தீமோத்தேயு ஊழியத்தில் இணைகிறார்
16 1பவுல் தெர்பைக்கும் லீஸ்திராவுக்கும் சென்றார். அங்கே தீமோத்தேயு என்னும் பேருள்ள ஒரு சீஷன் இருந்தான்; அவன் விசுவாசியாகிய ஒரு யூத ஸ்திரீயின் மகன், ஆனால் அவனுடைய தகப்பன் கிரேக்கனாயிருந்தான். 2லீஸ்திராவிலும் இக்கோனியாவிலும் இருந்த சகோதரர்கள் அவனைக்குறித்து நற்சாட்சி சொன்னார்கள். 3பவுல் அவனைத் தன்னோடே அழைத்துக்கொண்டு பயணம் செய்ய விரும்பினார்; அந்த இடங்களிலிருந்த யூதர்களினிமித்தம் அவனை உடன்படிக்கை செய்து விருத்தசேதனம்பண்ணினார்; ஏனெனில் அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்று அவர்கள் எல்லாரும் அறிந்திருந்தார்கள். 4அவர்கள் பட்டணங்கள்தோறும் பயணம்பண்ணி, எருசலேமிலுள்ள அப்போஸ்தலரும் மூப்பரும் தீர்மானித்த கட்டளைகளைக் கைக்கொள்ளும்படி அவர்களிடத்தில் ஒப்புவித்தார்கள். 5அப்படியே சபைகள் விசுவாசத்தில் பலப்படுத்தப்பட்டு, நாளுக்குநாள் எண்ணிக்கையில் பெருகின.
எங்கள் பிதா அவர்களை மக்கெதோனியாவிற்கு அழைக்கிறார்
6பரிசுத்த ஆவியானவர் ஆசியாவில் வசனத்தைச் சொல்லாதபடி அவர்களைத் தடுத்ததினால், அவர்கள் பிரிகியா கலாத்தியா நாட்டைக் கடந்துபோனார்கள். 7மீசியாவுக்கு வந்தபோது, பித்தினியாவுக்குள் பிரவேசிக்க முயற்சித்தார்கள்; ஆனால் இயேசுவின் ஆவி அவர்களுக்கு இடங்கொடுக்கவில்லை. 8அப்பொழுது மீசியாவைக் கடந்து, துரோவா பட்டணத்திற்கு இறங்கிப்போனார்கள். 9இராத்திரியிலே பவுல் ஒரு தரிசனத்தைக் கண்டார்: மக்கெதோனியா தேசத்து மனுஷன் ஒருவன் நின்று, “நீர் மக்கெதோனியாவுக்குக் கடந்துவந்து எங்களுக்கு உதவிசெய்யும்” என்று அவரை வேண்டிக்கொண்டான். 10அவர் அந்தத் தரிசனத்தைக் கண்டபின்பு, அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி எங்கள் பிதா எங்களை அழைத்தார் என்று நாங்கள் நிச்சயித்து, உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்படும்படி முயற்சித்தோம்.
பிலிப்பியில் லீதியாள் தன் இருதயத்தைத் திறக்கிறாள்
11ஆகவே நாங்கள் துரோவாவிலிருந்து கப்பல் ஏறி, நேராகச் சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாள் நெயாப்போலி பட்டணத்துக்கும், 12அங்கிருந்து பிலிப்பிக்கும் வந்தோம்; அது மக்கெதோனியா மாகாணத்தின் அப்பகுதியில் முதன்மையான பட்டணமும், ரோமருடைய குடியேற்றமுமாயிருந்தது. அந்தப் பட்டணத்தில் சிலநாள் தங்கியிருந்தோம்.
13ஓய்வுநாளிலே நாங்கள் ஜெபம்பண்ணும் இடம் ஒன்று ஆற்றங்கரையில் இருக்குமென்று எண்ணி, நகர வாசலுக்கு வெளியே போய், அங்கே கூடியிருந்த ஸ்திரீகளோடே உட்கார்ந்து பேசினோம். 14தியத்தீரா பட்டணத்தாளும் இரத்தாம்பர வஸ்திரங்களை விற்கிறவளும் எங்கள் பிதாவைப் பணிந்துகொள்ளுகிறவளுமான லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தாள். பவுல் சொன்ன வார்த்தைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவளுடைய இருதயத்தைத் திறந்தார். 15அவளும் அவளுடைய வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: “நான் கர்த்தருக்கு உண்மையுள்ளவள் என்று நீங்கள் எண்ணினால், என் வீட்டுக்கு வந்து தங்குங்கள்” என்று வேண்டிக்கொண்டு, எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.
நற்செய்திக்காகச் சிறையிடப்பட்டல்
16நாங்கள் ஜெபம்பண்ணும் இடத்திற்குப் போகையில், குறிசொல்லுகிற ஆவி பிடித்திருந்த ஒரு அடிமைப் பெண் எங்களைச் சந்தித்தாள்; அவள் குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தைச் சம்பாதித்துக்கொடுத்துவந்தாள். 17அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: “இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை உங்களுக்கு அறிவிக்கிறவர்கள்” என்று சத்தமிட்டாள். 18இப்படி அவள் அநேகநாள் செய்துகொண்டுவந்தாள். பவுல் மிகவும் கலங்கி, திரும்பிப்பார்த்து, அந்த ஆவியை நோக்கி: “நீ இவளைவிட்டுப் புறப்பட்டுப்போ என்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன்” என்றார். அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று.
