வாசியுங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள். பரிந்துரையுங்கள்.

♥ மதிப்புரைகள்

அப்போஸ்தலர் 9

புத்தகம்

குமாரன் தம்மைத் துன்பப்படுத்துகிறவனைச் சந்திக்கிறார்

அதிகாரம் 9.

சவுலோ, கர்த்தருடைய சீஷருக்கு விரோதமாய் இன்னமும் பயமுறுத்தலையும் கொலையையும் மூச்செறிந்துகொண்டு, பிரதான ஆசாரியனிடத்திற்குப் போய், இந்த மார்க்கத்தைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் யாரையாகிலும் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்கு அவனிடத்தில் கடிதங்களைக் கேட்டான். a a v2 “இந்த மார்க்கம்” என்பது, கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுவதற்குமுன், இயேசுவைப் பின்பற்றினவர்களுக்கு வழங்கப்பட்ட ஆதி நாமமாயிருந்தது. அவன் பிரயாணம்பண்ணித் தமஸ்குவுக்குச் சமீபமாய் வந்தபோது, சடிதியில் வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிலும் பிரகாசித்தது.

அவன் தரையிலே விழுந்து, “சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?” என்று தன்னிடத்தில் சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.

அதற்கு அவன், “ஆண்டவரே, நீர் யார்?” என்றான். அதற்கு அவர், “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.

ஆனாலும் நீ எழுந்து, நகரத்திற்குள் போ; நீ செய்யவேண்டியது உனக்குச் சொல்லப்படும்” என்றார்.

அவனோடேகூடப் பிரயாணம்பண்ணின மனிதர் அந்தச் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையும் காணாமல், பேசமுடியாமல் நின்றார்கள். சவுல் தரையிலிருந்து எழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒன்றையும் காணவில்லை; ஆகையால் அவர்கள் அவனைக் கைப்பிடித்து நடத்தித் தமஸ்குவுக்குக் கொண்டுபோனார்கள். அவன் மூன்று நாள் பார்வையற்றவனாயிருந்து, புசிக்கவுமில்லை குடிக்கவுமில்லை.

தமஸ்குவிலே அனனியா என்னும் பேருள்ள ஒரு சீஷன் இருந்தான். அவனைக் கர்த்தர் ஒரு தரிசனத்தில், “அனனியாவே” என்றார். அவன், “இதோ, இருக்கிறேன், ஆண்டவரே” என்றான்.

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி, “நீ எழுந்து, நேர்த்தெரு என்னப்பட்ட வீதிக்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; இதோ, அவன் ஜெபம்பண்ணுகிறான். அனனியா என்னும் பேருள்ள ஒரு மனிதன் தன்னிடத்தில் வந்து, தான் திரும்பப் பார்வையடையும்படி தன்மேல் கைகளை வைக்கிறதை அவன் தரிசனத்தில் கண்டான்” என்றார்.

அதற்கு அனனியா, “ஆண்டவரே, இந்த மனிதனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டேன்; இவன் எருசலேமிலே உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ தீங்குசெய்தான். இங்கேயும் உம்முடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையும் கட்டும்படிக்குப் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறான்” என்றான்.

அதற்குக் கர்த்தர் அவனை நோக்கி, “நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். என்னுடைய நாமத்தினிமித்தம் இவன் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டும் என்பதை நான் இவனுக்குக் காண்பிப்பேன்” என்றார்.

அப்பொழுது அனனியா போய், வீட்டிற்குள் பிரவேசித்து, அவன்மேல் கைகளை வைத்து, “சகோதரனாகிய சவுலே, நீ திரும்பப் பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்படிக்கும், நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர் என்னை அனுப்பினார்” என்றான். உடனே அவன் கண்களிலிருந்து மீன்செதிள்போன்ற ஏதோ விழுந்தது; அவன் திரும்பப் பார்வையடைந்து, எழுந்து, ஞானஸ்நானம் பெற்றான். பின்பு அவன் போஜனம்பண்ணிப் பலனடைந்தான். சவுல் தமஸ்குவிலிருந்த சீஷரோடே சிலநாள் தங்கியிருந்து, உடனே ஜெப ஆலயங்களில் இயேசுவே எங்கள் பிதாவின் குமாரன் என்று அவரைக்குறித்துப் பிரசங்கித்தான். கேட்டவர்கள் எல்லாரும் ஆச்சரியப்பட்டு, “இந்த நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவர்களை எருசலேமிலே பாழாக்கினவன் இவன் அல்லவா? இவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்தில் கொண்டுபோகும்படிக்கல்லவா இங்கேயும் வந்தான்?” என்றார்கள்.

சவுலோ மேன்மேலும் பலப்பட்டு, இயேசுவே கிறிஸ்து என்று ஸ்தாபித்து, தமஸ்குவில் குடியிருந்த யூதரைக் கலங்கப்பண்ணினான்.

அநேகநாள் சென்றபின்பு, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள். அவர்களுடைய சதி சவுலுக்குத் தெரியவந்தது; அவனைக் கொலைசெய்யும்படி இரவும்பகலும் வாசல்களைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் சீஷர்கள் இராத்திரியிலே அவனை ஒரு கூடையில் வைத்து மதிலின் வழியாய் இறக்கிவிட்டார்கள்.

