மலையின்மேல் மோசே
34 1பின்பு மோசே மோவாபின் சமபூமிகளிலிருந்து நேபோ மலைக்கும், எரிகோவுக்கு எதிரேயுள்ள பிஸ்காவின் சிகரத்திற்கும் ஏறிப்போனான்; அங்கே எங்கள் பிதா அவனுக்குக் கீலேயாத் தொடங்கி தாண்வரையுள்ள தேசம் முழுவதையும், 2நப்தலி முழுவதையும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் தேசத்தையும், மேற்கே இருக்கும் கடல்வரையுள்ள யூதாவின் தேசம் முழுவதையும், 3தென்திசையையும், பேரீச்சமரங்களின் நகரமாகிய எரிகோவின் பள்ளத்தாக்கான சமபூமியையும் சோவார்வரைக்கும் காண்பித்தார்.
4அப்பொழுது எங்கள் பிதா அவனை நோக்கி: “‘உன் சந்ததிக்கு இதைக் கொடுப்பேன்’ என்று நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுச் சொன்ன தேசம் இதுவே; இதை உன் கண்களால் காணும்படி செய்தேன், ஆனாலும் நீ அதற்குள் பிரவேசிக்கமாட்டாய்” என்றார்.
5அப்படியே எங்கள் பிதாவின் ஊழியக்காரனாகிய மோசே, எங்கள் பிதா சொல்லியிருந்தபடியே, மோவாப் தேசத்தில் அங்கே மரணமடைந்தான். 6எங்கள் பிதா அவனை மோவாப் பள்ளத்தாக்கிலே பெத்பெயோருக்கு எதிரே அடக்கம் பண்ணினார்; ஆனாலும் இந்நாள்வரைக்கும் அவன் அடக்கம்பண்ணப்பட்ட இடத்தை ஒருவரும் அறியார். 7மோசே மரணமடையும்போது நூற்றிருபது வயதாயிருந்தான்; அவன் கண்கள் மங்கிப்போகவுமில்லை, அவன் வீரியம் குறைந்துபோகவுமில்லை. 8இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமபூமிகளிலே மோசேக்காக முப்பது நாள் அழுது, துக்கங்கொண்டாடின நாட்கள் முடியும்வரைக்கும் புலம்பினார்கள். 9நூனின் குமாரனாகிய யோசுவா ஞானத்தின் ஆவியால் நிறைந்திருந்தான்; ஏனெனில் மோசே தன் கைகளை அவன்மேல் வைத்திருந்தான். இஸ்ரவேல் புத்திரர் அவனுக்குச் செவிகொடுத்து, எங்கள் பிதா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள். 10எங்கள் பிதா முகமுகமாய் அறிந்திருந்த மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசியும் அதற்குப்பின்பு இஸ்ரவேலில் எழும்பினதில்லை; 11எங்கள் பிதா அவனை எகிப்து தேசத்தில் பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசம் முழுவதற்கும் விரோதமாய்ச் செய்யும்படி அனுப்பின எல்லா அடையாளங்களையும் அற்புதங்களையும், 12மோசே இஸ்ரவேலர் அனைவருடைய கண்களுக்கு முன்பாகச் செய்த பலத்த கரத்தின் செயல்கள் அனைத்தையும், பயங்கரமான பெரிய செயல்கள் அனைத்தையும் அவன்போல் ஒருவரும் செய்ததில்லை.