19தங்கள் ஆதாயத்தின் நம்பிக்கை போய்விட்டதென்று அவளுடைய எஜமான்கள் கண்டபோது, பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியில் அதிகாரிகளுக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோனார்கள். 20அவர்களை நியாயாதிபதிகளிடத்தில் கொண்டுவந்து: “யூதராகிய இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்தைக் கலகப்படுத்தி, 21ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் அனுசரிக்கவும் தகாத முறைமைகளைப் போதிக்கிறார்கள்” என்றார்கள்.
22ஜனங்களும் அவர்களுக்கு விரோதமாக எழும்பினார்கள்; நியாயாதிபதிகள் அவர்களுடைய வஸ்திரங்களைக் கிழித்துப்போட்டு, அவர்களைப் பிரம்புகளால் அடிக்கும்படி கட்டளையிட்டார்கள். 23அவர்களை அதிகமாய் அடித்தபின்பு, சிறைச்சாலையில் அடைத்து, அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள். 24அப்படிப்பட்ட கட்டளையைப் பெற்ற அவன், அவர்களை உள்ளறையிலே அடைத்து, அவர்களுடைய கால்களைத் தொழுவத்தில் மாட்டிவைத்தான்.
25நடுஇராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, எங்கள் பிதாவைத் துதித்துப் பாடினார்கள்; காவலிலிருந்தவர்கள் அவர்களுக்குச் செவிகொடுத்துக் கேட்டார்கள். 26திடீரென்று பூமி மிகவும் அதிரும்படி பலத்த பூமியதிர்ச்சி உண்டாகி, சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசைந்தன; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டு, எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயின. 27சிறைச்சாலைக்காரன் நித்திரை தெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக் கண்டு, கட்டப்பட்டவர்கள் தப்பியோடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவி, தன்னைத்தானே கொலைசெய்துகொள்ள முயன்றான். 28ஆனால் பவுல்: “நீ உனக்கு ஒரு தீங்கும் செய்துகொள்ளாதே, நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம்” என்று உரத்த சத்தமாய்க் கூப்பிட்டான்.
29அப்பொழுது அவன் விளக்குகளைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடிவந்து, நடுங்கிக்கொண்டு பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்தான். 30பின்பு அவர்களை வெளியே அழைத்துக்கொண்டுவந்து: “ஐயா, நான் இரட்சிக்கப்படும்படி என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
31அதற்கு அவர்கள்: “கர்த்தராகிய இயேசுவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்றார்கள். 32அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த எல்லாருக்கும் கர்த்தருடைய வசனத்தைச் சொன்னார்கள். 33இராத்திரியில் அந்நேரமே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான்; உடனே அவனும் அவன் வீட்டாரெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றார்கள். 34பின்பு அவர்களைத் தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டுபோய், அவர்களுக்கு போஜனம் வைத்து, எங்கள் பிதாவை விசுவாசித்ததினால் தன் வீட்டாரெல்லாரோடும் மிகவும் சந்தோஷப்பட்டான்.
35விடியற்காலமானபோது, நியாயாதிபதிகள் காவலாளரை அனுப்பி: “அந்த மனுஷரை விடுதலைபண்ணுங்கள்” என்று சொல்லச்சொன்னார்கள்.
36சிறைச்சாலைக்காரன் இந்த வார்த்தைகளைப் பவுலுக்கு அறிவித்து: “உங்களை விடுதலைபண்ணும்படி நியாயாதிபதிகள் கட்டளை அனுப்பினார்கள்; இப்பொழுது புறப்பட்டுச் சமாதானத்தோடே போங்கள்” என்றான்.
37ஆனால் பவுல் அவர்களை நோக்கி: “ரோமக் குடிமக்களாகிய எங்களை நியாயம் விசாரிக்காமல் வெளியரங்கமாய் அடித்து, சிறைச்சாலையில் போட்டார்களே. இப்பொழுது இரகசியமாய் எங்களை அனுப்பிவிடப்பார்க்கிறார்களா? அப்படியல்ல; அவர்களே வந்து எங்களை வெளியே அழைத்துவிடட்டும்” என்றான்.
38காவலாளர் இந்த வார்த்தைகளை நியாயாதிபதிகளுக்கு அறிவித்தார்கள்; அவர்கள் ரோமக் குடிமக்கள் என்று கேள்விப்பட்டபோது பயந்தார்கள். 39அவர்கள் வந்து, மன்னிப்புக் கேட்டு, அவர்களை வெளியே அழைத்துக்கொண்டுவந்து, பட்டணத்தைவிட்டுப் போகும்படி வேண்டிக்கொண்டார்கள். 40அப்படியே அவர்கள் சிறைச்சாலையைவிட்டுப் புறப்பட்டு, லீதியாளுடைய வீட்டிற்குப் போய், அங்கே சகோதரர்களைக் கண்டு, அவர்களுக்குத் தேறுதல் சொல்லிப் புறப்பட்டுப்போனார்கள்.