பிதாவானவர் தம்முடைய உடன்படிக்கையைப் புதுப்பிக்கிறார்
10 1அக்காலத்திலே எங்கள் பிதா என்னை நோக்கி, “முந்தினவைகளைப்போல இரண்டு கற்பலகைகளை வெட்டி, மலையின்மேல் என்னிடத்தில் ஏறிவா; மரத்தினால் ஒரு பெட்டியையும் செய்” என்றார். 2நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் இந்தப் பலகைகளில் எழுதுவேன்; அவைகளை நீ அந்தப் பெட்டியிலே வைக்கவேண்டும்” என்றார்.
3அப்படியே நான் சீத்திம் மரத்தால் ஒரு பெட்டியைச் செய்து, முந்தினவைகளைப்போல இரண்டு கற்பலகைகளை வெட்டி, அந்த இரண்டு பலகைகளையும் என் கையில் எடுத்துக்கொண்டு மலையின்மேல் ஏறினேன். 4சபை கூடின நாளிலே எங்கள் பிதா மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுக்குச் சொன்ன பத்துக் கற்பனைகளை, முன்பு எழுதியதுபோலவே, அவர் அந்தப் பலகைகளில் எழுதினார்; எங்கள் பிதா அவைகளை என்னிடத்தில் ஒப்புவித்தார். 5நான் திரும்பி, மலையிலிருந்து இறங்கி, நான் செய்த பெட்டியிலே அந்தப் பலகைகளை வைத்தேன்; எங்கள் பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே அவைகள் அங்கே இருக்கிறது.
6இஸ்ரவேல் மக்கள் பெனெயாக்கானுக்குரிய பேரோத்திலிருந்து மோசெராவுக்குப் பயணம்பண்ணினார்கள்; அங்கே ஆரோன் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய குமாரனாகிய எலெயாசார் அவனுக்குப் பதிலாக ஆசாரிய ஊழியம் செய்தான். 7அங்கேயிருந்து அவர்கள் குத்கோதாவுக்கும், குத்கோதாவிலிருந்து நீரோடைகளுள்ள தேசமாகிய யோத்பாத்துக்கும் பயணம்பண்ணினார்கள். 8அக்காலத்திலே எங்கள் பிதா, உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கவும், தமக்குமுன் நிற்கவும், தமக்கு ஊழியம்செய்யவும், தம்முடைய நாமத்தினாலே ஆசீர்வதிக்கவும் லேவி கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார்; இந்நாள்வரைக்கும் அவர்கள் அப்படியே செய்கிறார்கள். 9ஆகையால் லேவிக்கு அவனுடைய சகோதரரோடே பங்கும் சுதந்தரமும் இல்லை; எங்கள் பிதா அவனுக்கு வாக்குப்பண்ணியபடியே, எங்கள் பிதாவே அவனுடைய சுதந்தரம்.
10நான் முதல்முறையைப்போல நாற்பது பகலும் நாற்பது இரவும் மலையிலே தங்கியிருந்தேன்; எங்கள் பிதா அந்த முறையும் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; எங்கள் பிதா உங்களை அழிக்க மனதில்லாதிருந்தார்.
11பின்பு எங்கள் பிதா என்னை நோக்கி, “நீ எழுந்து மக்களுக்கு முன்பாகப் புறப்பட்டுப்போ; நான் அவர்களுடைய பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தில் அவர்கள் பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக” என்றார்.
எங்கள் பிதா உங்களிடம் கேட்பது என்ன
12இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய எங்கள் பிதாவுக்குப் பயந்து, அவருடைய எல்லா வழிகளிலும் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவருக்கு ஊழியம்செய்து, 13உன் நன்மைக்காக இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற எங்கள் பிதாவின் கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளவேண்டும் என்பதைத் தவிர, அவர் உன்னிடத்தில் வேறே என்ன கேட்கிறார்? 14இதோ, வானங்களும், வானாதி வானங்களும், பூமியும், அதிலுள்ள யாவும் எங்கள் பிதாவுடையவைகளே. 15ஆயினும் எங்கள் பிதா உன் பிதாக்கள்மேல் அன்புகூர்ந்து, அவர்களுக்குப் பின்வந்த அவர்களுடைய சந்ததியாகிய உங்களை, இந்நாளில் இருக்கிறதுபோல, சகல ஜனங்களுக்கும் மேலாகத் தெரிந்துகொண்டார். 16ஆகையால் உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணி, இனிமேல் கடினக்கழுத்துள்ளவர்களாய் இராதேயுங்கள். a a v16 “இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுதல்” என்பது, இருதயத்தைப் பிடிவாதமாகவும் அடைபட்டதாகவும் ஆக்குகிற அனைத்தையும் அறுத்தெறிந்து, அதை எங்கள் பிதாவுக்கு முழுமையாய்த் திறந்துவைப்பதைச் சித்தரிக்கிறது. 17எங்கள் பிதா தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், பட்சபாதம் காட்டாதவரும், லஞ்சம் வாங்காதவருமான மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனாயிருக்கிறார். 18அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறார்; அந்நியனிடத்தில் அன்புகூர்ந்து, அவனுக்கு அன்னமும் ஆடையும் கொடுக்கிறார். 19ஆகையால் நீங்களும் அந்நியனிடத்தில் அன்புகூரவேண்டும்; ஏனெனில் நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராயிருந்தீர்கள். 20உன் தேவனாகிய எங்கள் பிதாவுக்குப் பயந்து, அவருக்கு ஊழியம்செய்து, அவரைப் பற்றிக்கொண்டு, அவருடைய நாமத்தைக்கொண்டே ஆணையிடுவாயாக. 21அவரே உன் புகழ்ச்சி; உன் கண்கள் கண்ட இந்த மகத்துவமும் பயங்கரமுமான காரியங்களை உனக்குச் செய்த உன் பிதா அவரே. 22உன் பிதாக்கள் எழுபது பேராய் எகிப்துக்குப் போனார்கள்; இப்பொழுதோ எங்கள் பிதா உன்னை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகச்செய்தார்.