எங்கள் பிதா புறஜாதியாரை ஏற்றுக்கொள்கிறார்
11 1புறஜாதியாரும் எங்கள் பிதாவின் வார்த்தையை ஏற்றுக்கொண்டார்கள் என்று யூதேயாவிலிருந்த அப்போஸ்தலர்களும் சகோதரர்களும் கேள்விப்பட்டார்கள். 2பேதுரு எருசலேமுக்குப் போனபோது, விருத்தசேதனத்தைச் சேர்ந்தவர்கள் அவனுடன் வாக்குவாதம்பண்ணி, 3“விருத்தசேதனமில்லாத மனிதரிடத்தில் நீ போய், அவர்களுடன் புசித்தாய்” என்றார்கள்.
4அப்பொழுது பேதுரு காரியத்தை வரிசையாக அவர்களுக்கு விவரித்துச் சொன்னான்: 5நான் யோப்பா பட்டணத்தில் ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தபோது, ஞானதிருஷ்டியடைந்து, ஒரு தரிசனத்தைக் கண்டேன்: பெரிய துப்பட்டியைப்போன்ற ஒரு பாத்திரம், நான்கு முனைகளாலும் கட்டப்பட்டு, வானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டு, என்னிடத்தில் வந்தது. 6நான் அதை உற்றுப்பார்த்தபோது, நாலுகால் மிருகங்களையும், காட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் கண்டேன்.
7அன்றியும், ‘பேதுருவே, எழுந்திரு; அடித்துப் புசி’ என்று ஒரு சத்தம் என்னிடத்தில் சொல்லக் கேட்டேன்.
8அதற்கு நான், ‘ஆண்டவரே, அப்படியல்ல; தீட்டானதும் அசுத்தமானதும் ஒருபோதும் என் வாய்க்குள் போனதில்லை’ என்றேன்.
9அதற்கு, ‘எங்கள் பிதா சுத்தமாக்கினதை நீ தீட்டு என்று சொல்லாதே’ என்று வானத்திலிருந்து சத்தம் இரண்டாந்தரம் உண்டாயிற்று. 10இப்படி மூன்றுதரம் நடந்தது; பின்பு எல்லாம் திரும்ப வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 11உடனே, செசரியாவிலிருந்து என்னிடத்தில் அனுப்பப்பட்ட மூன்று மனிதர், நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். 12ஒன்றும் சந்தேகப்படாமல் அவர்களுடன் போகும்படி பரிசுத்த ஆவி எனக்குச் சொன்னார். இந்த ஆறு சகோதரர்களும் என்னுடன் வந்தார்கள்; நாங்கள் அந்த மனிதனுடைய வீட்டிற்குள் பிரவேசித்தோம்.
13தன் வீட்டில் ஒரு தூதன் நின்று, ‘நீ யோப்பாவுக்கு ஆட்களை அனுப்பி, பேதுரு என்னும் மறுபேர்கொண்ட சீமோனை அழைப்பித்துவா; 14நீயும் உன் வீட்டார் அனைவரும் இரட்சிக்கப்படுவதற்கான வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான்’ என்று அந்தத் தூதனைத் தான் கண்டதை அவன் எங்களுக்கு அறிவித்தான். 15நான் பேசத் தொடங்கினபோது, ஆதியில் நம்மேல் இறங்கினதுபோலவே பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேலும் இறங்கினார்.
16அப்பொழுது, ‘யோவான் ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்களோ பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்’ என்று நம்முடைய கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தையை நான் நினைவுகூர்ந்தேன். 17கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்த நமக்கு எங்கள் பிதா எந்த வரத்தைக் கொடுத்தாரோ, அதே வரத்தை அவர்களுக்கும் கொடுத்திருக்க, எங்கள் பிதாவை நான் தடைபண்ணுகிறதற்கு நான் யார்?
18இதைக் கேட்டபோது, அவர்கள் அமர்ந்து, “அப்படியானால் புறஜாதியாருக்கும் எங்கள் பிதா ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலை அளித்தாரே” என்று சொல்லி, எங்கள் பிதாவை மகிமைப்படுத்தினார்கள்.
எங்கள் பிதாவின் குடும்பம் அந்தியோகியாவில் பெருகுகிறது
19ஸ்தேவானையிட்டு உண்டான உபத்திரவத்தினால் சிதறடிக்கப்பட்டவர்கள், யூதரைத்தவிர வேறொருவருக்கும் வசனத்தைச் சொல்லாமல், பெனிக்கே, சீப்புரு, அந்தியோகியா வரைக்கும் சுற்றித்திரிந்தார்கள். 20ஆனாலும் அவர்களில் சீப்புரு, சிரேனே தேசத்தார் சிலர் அந்தியோகியாவுக்கு வந்து, கிரேக்கருடனும் பேசி, கர்த்தராகிய இயேசுவைக்குறித்த நற்செய்தியை அறிவித்தார்கள். a a v20 கிரேக்கர்: கிரேக்கு பாஷை பேசுகிறவர்கள்; இந்த இடத்தில் புறஜாதியாராயிருக்கக்கூடும். 21நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் கரம் அவர்களோடிருந்தது; அநேகர் விசுவாசித்து, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். 22இந்தச் செய்தி எருசலேமிலுள்ள சபையின் காதுகளுக்கு எட்டினபோது, அவர்கள் பர்னபாவை அந்தியோகியா வரைக்கும் அனுப்பினார்கள். 23அவன் அங்கே வந்து, எங்கள் பிதாவின் கிருபையைக் கண்டு சந்தோஷப்பட்டு, உறுதியான இருதயத்துடன் கர்த்தரிடத்தில் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான். 24அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்; அநேக ஜனங்கள் கர்த்தரிடத்தில் சேர்க்கப்பட்டார்கள்.
25பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி தர்சுவுக்குப் போய், 26அவனைக் கண்டுபிடித்து, அந்தியோகியாவுக்கு அழைத்துக்கொண்டுவந்தான். அவர்கள் ஒரு வருஷகாலம் சபையோடு கூடிவந்து, அநேக ஜனங்களுக்குப் போதித்தார்கள்; முதன்முதலில் அந்தியோகியாவிலே சீஷர்கள் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். b b v26 கிறிஸ்தவர்கள் என்னும் பேரின் அர்த்தம் “கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள்” — இயேசுவைப் பின்பற்றினவர்கள் அவருடைய நாமத்தால் அழைக்கப்பட்ட முதல் தரம் இதுவே.
27அந்நாட்களில் சில தீர்க்கதரிசிகள் எருசலேமிலிருந்து அந்தியோகியாவுக்கு வந்தார்கள். 28அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் மகா பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது கிலவுதியு ராயனுடைய நாட்களில் சம்பவித்தது. 29அப்பொழுது சீஷர்கள் அவரவர் தங்கள் தகுதிக்கேற்றபடி, யூதேயாவில் வாசம்பண்ணும் சகோதரர்களுக்கு உதவிசெய்யும்படி தீர்மானித்து, 30அப்படியே செய்து, பர்னபா, சவுல் என்பவர்கள் கையிலே அதை மூப்பர்களிடத்திற்கு அனுப்பினார்கள்.