எஸ்தர் ராஜாவின் சிங்காசனத்தை அணுகுகிறாள்
5 1மூன்றாம் நாளிலே, எஸ்தர் ராஜவஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, ராஜாவின் மண்டபத்திற்கு எதிரே, அரண்மனையின் உள்முற்றத்திலே வந்து நின்றாள். ராஜா அரண்மனையின் வாசலுக்கு எதிரே, மண்டபத்திலே தன் ராஜசிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான். 2ராஜா ராஜாத்தியாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவள் அவனுடைய கண்களில் தயவு பெற்றாள்; ராஜா தன் கையில் இருந்த பொற்செங்கோலை அவளுக்கு நேராக நீட்டினான். அப்பொழுது எஸ்தர் அருகில் வந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள்.
3ராஜா அவளைப் பார்த்து, “ராஜாத்தியாகிய எஸ்தரே, என்ன செய்தி? உன் விண்ணப்பம் என்ன? ராஜ்யத்தில் பாதிமட்டும் உனக்குக் கொடுக்கப்படும்” என்றான்.
4அதற்கு எஸ்தர், “ராஜாவுக்குச் சித்தமானால், நான் ஆயத்தம்பண்ணின விருந்துக்கு ராஜாவும் ஆமானும் இன்று வரவேண்டும்” என்றாள்.
5அப்பொழுது ராஜா, “எஸ்தர் சொன்னபடி செய்யும்படி, ஆமானைச் சீக்கிரமாய் அழைத்துவாருங்கள்” என்றான். ராஜாவும் ஆமானும் எஸ்தர் ஆயத்தம்பண்ணின விருந்துக்கு வந்தார்கள்.
6திராட்சரசம் அருந்தும்போது ராஜா எஸ்தரைப் பார்த்து, “உன் விண்ணப்பம் என்ன? அது உனக்குக் கட்டளையிடப்படும். உன் வேண்டுதல் என்ன? ராஜ்யத்தில் பாதியானாலும் அது உனக்கே” என்றான்.
7அதற்கு எஸ்தர், “என் விண்ணப்பமும் என் வேண்டுதலும் இதுதான்: 8நான் ராஜாவின் கண்களில் தயவு பெற்றிருந்து, என் விண்ணப்பத்தை அருளவும் என் வேண்டுதலை நிறைவேற்றவும் ராஜாவுக்குச் சித்தமானால், நான் அவர்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிற விருந்துக்கு ராஜாவும் ஆமானும் வரவேண்டும். நாளைக்கு ராஜா சொல்லுகிறபடி செய்வேன்” என்றாள்.
ஆமானின் கோபம் மொர்தெகாய்க்கு விரோதமாய்த் திரும்புகிறது
9அன்றையதினம் ஆமான் மகிழ்ச்சியோடும் சந்தோஷ இருதயத்தோடும் புறப்பட்டான். ஆனாலும் ராஜாவின் வாசலில் இருந்த மொர்தெகாய் தன் முன்பாக எழுந்திராமலும் தனக்குப் பயந்து நடுங்காமலும் இருக்கிறதை ஆமான் கண்டபோது, மொர்தெகாயின்மேல் மூர்க்க கோபம் நிறைந்தவனானான். 10இருந்தாலும் ஆமான் தன்னை அடக்கிக்கொண்டு, தன் வீட்டுக்குப் போனான். அவன் தன் சிநேகிதரையும் தன் மனைவியாகிய சிரேஷையும் அழைத்தனுப்பி, 11தன் ஐசுவரியத்தின் மகிமையையும், தன் அநேக குமாரர்களையும், ராஜா தன்னை எப்படிக் கனம்பண்ணி, ராஜாவின் பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும் மேலாகத் தன்னை உயர்த்தினான் என்பதையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான்.
12மேலும் ஆமான், “அதுமட்டுமல்ல, ராஜாத்தியாகிய எஸ்தர் தான் ஆயத்தம்பண்ணின விருந்துக்கு ராஜாவோடேகூட என்னைமட்டும் அழைத்தாள்; நாளைக்கும் ராஜாவோடேகூட நான் அவளிடத்தில் அழைக்கப்பட்டிருக்கிறேன். 13ஆனாலும் யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் வாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணுமளவும், இதெல்லாம் எனக்கு ஒன்றுக்கும் உதவாது” என்றான்.
14அப்பொழுது அவன் மனைவியாகிய சிரேஷும் அவன் சிநேகிதர் அனைவரும் அவனை நோக்கி, “எழுபத்தைந்து அடி உயரமான ஒரு தூக்குமரத்தை உண்டுபண்ணச்சொல்லும்; காலையிலே மொர்தெகாயை அதிலே தூக்கிப்போடும்படி ராஜாவிடத்தில் கேளும். பின்பு சந்தோஷமாய் ராஜாவோடேகூட விருந்துக்குப் போம்” என்றார்கள். இந்த யோசனை ஆமானுக்கு நன்றாய்த் தோன்றி, அந்தத் தூக்குமரத்தை உண்டுபண்ணுவித்தான்.