பிதாவானவர் பேதுருவின் கைகளால் சொஸ்தமாக்குகிறார்
3 1பேதுருவும் யோவானும் ஜெபநேரமாகிய பிற்பகல் மூன்று மணியளவில் தேவாலயத்திற்குப் போய்க்கொண்டிருந்தார்கள். 2பிறவியிலேயே சப்பாணியாயிருந்த ஒரு மனிதன், தேவாலயத்திற்குள் நுழைகிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, அழகு என்னப்பட்ட தேவாலய வாசலில் அன்றாடம் சுமந்துகொண்டுவந்து வைக்கப்படுவான். 3பேதுருவும் யோவானும் தேவாலயத்திற்குள் போகிறதைக் கண்டு, அவன் அவர்களிடத்தில் பணம் கேட்டான். 4பேதுரு யோவானோடேகூட அவனை உற்றுப்பார்த்து, “எங்களை நோக்கிப்பார்” என்றான். 5அவன் அவர்களிடத்தில் எதையாவது பெற்றுக்கொள்ளலாமென்று எதிர்பார்த்து, அவர்களை கவனித்துப்பார்த்தான். 6அப்பொழுது பேதுரு: “வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை; என்னிடத்தில் உள்ளதை உனக்குத் தருகிறேன்: நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எழுந்து நட” என்றான். 7அவனை வலதுகையினால் பிடித்து எடுத்துவிட்டான்; உடனே அவனுடைய பாதங்களும் கணுக்கால்களும் பெலன்கொண்டன. 8அவன் குதித்தெழுந்து, நின்று, நடக்கத்தொடங்கி, நடந்தும் குதித்தும் எங்கள் பிதாவைத் துதித்தும், அவர்களோடேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான். 9அவன் நடக்கிறதையும் எங்கள் பிதாவைத் துதிக்கிறதையும் ஜனங்களெல்லாரும் கண்டார்கள். 10அவன் தேவாலயத்தின் அழகு என்னும் வாசலில் உட்கார்ந்து பிச்சைகேட்டவன் என்று அறிந்துகொண்டு, அவனுக்கு நேரிட்டதைக்குறித்து ஆச்சரியமும் பிரமிப்பும் நிறைந்தார்கள்.
பேதுரு பிதாவின் ஊழியக்காரரை அறிவிக்கிறார்
11சொஸ்தமான அவன் பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் மிகவும் திகைப்படைந்து, சாலொமோனுடையது என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்தில் ஓடிவந்தார்கள். 12இதைக் கண்டு பேதுரு ஜனங்களை நோக்கி: “இஸ்ரவேலரே, இதைக்குறித்து நீங்கள் ஏன் ஆச்சரியப்படுகிறீர்கள்? எங்கள் சொந்த வல்லமையினாலாவது பக்தியினாலாவது இவனை நடக்கப்பண்ணினோமென்று எங்களை ஏன் உற்றுப்பார்க்கிறீர்கள்? 13ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனும், நம்முடைய பிதாக்களுடைய தேவனுமானவர், தம்முடைய ஊழியக்காரராகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்; அவரை நீங்கள் பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்து, அவரை விடுதலையாக்க அவன் தீர்மானித்திருந்தபோது, அவனுக்கு முன்பாக மறுதலித்தீர்கள். 14பரிசுத்தரும் நீதிபரருமானவரையோ நீங்கள் மறுதலித்து, ஒரு கொலைபாதகனை உங்களுக்குத் தரும்படி கேட்டீர்கள். 15ஜீவனுக்கு அதிபதியானவரை நீங்கள் கொலைசெய்தீர்கள்; அவரை எங்கள் பிதா மரித்தோரிலிருந்து எழுப்பினார்; இதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். 16அவருடைய நாமத்தின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவருடைய நாமம் இந்த மனிதனைப் பெலப்படுத்தினது—இவனை நீங்கள் காண்கிறீர்கள், அறிந்திருக்கிறீர்கள். இயேசுவின்மேலுள்ள விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக இவனுக்கு இந்தப் பூரண சொஸ்தத்தைக் கொடுத்தது.
17“இப்பொழுதும், சகோதரரே, உங்கள் அதிகாரிகள் செய்ததுபோலவே, நீங்களும் அறியாமையினால் இதைச் செய்தீர்கள் என்று அறிந்திருக்கிறேன். 18ஆனாலும் தமது கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று சகல தீர்க்கதரிசிகளின் வாயினாலும் எங்கள் பிதா முன்னறிவித்திருந்ததை இவ்விதமாய் நிறைவேற்றினார். 19ஆகையால், உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்படிக்கு, நீங்கள் மனந்திரும்பி குணப்படுங்கள்; 20அப்பொழுது எங்கள் பிதாவின் சமுகத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்; உங்களுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிற கிறிஸ்துவாகிய இயேசுவை அவர் அனுப்புவார். 21பூர்வகாலமுதல் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாயினாலே எங்கள் பிதா எவைகளைக்குறித்துச் சொன்னாரோ, அந்த எல்லாம் மறுபடியும் சீர்ப்படுத்தப்படுங்காலம்வரை பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும். 22மோசே பிதாக்களை நோக்கி: ‘உங்கள் பிதா என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்கள் சகோதரரிலிருந்து உங்களுக்கு எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுங்கள்.’ 23அந்தத் தீர்க்கதரிசிக்குச் செவிகொடாத எந்த ஆத்துமாவும் ஜனத்தின் நடுவிலிருந்து முற்றிலும் அழிக்கப்படும்.’ 24சாமுவேல் முதல் பேசிய தீர்க்கதரிசிகளெல்லாரும் இந்த நாட்களைக்குறித்து அறிவித்தார்கள். 25நீங்கள் தீர்க்கதரிசிகளின் புத்திரரும், ‘உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்’ என்று எங்கள் பிதா ஆபிரகாமுக்குச் சொல்லி, உங்கள் பிதாக்களோடே பண்ணின உடன்படிக்கையின் புத்திரருமாயிருக்கிறீர்கள். 26எங்கள் பிதா தம்முடைய ஊழியக்காரரை எழுப்பி, உங்களில் அவனவனை அவனவனுடைய தீமைகளைவிட்டுத் திருப்புகிறதினாலே உங்களை ஆசீர்வதிக்கும்படிக்கு, முதலாவது உங்களிடத்தில் அவரை அனுப்பினார்.”