எஸ்தரும் மொர்தெகாயும் கனம்பெறுதல்
8 1அந்த நாளிலே அகாஸ்வேரு ராஜா யூதர்களின் பகைஞனாகிய ஆமானின் சொத்தை எஸ்தர் ராஜாத்திக்குக் கொடுத்தான். மொர்தெகாய் தனக்கு என்னவாயிருக்கிறான் என்பதை எஸ்தர் அறிவித்திருந்தபடியால், அவன் ராஜாவுக்கு முன்பாக வந்தான். 2ராஜா ஆமானிடமிருந்து திரும்பப்பெற்றிருந்த தன்னுடைய முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை மொர்தெகாய்க்குக் கொடுத்தான். எஸ்தர் மொர்தெகாயை ஆமானின் சொத்துக்குமேல் அதிகாரியாக ஏற்படுத்தினாள்.
3எஸ்தர் மறுபடியும் ராஜாவோடே பேசி, அவனுடைய பாதங்களில் விழுந்து, அழுது, ஆகாகியனாகிய ஆமானின் தீமையையும் யூதர்களுக்கு விரோதமாய் அவன் செய்த சூழ்ச்சியையும் தடுக்கும்படி அவனை மன்றாடினாள். 4ராஜா எஸ்தரிடத்தில் பொற்செங்கோலை நீட்டினான்; அப்பொழுது அவள் எழுந்து ராஜாவுக்கு முன்பாக நின்று, 5"ராஜாவுக்குச் சித்தமாயிருந்து, நான் அவருடைய தயவைப் பெற்றிருந்து, இந்தக் காரியம் அவருக்கு நியாயமாய்த் தோன்றி, அவருடைய கண்களுக்கு நான் பிரியமாயிருந்தால், ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள யூதர்களை அழிக்கும்படி ஆகாகியனாகிய அம்மெதாத்தாவின் மகன் ஆமான் திட்டமிட்டு எழுதின மடல்களை மாற்றி எழுதப்படக்கடவது. 6என் ஜனத்தின்மேல் தீங்கு வருகிறதை நான் எப்படிப் பார்த்திருப்பேன்? என் குடும்பம் அழிக்கப்படுகிறதை நான் எப்படிக் கண்டுசகிப்பேன்?" என்றாள்.
7அப்பொழுது அகாஸ்வேரு ராஜா எஸ்தர் ராஜாத்திக்கும் யூதனாகிய மொர்தெகாய்க்கும் சொன்னது: "இதோ, ஆமானின் வீட்டை எஸ்தருக்குக் கொடுத்தேன்; அவன் யூதர்களுக்கு விரோதமாய்ச் சதிசெய்தபடியால் அவனைத் தூக்குமரத்திலே தூக்கிப்போட்டார்கள். 8ஆகையால், ராஜாவின் பேரில் உங்களுக்கு நலமாய்த் தோன்றுகிறபடி யூதர்களைக்குறித்து எழுதி, ராஜாவின் முத்திரை மோதிரத்தால் அதை முத்திரையிடுங்கள்; ராஜாவின் பேரில் எழுதப்பட்டு, அவருடைய மோதிரத்தால் முத்திரையிடப்பட்ட மடலை ஒருவரும் திரும்பமாற்ற முடியாது" என்றான்.
9அப்பொழுது, மூன்றாம் மாதமாகிய சீவான் மாதம் இருபத்துமூன்றாம் தேதியிலே, ராஜாவின் எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டார்கள்; இந்தியா தொடங்கி எத்தியோப்பியாவரையுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளிலுமுள்ள யூதர்களுக்கும், தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், மொர்தெகாய் கட்டளையிட்டபடியெல்லாம் ஒவ்வொரு நாட்டுக்கும் அதினதின் எழுத்திலும், ஒவ்வொரு ஜனத்துக்கும் அதினதின் பாஷையிலும், யூதர்களுக்கு அவர்களுடைய எழுத்திலும் பாஷையிலும் எழுதப்பட்டது. 10மொர்தெகாய் அகாஸ்வேரு ராஜாவின் பேரில் எழுதி, ராஜாவின் முத்திரை மோதிரத்தால் அதை முத்திரையிட்டு, ராஜசேவைக்காக வளர்க்கப்பட்ட வேகமான குதிரைகளின்மேல் ஏறிச்செல்லும் தூதாளர்களைக்கொண்டு மடல்களை அனுப்பினான். 11அந்த மடல்களில், ஒவ்வொரு பட்டணத்திலுமுள்ள யூதர்கள் ஒன்றாய்க் கூடி, தங்கள் உயிரைக் காக்கவும்; தங்களைத் தாக்குகிற எந்த ஜனத்தினுடையவும் நாட்டினுடையவும் ஆயுதம் தரித்த சேனையை, பிள்ளைகளோடும் ஸ்திரீகளோடும்கூட, அழிக்கவும், கொல்லவும், நிர்மூலமாக்கவும், அவர்களுடைய பகைஞர்களின் உடைமைகளைக் கொள்ளையிடவும் ராஜா அனுமதி அளித்தான். 12இது அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலும் ஒரே நாளில், அதாவது பன்னிரண்டாம் மாதமாகிய ஆதார் மாதம் பதின்மூன்றாம் தேதியிலே நடக்கவேண்டியதாயிருந்தது. 13யூதர்கள் தங்கள் பகைஞர்களுக்கு நீதியைச் சரிக்கட்டும்படி அந்த நாளிலே ஆயத்தமாயிருக்கும்பொருட்டு, இந்தக் கட்டளையின் நகல் ஒவ்வொரு நாட்டிலும் சட்டமாக விதிக்கப்பட்டு, சகல ஜனங்களுக்கும் தெரியப்படுத்தப்படவேண்டியதாயிருந்தது. 14வேகமான ராஜகுதிரைகளின்மேல் ஏறின தூதாளர்கள் ராஜாவின் கட்டளையினால் துரிதப்படுத்தப்பட்டு, தீவிரமாய்ப் புறப்பட்டுப்போனார்கள்; இந்தக் கட்டளை சூசான் அரண்மனையிலே கொடுக்கப்பட்டது.
15மொர்தெகாய் இளநீலமும் வெண்மையுமான ராஜ உடையையும், பெரிய பொன் கிரீடத்தையும், மெல்லிய பட்டும் இரத்தாம்பரமுமான அங்கியையும் அணிந்து, ராஜாவின் சமுகத்தினின்று புறப்பட்டான்; சூசான் பட்டணம் ஆர்ப்பரித்து மகிழ்ந்தது. 16யூதர்களுக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், சந்தோஷமும், கனமும் உண்டாயிற்று. 17ராஜாவின் கட்டளையும் ஆணையும் போய்ச்சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் பட்டணத்திலும், யூதர்களுக்கு மகிழ்ச்சியும் களிப்பும், விருந்தும், பண்டிகைநாளும் உண்டாயிற்று. யூதர்களைக்குறித்த பயம் அந்நாட்டு ஜனங்களைப் பிடித்தபடியால், அவர்களில் அநேகர் யூதராயினார்கள்.