யூதர்களை அழிக்க ஆமான் சூழ்ச்சி செய்கிறான்
3 1இதற்குப்பின்பு, அகாகியனான அம்மெதாத்தாவின் மகன் ஆமானை ராஜாவாகிய அகாஸ்வேரு உயர்த்தி, அவனைச் சிறப்பித்து, தன்னோடிருந்த எல்லாப் பிரபுக்களைப் பார்க்கிலும் அவனுடைய இருக்கையை உயர்த்தி வைத்தான். 2ராஜாவின் அரமனை வாசலில் இருந்த ராஜாவின் ஊழியக்காரர் எல்லாரும், ராஜா கட்டளையிட்டபடி, ஆமானுக்கு முன்பாக முழங்கால்படியிட்டு வணங்கினார்கள்; ஆனால் மொர்தெகாய் முழங்கால்படியிடவுமில்லை, வணங்கவுமில்லை. 3அப்பொழுது ராஜாவின் அரமனை வாசலில் இருந்த ராஜாவின் ஊழியக்காரர் மொர்தெகாயை நோக்கி, “நீ ஏன் ராஜாவின் கட்டளையை மீறுகிறாய்?” என்று கேட்டார்கள். 4அவர்கள் நாள்தோறும் அவனை வற்புறுத்தியும் அவன் கேளாதிருந்தான்; ஆகையால், தான் யூதன் என்று அவன் அவர்களுக்குச் சொல்லியிருந்தபடியால், மொர்தெகாயின் நிலைப்பாடு நிலைநிற்குமோ என்று பார்க்கும்படி, அவர்கள் ஆமானுக்கு அறிவித்தார்கள். 5மொர்தெகாய் தனக்கு முழங்கால்படியிடவும் வணங்கவும் இல்லை என்று ஆமான் கண்டபோது, அவன் மூர்க்கம் நிறைந்தவனானான். 6மொர்தெகாய் எந்த மக்களைச் சேர்ந்தவன் என்று அவர்கள் தனக்குச் சொல்லியிருந்தபடியால், மொர்தெகாயை மாத்திரம் கொல்வது அவனுக்கு அற்பமாகத் தோன்றியது; ஆகையால் அகாஸ்வேருவின் ராஜ்யம் முழுவதிலுமுள்ள மொர்தெகாயின் மக்களாகிய யூதர்கள் எல்லாரையும் அழிக்க ஆமான் வகைதேடினான்.
7ராஜாவாகிய அகாஸ்வேருவின் பன்னிரண்டாம் ஆண்டில், நிசான் என்னும் முதலாம் மாதத்திலே, ஒவ்வொரு நாளுக்காகவும் ஒவ்வொரு மாதத்துக்காகவும் ஆமானுக்கு முன்பாகப் பூர் என்னும் சீட்டைப் போட்டார்கள்; சீட்டு ஆதார் என்னும் பன்னிரண்டாம் மாதத்தின்மேல் விழுந்தது. 8ஆமான் ராஜாவாகிய அகாஸ்வேருவை நோக்கி, “உம்முடைய ராஜ்யத்தின் எல்லா நாடுகளிலுமுள்ள மக்களுக்குள்ளே சிதறடிக்கப்பட்டு பிரிந்திருக்கிற ஒரு ஜனம் உண்டு. அவர்களுடைய சட்டங்கள் மற்ற எல்லா மக்களுடைய சட்டங்களுக்கும் வேறாயிருக்கிறது; அவர்கள் ராஜாவின் சட்டங்களைக் கடைப்பிடிக்கிறதுமில்லை; ஆகையால் அவர்களைச் சகித்திருக்கிறது ராஜாவுக்கு ஒரு பிரயோஜனமுமில்லை. 9ராஜாவுக்கு நலமாகத் தோன்றினால், அவர்களை அழிக்கும்படி எழுதப்படட்டும்; நான் ராஜ கஜானாவுக்காக முந்நூற்று எழுபத்தைந்து டன் வெள்ளியை ராஜாவின் அதிகாரிகளின் கைகளில் நிறுத்துக்கொடுப்பேன்” என்றான்.
10அப்பொழுது ராஜா தன் கையிலிருந்த முத்திரை மோதிரத்தைக் கழற்றி, யூதர்களின் பகைஞனாகிய அகாகியனான அம்மெதாத்தாவின் மகன் ஆமானுக்குக் கொடுத்து, 11ராஜா ஆமானை நோக்கி, “வெள்ளி உனக்கே இருக்கட்டும், அந்த ஜனமும் உனக்கே; உன் இஷ்டப்படி அவர்களுக்குச் செய்” என்றான்.
12முதலாம் மாதத்தின் பதின்மூன்றாம் நாளிலே ராஜாவின் எழுத்தாளர் அழைக்கப்பட்டார்கள்; ஆமான் கட்டளையிட்டபடியெல்லாம், ராஜாவின் தேசாதிபதிகளுக்கும், ஒவ்வொரு நாட்டின்மேலுள்ள அதிபதிகளுக்கும், ஒவ்வொரு ஜனத்தின் பிரபுக்களுக்கும், அந்தந்த நாட்டின் எழுத்திலும், அந்தந்த ஜனத்தின் மொழியிலும் எழுதப்பட்டது; ராஜாவாகிய அகாஸ்வேருவின் நாமத்தினாலே அது எழுதப்பட்டு, அவனுடைய முத்திரை மோதிரத்தினால் முத்திரையிடப்பட்டது. 13ஆதார் என்னும் பன்னிரண்டாம் மாதத்தின் பதின்மூன்றாம் தேதியாகிய ஒரே நாளிலே, வாலிபர் முதல் விருத்தர் வரைக்கும், ஸ்திரீகளும் பிள்ளைகளுமான யூதர்கள் எல்லாரையும் அழிக்கவும், கொல்லவும், நிர்மூலமாக்கவும், அவர்களுடைய பொருள்களைக் கொள்ளையிடவும் கட்டளையிட்டு, தபால்காரர் மூலமாய் ராஜாவின் எல்லா நாடுகளுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டன. 14அந்த நாளுக்கு அவர்கள் ஆயத்தமாயிருக்கும்படி, அந்தக் கட்டளையின் ஒரு பிரதி ஒவ்வொரு நாட்டிலும் சட்டமாகப் பிறப்பிக்கப்பட்டு, எல்லா மக்களுக்கும் தெரியப்படுத்தப்படவேண்டியதாயிருந்தது. 15ராஜாவின் கட்டளையின்படி தபால்காரர் தீவிரமாகப் புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரமனையிலே பிறப்பிக்கப்பட்டது. ராஜாவும் ஆமானும் மதுபானம் அருந்த உட்கார்ந்தார்கள்; ஆனால் சூசான் நகரமோ கலக்கமடைந்திருந்தது.