உன் சகோதரன் இழந்ததைக் கவனித்துக்கொள்ளுதல்
22 1உன் சகோதரனுடைய மாடோ ஆடோ வழிதப்பிப் போவதைக் கண்டும் அசட்டைபண்ணாதே; அவைகளை உன் சகோதரனிடத்தில் நிச்சயமாய்த் திரும்பச் சேர்ப்பிக்கவேண்டும். 2உன் சகோதரன் உனக்கு அருகில் இல்லாவிட்டாலோ, அல்லது அவனை நீ அறியாதிருந்தாலோ, அதை உன் வீட்டிற்குக் கொண்டுவந்து, உன் சகோதரன் அதைத் தேடிவரும்வரைக்கும் உன்னிடத்தில் வைத்திரு; பின்பு அதை அவனிடத்தில் திரும்பக் கொடுத்துவிடு. 3அப்படியே அவனுடைய கழுதைக்கும் செய்; அப்படியே அவனுடைய வஸ்திரத்திற்கும் செய்; உன் சகோதரன் இழந்து நீ கண்டெடுக்கும் எந்தப் பொருளுக்கும் அப்படியே செய்; அதை அசட்டைபண்ணக்கூடாது. 4உன் சகோதரனுடைய கழுதையோ மாடோ வழியில் விழுந்துகிடப்பதைக் கண்டும் அசட்டைபண்ணாதே; அதைத் தூக்கிவிட அவனுக்கு நிச்சயமாய் உதவிசெய்யவேண்டும்.
5பெண் ஆண்களுடைய உடையை அணியக்கூடாது, ஆணும் பெண்ணுடைய உடையை அணியக்கூடாது; இப்படிச் செய்கிற எவனும் உங்கள் பிதாவுக்கு அருவருப்பானவன்.
6வழியில் ஒரு பறவையின் கூடு எந்த மரத்திலாவது தரையிலாவது காணப்பட்டு, அதில் குஞ்சுகளோ முட்டைகளோ இருந்து, தாய்ப்பறவை குஞ்சுகளின்மேலோ முட்டைகளின்மேலோ அடைகாத்திருந்தால், அந்தத் தாயைக் குஞ்சுகளோடேகூடப் பிடித்துக்கொள்ளாதே. 7தாயை அவசியம் விட்டுவிடு; குஞ்சுகளையோ உனக்கென்று எடுத்துக்கொள்; அப்பொழுது உனக்கு நன்மையுண்டாகி, உன் நாட்கள் நீடித்திருக்கும்.
8நீ ஒரு புதிய வீட்டைக் கட்டும்போது, யாராவது அதின்மேலிருந்து விழுந்து உன் வீட்டின்மேல் இரத்தப்பழி சுமராதபடிக்கு, உன் வீட்டின் மேல்தளத்திற்குச் சுற்றுச்சுவர் எழுப்பு.
9உன் திராட்சத்தோட்டத்தில் கலப்பான விதையை விதைக்காதே; விதைத்த விதையும் திராட்சத்தோட்டத்தின் பலனும் ஆகிய முழு விளைச்சலும் பறிமுதலாகிப்போகும். 10மாட்டையும் கழுதையையும் ஒன்றாய்ப் பூட்டி உழக்கூடாது. 11ஆட்டுரோமமும் சணல்நூலும் கலந்து நெய்யப்பட்ட வஸ்திரத்தை அணியக்கூடாது.
12நீ போர்த்திக்கொள்ளும் மேலங்கியின் நான்கு ஓரங்களிலும் தொங்கல்களை வை.
