எல்லாவற்றிற்கும் ஒரு காலம்
3 1ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு, வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு சமயமுண்டு: 2பிறக்க ஒரு காலம், இறக்க ஒரு காலம்; நடவு நடுவதற்கு ஒரு காலம், நடப்பட்டதைப் பிடுங்குவதற்கு ஒரு காலம்; 3கொல்ல ஒரு காலம், குணமாக்க ஒரு காலம்; இடித்துப்போட ஒரு காலம், கட்டியெழுப்ப ஒரு காலம்; 4அழ ஒரு காலம், சிரிக்க ஒரு காலம்; துக்கங்கொண்டாட ஒரு காலம், நடனமாட ஒரு காலம்; 5கல்லெறிந்து விடுவதற்கு ஒரு காலம், கல்களைச் சேர்த்துக்கொள்வதற்கு ஒரு காலம்; அணைத்துக்கொள்ள ஒரு காலம், அணைப்பதைவிட்டு விலகுவதற்கு ஒரு காலம்; 6தேட ஒரு காலம், இழக்க ஒரு காலம்; காத்துவைக்க ஒரு காலம், எறிந்துவிட ஒரு காலம்; 7கிழிக்க ஒரு காலம், தைக்க ஒரு காலம்; மௌனமாயிருக்க ஒரு காலம், பேச ஒரு காலம்; 8நேசிக்க ஒரு காலம், பகைக்க ஒரு காலம்; யுத்தத்திற்கு ஒரு காலம், சமாதானத்திற்கு ஒரு காலம்.
9வேலைசெய்கிறவனுக்கு அவனுடைய பிரயாசத்தினால் என்ன லாபம்? 10மனுஷரை வருத்தப்படுத்தும்படி தேவன் அவர்களுக்குக் கொடுத்திருக்கிற தொழிலை நான் கண்டேன். 11அவர் ஒவ்வொன்றையும் அதினதின் காலத்தில் அழகாக்கினார்; நித்தியகாலத்தை மனுஷனுடைய இருதயத்திலும் வைத்தார்; ஆயினும் தேவன் ஆதிமுதல் அந்தமட்டும் செய்கிற செயலை ஒருவனாலும் அறிந்துகொள்ள முடியாது. 12அவர்கள் உயிரோடிருக்குமட்டும் சந்தோஷமாயிருந்து நன்மைசெய்கிறதைப்பார்க்கிலும் அவர்களுக்கு நலமானது வேறொன்றுமில்லையென்று அறிந்தேன். 13மேலும், ஒவ்வொரு மனுஷனும் புசித்துக் குடித்து, தன் வேலையிலெல்லாம் திருப்தியடைவதும் தேவனுடைய வரமே. 14தேவன் செய்கிறதெல்லாம் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; அதனோடே ஒன்றும் கூட்டவும் கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவும் கூடாது என்று அறிந்தேன்; மனுஷர் தமக்கு முன்பாகப் பயந்திருக்கும்படியே அவர் இப்படிச் செய்தார். 15இருக்கிறது முன்னமே இருந்தது; இனி வருவதும் முன்னமே இருந்தது; கடந்து போனதைத் தேவன் தேடிக் கேட்கிறார்.
நியாயத்தின் இடத்தில் அநீதி
16மேலும், நியாயத்தீர்ப்பின் இடத்தில் அநீதியும், நீதியின் இடத்தில் அக்கிரமமும் இருப்பதைச் சூரியனுக்குக் கீழே நான் கண்டேன். 17“நீதிமானையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார்; ஏனெனில் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு செயலுக்கும் அங்கே ஒரு காலமுண்டு” என்று என் இருதயத்தில் சொல்லிக்கொண்டேன். 18“மனுஷர் தாங்கள் மிருகங்களைப்போலவே இருக்கிறார்களென்று காணும்படி தேவன் அவர்களைச் சோதிக்கிறார்” என்று என் இருதயத்தில் சொல்லிக்கொண்டேன். 19மனுஷருக்கும் மிருகங்களுக்கும் ஒரே கதிதான்: ஒன்று சாகிறதுபோல மற்றதும் சாகிறது; இரண்டுக்கும் சுவாசம் ஒன்றே. மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷனுக்கு மேன்மையொன்றுமில்லை—எல்லாம் மாயையே. 20எல்லாம் ஒரே இடத்திற்குப் போகிறது; எல்லாம் மண்ணிலிருந்து உண்டானது, எல்லாம் திரும்ப மண்ணுக்கே போகிறது. 21மனுஷனுடைய ஆவி மேலே ஏறுகிறதோ, மிருகத்தின் ஆவி பூமிக்குள்ளே இறங்குகிறதோ என்பதை அறிகிறவன் யார்? 22ஆகையால் மனுஷன் தன் கிரியைகளில் சந்தோஷப்படுகிறதைப்பார்க்கிலும் நலமானது வேறொன்றுமில்லையென்று கண்டேன்; அதுவே அவனுடைய பங்கு. தனக்குப்பின் வரப்போகிறதை அவனுக்குக் காண்பிக்கத்தக்கவன் யார்?