எண்ணெயில் செத்த ஈக்கள்
10 1செத்த ஈக்கள் வாசனைத் தைலக்காரனின் எண்ணெயை நாற்றமடையச்செய்து புளிக்கச்செய்கின்றன; அப்படியே சிறிதளவு மதியீனமும் ஞானத்தையும் மேன்மையையும் மிஞ்சிவிடுகிறது. 2ஞானியின் இருதயம் அவனுடைய வலதுபுறமாய்ச் சாய்கிறது, மூடனின் இருதயமோ அவனுடைய இடதுபுறமாய்ச் சாய்கிறது. 3மூடன் வழியில் நடந்துபோகும்போதுங்கூட, அவனுக்குப் புத்தி குறைவாயிருக்கிறது, தான் ஒரு மூடன் என்பதை எல்லாருக்கும் காண்பிக்கிறான். 4அதிபதியின் கோபம் உனக்கு விரோதமாய் எழும்பினால், உன் நிலையைவிட்டு விலகாதே, ஏனெனில் அமைதியானது பெரிய குற்றங்களை அடங்கச்செய்யும்.
5சூரியனுக்குக் கீழே நான் கண்ட ஒரு தீமை உண்டு, அது அதிபதியிடமிருந்து வரும் ஒருவகைத் தவறு: 6மதியீனம் அநேக உயர்ந்த இடங்களில் வைக்கப்படுகிறது, ஐசுவரியவான்களோ தாழ்ந்த இடங்களில் உட்காருகிறார்கள். 7அடிமைகள் குதிரைகள்மேல் ஏறிச்செல்வதையும், பிரபுக்கள் அடிமைகளைப்போல் கால்நடையாய் நடந்துபோவதையும் நான் கண்டேன். 8படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழக்கூடும், மதிலை இடித்துப் புகுகிறவனைப் பாம்பு கடிக்கக்கூடும். 9கல்லுகளை உடைக்கிறவன் அவைகளால் காயப்படக்கூடும், மரங்களைப் பிளக்கிறவன் அவைகளால் ஆபத்துக்குள்ளாகக்கூடும். 10கோடரி மழுங்கியிருந்து அதின் வாய் தீட்டப்படாதிருந்தால், அதிக பலத்தைச் செலுத்தவேண்டியிருக்கும்; ஞானமோ வெற்றியைத் தரும்.
11மந்திரிக்கப்படுவதற்கு முன்னே பாம்பு கடித்தால், மந்திரவாதிக்கு யாதொரு பிரயோஜனமுமில்லை. 12ஞானியின் வார்த்தைகள் அவனுக்குத் தயவைப் பெற்றுத்தரும், மூடனின் உதடுகளோ அவனையே விழுங்கிவிடும். 13அவனுடைய வார்த்தைகளின் ஆரம்பம் மதியீனம், அவனுடைய பேச்சின் முடிவோ கொடிய பயித்தியம். 14ஆனாலும் மூடன் பேசிக்கொண்டேயிருக்கிறான். வரப்போவது இன்னதென்று ஒருவனும் அறியான், அவனுக்குப்பின் சம்பவிப்பது இன்னதென்று அவனுக்கு எவன் அறிவிப்பான்?
15மூடர் தங்கள் வேலையினால் தங்களையே இளைப்பாக்கிக்கொள்கிறார்கள், ஏனெனில் ஊருக்குப் போகும் வழியைக்கூட அவர்கள் அறியார்கள். 16தேசமே, உன் ராஜா ஒரு சிறுபிள்ளையாயிருந்து, உன் பிரபுக்கள் காலையிலே விருந்துண்ணும்போது உனக்கு ஐயோ. 17தேசமே, உன் ராஜா குலீனர்களின் மகனாயிருந்து, உன் பிரபுக்கள் தகுந்த வேளையிலே விருந்துண்ணும்போது— பலத்துக்காக, மதுவெறிக்கு அல்ல, நீ பாக்கியவானாயிருக்கிறாய். 18சோம்பலினால் மேல்விட்டங்கள் தாழ்ந்துவிடும், கைகள் சும்மாயிருப்பதினால் வீடு ஒழுகும். 19நகைப்புக்காக அப்பம் செய்யப்படுகிறது, திராட்சரசம் ஜீவனை மகிழ்ச்சியாக்குகிறது, பணமோ எல்லாவற்றிற்கும் உத்தரவாகிறது. 20உன் நினைவிலும் ராஜாவைச் சபியாதே, உன் படுக்கையறையிலும் ஐசுவரியவானைச் சபியாதே, ஏனெனில் ஆகாயத்துப் பறவை உன் சொல்லைக் கொண்டுபோகும், சிறகுள்ள ஒரு ஜந்து நீ சொல்வதை அறிவிக்கும்.