விவாக உடன்படிக்கையைக் கனம்பண்ணுதல்
13ஒருவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, அவளோடே சேர்ந்தபின்பு அவளை வெறுத்து, 14"இந்தப் பெண்ணை நான் விவாகம்பண்ணி, அவளிடத்தில் சேர்ந்தபோது அவளுடைய கன்னிமையின் அடையாளத்தை நான் காணவில்லை" என்று சொல்லி, அவள்மேல் வெட்கக்கேடான குற்றம் சாட்டி, அவளுக்கு துர்ப்பெயர் உண்டாக்கினால், 15அந்த வாலிபப் பெண்ணின் தகப்பனும் தாயும் அவளுடைய கன்னிமையின் அடையாளத்தை எடுத்து, நகர வாசலில் இருக்கிற மூப்பர்களிடத்தில் கொண்டுவரவேண்டும். 16அந்த வாலிபப் பெண்ணின் தகப்பன் மூப்பர்களை நோக்கி: "நான் என் மகளை இந்த மனுஷனுக்கு மனைவியாகக் கொடுத்தேன்; இவன் அவளை வெறுக்கிறான். 17இதோ, ‘உன் மகளிடத்தில் கன்னிமையின் அடையாளத்தை நான் காணவில்லை’ என்று சொல்லி, இவன் அவள்மேல் வெட்கக்கேடான குற்றம் சாட்டியிருக்கிறான்; ஆனாலும், என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் இதோ இருக்கிறது" என்று சொல்லி, நகர மூப்பர்களுக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை விரிக்கக்கடவர்கள். 18அப்பொழுது அந்த நகர மூப்பர்கள் அந்த மனுஷனைப் பிடித்து, அவனைத் தண்டித்து, 19அவன் இஸ்ரவேலின் ஒரு கன்னிகைக்கு துர்ப்பெயர் உண்டாக்கினபடியால், அவனிடத்தில் ஏறக்குறைய ஒரு வருஷ சம்பளத்திற்குச் சரியான வெள்ளியை அபராதமாக வாங்கி, அந்த வாலிபப் பெண்ணின் தகப்பனுக்குக் கொடுக்கக்கடவர்கள்; அவள் அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவளைத் தள்ளிவிடக்கூடாது.
20ஆனாலும், அந்தக் குற்றச்சாட்டு உண்மையாயிருந்து, அந்த வாலிபப் பெண்ணின் கன்னிமையின் அடையாளம் காணப்படாமற்போனால், 21அந்த வாலிபப் பெண்ணை அவளுடைய தகப்பன் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கொண்டுவரவேண்டும்; அவள் தன் தகப்பன் வீட்டில் வேசித்தனம்பண்ணி, இஸ்ரவேலிலே இழிவான காரியத்தைச் செய்தபடியால், அவளுடைய நகர மனுஷர் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள். இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து அகற்றிப்போடு.
22ஒருவன் மற்றொருவனுடைய மனைவியோடே சயனித்திருக்கக் கண்டுபிடிக்கப்பட்டால், அவளோடே சயனித்த மனுஷனும் அந்தப் பெண்ணும் ஆகிய இருவரும் சாகவேண்டும். இப்படியே இஸ்ரவேலிலிருந்து தீமையை அகற்றிப்போடு. 23ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்ட கன்னிகையான ஒரு வாலிபப் பெண்ணை, வேறொருவன் நகரத்திலே கண்டு, அவளோடே சயனித்தால், 24அவ்விருவரையும் அந்த நகர வாசலுக்குக் கொண்டுவந்து கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்; அந்த வாலிபப் பெண் நகரத்தில் இருந்தும் உதவிக்காகக் கூப்பிடாதபடியாலும், அந்த மனுஷன் தன் அயலானுடைய மனைவியைக் கற்பழித்தபடியாலும் தான். இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து அகற்றிப்போடு. 25ஆனாலும், நியமிக்கப்பட்ட அந்த வாலிபப் பெண்ணை ஒருவன் வெளியிலே கண்டு, அவளைப் பிடித்து, அவளோடே சயனித்தால், அவன்மாத்திரம் சாகவேண்டும். 26அந்த வாலிபப் பெண்ணுக்கு ஒன்றும் செய்யாதே; அவளுக்கு மரணத்திற்குரிய பாவம் இல்லை; ஒருவன் தன் அயலான்மேல் பாய்ந்து அவனைக் கொலைசெய்கிற காரியத்திற்கு இது ஒப்பாயிருக்கிறது. 27ஏனெனில், அவன் அவளை வெளியிலே கண்டான்; நியமிக்கப்பட்ட அந்த வாலிபப் பெண் கூப்பிட்டும், அவளை இரட்சிப்பார் ஒருவரும் இல்லாதிருந்தது. 28நியமிக்கப்படாத ஒரு கன்னிகையான வாலிபப் பெண்ணை ஒருவன் கண்டு, அவளைப் பிடித்து, அவளோடே சயனித்திருக்கையில், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், 29அவளோடே சயனித்த அந்த மனுஷன் அந்த வாலிபப் பெண்ணின் தகப்பனுக்கு ஏறக்குறைய அரை வருஷ சம்பளத்திற்குச் சரியான வெள்ளியைக் கொடுக்கவேண்டும்; அவன் அவளைக் கற்பழித்தபடியால், அவள் அவனுக்கு மனைவியாவாள்; அவன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவளைத் தள்ளிவிடக்கூடாது. 30ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை விவாகம்பண்ணக்கூடாது; தன் தகப்பனுடைய விவாக மஞ்சத்தைக் கனவீனப்படுத்தக்கூடாது.