோம்; எங்கள் பிதாவுக்கு ஒரு பண்டிகை கொண்டாட வேண்டியிருக்கிறது” என்றான்.
10அதற்கு அவன்: “நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் போகவிட்டால், தேவன் உங்களோடே இருக்கட்டும்! பாருங்கள், உங்கள் எண்ணத்தில் தீமை இருக்கிறது. 11அப்படியல்ல! ஆண்களாகிய நீங்கள் போய், தேவனுக்கு ஊழியம் செய்யுங்கள்; இதுதானே நீங்கள் விரும்பினது” என்று சொன்னான். அப்படியே பார்வோன் அவர்களைத் தன் சமுகத்தைவிட்டுத் துரத்திவிட்டான்.
12அப்பொழுது எங்கள் பிதா மோசேயை நோக்கி: “எகிப்துதேசத்தின்மேல் வெட்டுக்கிளிகள் ஏறிவந்து, கல்மழை மீதியாக விட்ட தேசத்தின் சகல பயிர்வகைகளையும் தின்னும்படி, உன் கையை எகிப்துதேசத்தின்மேல் நீட்டு” என்றார்.
13மோசே தன் கோலை எகிப்துதேசத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது எங்கள் பிதா அன்று பகல்முழுவதும் இராமுழுவதும் கிழக்குக்காற்றை தேசத்தின்மேல் வீசப்பண்ணினார்; காலையில் அந்தக் காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது. 14வெட்டுக்கிளிகள் எகிப்துதேசம் முழுவதின்மேலும் ஏறிவந்து, அதின் எல்லைகளிலெங்கும் தங்கின; அவைகள் மிகவும் கொடியவைகளாயிருந்தன; அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் அதற்குமுன் ஒருபோதும் இருந்ததில்லை, அதற்குப்பின் ஒருபோதும் இருப்பதுமில்லை. 15அவைகள் தேசம் முழுவதின் மேற்பரப்பையும் மூடி, அது இருண்டுபோகும்படி செய்தது; கல்மழைக்குத் தப்பியிருந்த தேசத்தின் சகல பயிர்களையும், மரங்களின் சகல கனிகளையும் தின்றுபோட்டது; எகிப்துதேசம் எங்கும் மரங்களிலாவது வெளியின் பயிர்களிலாவது ஒரு பச்சிலையும் மீதியாக இருக்கவில்லை. 16அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் தீவிரமாய் அழைப்பித்து: “உங்கள் தேவனுக்கு விரோதமாகவும் உங்களுக்கு விரோதமாகவும் நான் பாவம் செய்தேன். 17இந்த ஒருதரம்மட்டும் என் பாவத்தை மன்னியுங்கள்; இந்த மரணத்தை மாத்திரம் என்னைவிட்டு அகற்றும்படி உங்கள் தேவனை வேண்டிக்கொள்ளுங்கள்” என்றான்.
18அவன் பார்வோனை விட்டுப் புறப்பட்டுப்போய், எங்கள் பிதாவை நோக்கி வேண்டிக்கொண்டான். 19அப்பொழுது எங்கள் பிதா காற்றை மிகவும் பலத்த மேற்குக்காற்றாக மாற்றினார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டுபோய்ச் செங்கடலிலே போட்டது; எகிப்தின் எல்லைகளிலெங்கும் ஒரு வெட்டுக்கிளியாகிலும் மீதியாக இருக்கவில்லை. 20ஆனாலும் எங்கள் பிதா பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.
மூன்று நாள் இருள்
21அப்பொழுது எங்கள் பிதா மோசேயை நோக்கி: “எகிப்துதேசத்தின்மேல் இருள் உண்டாகும்படி வானத்தை நோக்கி உன் கையை நீட்டு; அந்த இருள் தடவி உணரத்தக்க காரிருளாயிருக்கும்” என்றார்.
22மோசே தன் கையை வானத்தை நோக்கி நீட்டினான்; அப்பொழுது எகிப்துதேசம் எங்கும் மூன்று நாள்வரைக்கும் காரிருள் உண்டாயிற்று. 23மூன்று நாள்வரைக்கும் ஒருவரை ஒருவர் காணவும் இல்லை, ஒருவரும் தம்முடைய இடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; ஆனாலும் இஸ்ரவேல் புத்திரர் அனைவருக்கும் தங்கள் வீடுகளில் வெளிச்சம் இருந்தது.
24அப்பொழுது பார்வோன் மோசேயை அழைத்து: “நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு ஊழியம் செய்யுங்கள்; உங்கள் குழந்தைகளும் உங்களோடே போகலாம்; உங்கள் ஆடுமாடுகளை மாத்திரம் விட்டுவையுங்கள்” என்றான்.
25அதற்கு மோசே: “நாங்கள் எங்கள் பிதாவுக்குச் செலுத்தும்படி பலிகளையும் சர்வாங்கதகனங்களையும் நீர் எங்கள் கையில் கொடுக்கவேண்டும். 26எங்கள் மிருகஜீவன்களும் எங்களோடே வரவேண்டும்; ஒரு குளம்பாகிலும் பின்வைக்கப்படுவதில்லை; எங்கள் பிதாவுக்கு ஊழியம் செய்யும்படி அவைகளில் சிலவற்றை நாங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும்; அங்கே சேரும்வரைக்கும் அவருக்கு ஊழியம் செய்ய எதைச் செலுத்தவேண்டுமென்று நாங்கள் அறியோம்” என்றான்.
27ஆனாலும் எங்கள் பிதா பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாதிருந்தான். 28பார்வோன் அவனை நோக்கி: “என்னைவிட்டுப் போ! எச்சரிக்கையாயிரு, இனி என் முகத்தைப் பார்க்காதே; நீ என் முகத்தைப் பார்க்கும் நாளிலே சாவாய்” என்றான்.
29அதற்கு மோசே: “நீர் சொன்னது சரிதான்; இனி நான் உம்முடைய முகத்தைப் பார்க்கவேமாட்டேன்” என்றான்.