சவுல் எருசலேமுக்கு வந்து, சீஷரோடே சேர்ந்துகொள்ள முயற்சித்தான்; ஆனாலும் அவன் சீஷனென்று விசுவாசியாமல் எல்லாரும் அவனுக்குப் பயந்தார்கள். அப்பொழுது பர்னபா அவனை அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவன் வழியிலே கர்த்தரைக் கண்டதையும், அவர் அவனோடே பேசினதையும், அவன் தமஸ்குவிலே இயேசுவின் நாமத்தில் தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான். அதன்பின்பு அவன் எருசலேமிலே அவர்களோடே சுயாதீனமாய்ச் சஞ்சரித்து, கர்த்தருடைய நாமத்தில் தைரியமாய்ப் பேசி, கிரேக்கு பாஷைக்காரராகிய யூதரோடே சம்பாஷித்து வாதாடினான்; அவர்களோ அவனைக் கொலைசெய்யத் தேடினார்கள். b b v29 கிரேக்கு பாஷைக்காரர்: கிரேக்கு பாஷையையும் கலாசாரத்தையும் தழுவிக்கொண்ட கிரேக்கு பேசுகிற யூதர்கள். சகோதரர் இதை அறிந்தபோது, அவனைச் செசரியாவுக்குக் கொண்டுபோய், தர்சுவுக்கு அனுப்பிவிட்டார்கள்.

குமாரன் பேதுருவின் மூலமாய் ஐனேயாவைச் சொஸ்தமாக்குகிறார்

அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்குமுள்ள சபை சமாதானமடைந்து, பலப்பட்டு, கர்த்தருக்குப் பயந்து நடந்து, பரிசுத்த ஆவியின் ஆறுதலினால் தேறி, எண்ணிக்கையில் பெருகிற்று.

பேதுரு எல்லா விசுவாசிகளிடத்திலும் சுற்றிப் பிரயாணம்பண்ணுகையில், லித்தா என்னும் ஊரில் குடியிருந்த பரிசுத்தவான்களிடத்திற்கும் போனான். அங்கே எட்டு வருஷமாய் மெத்தையிலே கிடந்த திமிர்வாதக்காரனாகிய ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனிதனைக் கண்டு, அவனை நோக்கி, “ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைச் சொஸ்தமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே சரிப்படுத்து” என்றான். உடனே அவன் எழுந்திருந்தான். லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்த யாவரும் அவனைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.

யோப்பா என்னும் பட்டணத்திலே தபீத்தாள் என்னும் பேருள்ள ஒரு சீஷி இருந்தாள்; அதற்குத் தொற்காள் என்று அர்த்தம். அவள் நற்கிரியைகளையும் தான தர்மங்களையும் மிகுதியாய்ச் செய்துவந்தாள். c c v36 தபீத்தாள் (அரமேயம்), தொற்காள் (கிரேக்கு) ஆகிய இரண்டு பேர்களுக்கும் “வெளிமான்” என்று அர்த்தம். அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு மரித்தாள்; அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டறையிலே வைத்தார்கள். லித்தா யோப்பாவுக்குச் சமீபமாயிருந்தபடியால், பேதுரு அங்கே இருக்கிறானென்று சீஷர்கள் கேள்விப்பட்டு, அவன் தாமதம்பண்ணாமல் தங்களிடத்திற்கு வரவேண்டுமென்று வேண்டிக்கொள்ள, இரண்டு மனிதரை அவனிடத்திற்கு அனுப்பினார்கள். பேதுரு எழுந்து அவர்களோடேகூடப் போனான்; அவன் வந்தபோது, அவனை மேல்வீட்டறைக்கு அழைத்துக்கொண்டுபோனார்கள். விதவைகள் எல்லாரும் அழுதுகொண்டு, தொற்காள் தங்களோடிருந்தபோது செய்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து அவனருகே நின்றார்கள். பேதுரு எல்லாரையும் வெளியே அனுப்பிவிட்டு, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, சரீரத்தினிடமாய்த் திரும்பி, “தபீத்தாளே, எழுந்திரு” என்றான். அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைக் கண்டு, உட்கார்ந்தாள். அவன் அவளுக்குக் கையைக்கொடுத்து, அவளைத் தூக்கிவிட்டு, பரிசுத்தவான்களையும் விதவைகளையும் அழைத்து, அவளை உயிரோடிருக்கக் காண்பித்தான். இது யோப்பா முழுவதிலும் அறியப்பட்டது; அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமாயிருந்தார்கள். பின்பு அவன் யோப்பாவிலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் அநேகநாள் தங்கியிருந்தான்.

A young man reading the Father's Heart Bible print edition in a coffee shop இப்போது அச்சில்

கருத்துகள்

இந்த அதிகாரம் உங்களுக்குள் எழுப்பிய எண்ணம், கேள்வி அல்லது ஒரு வார்த்தை — இங்கே பகிருங்கள். ஒவ்வொரு கருத்தும் உங்கள் பெயரைப் பங்களிப்பாளர் சுவரில் சேர்க்கிறது.

வாசிப்பது, கேட்பது, நகலெடுப்பது, பகிர்வது அனைவருக்கும் திறந்திருக்கிறது — கணக்கு தேவையில்லை. கருத்திடுவது, தனிப்படுத்துவது, உங்கள் இடத்தை நினைவில் வைப்பது இலவசக் கணக்குடன் வருகின்றன, ஒவ்வொரு கருத்தும் உங்கள் பெயரைப் பங்களிப்பாளர் சுவரில் சேர்க்கிறது.

குடும்பத்தில் இணையுங்கள் — இலவசம் →
  • இன்னும் கருத்துகள் இல்லை. உங்கள் குரலைச் சேர்க்கும் முதல் நபராக இருங்கள்.