தெசலோனிக்கேயருக்கு வாழ்த்து
கர்த்தருடைய நாளைக் குறித்துக் குழப்பமடைந்திருந்த ஒரு சபையை நிலைப்படுத்தி, உறுதியாய் நிற்கும்படி அழைக்கும் தொடர் கடிதம்.
1 1பவுலும், சில்வானுவும், தீமோத்தேயுவும், எங்கள் பிதாவிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிலுமுள்ள தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: 2எங்கள் பிதாவினாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
வளர்ந்துவரும் உங்கள் விசுவாசத்திற்காக நன்றி
3சகோதர சகோதரிகளே, உங்களுக்காக நாங்கள் எப்பொழுதும் எங்கள் பிதாவுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்; இது நியாயமே; ஏனெனில் உங்கள் விசுவாசம் மேன்மேலும் மிகுதியாய் வளர்ந்துவருகிறது, உங்கள் ஒவ்வொருவரும் ஒருவரிலொருவர் காட்டும் அன்பிலும் பெருகுகிறீர்கள். 4நீங்கள் சகித்துக்கொள்ளுகிற எல்லா துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் காண்பிக்கிற உங்கள் பொறுமையையும் விசுவாசத்தையும் குறித்து, எங்கள் பிதாவின் சபைகளுக்குள்ளே நாங்களே உங்களைப்பற்றி மேன்மைபாராட்டுகிறோம்.
5நீங்கள் எதற்காகப் பாடுபடுகிறீர்களோ அந்த எங்கள் பிதாவின் ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரராக எண்ணப்படும்படி, இது எங்கள் பிதாவின் நீதியான நியாயத்தீர்ப்புக்கு அத்தாட்சியாயிருக்கிறது. 6எங்கள் பிதா நீதியுள்ளவராயிருப்பதால், உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தைப் பதிலாகச் சரிக்கட்டுவார்; 7கர்த்தராகிய இயேசு தம்முடைய வல்லமையுள்ள தூதர்களோடே பரலோகத்திலிருந்து வெளிப்படும்போது, பாடுபடுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலைத் தந்தருளுவார்; 8எங்கள் பிதாவை அறியாதவர்கள்மேலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள்மேலும், ஜுவாலிக்கிற அக்கினியில் நீதியைச் சரிக்கட்டுவார். 9அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்தைவிட்டும் அவருடைய மகிமையுள்ள வல்லமையைவிட்டும் அகன்று, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்; 10அந்த நாளிலே அவர் தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படவும், விசுவாசித்த யாவரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராகவும் வரும்போது இப்படி நடக்கும்; ஏனெனில் உங்களுக்கு நாங்கள் கூறிய சாட்சி விசுவாசிக்கப்பட்டது.
11இதற்காகவே, எங்கள் பிதா உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக எண்ணும்படிக்கும், நன்மையின்மேலுள்ள எல்லா விருப்பத்தையும் விசுவாசத்தின் கிரியையையும் தமது வல்லமையினால் நிறைவேற்றும்படிக்கும், நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக ஜெபம் செய்கிறோம்; 12இப்படியாக, எங்கள் பிதாவுடையவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடையவும் கிருபையினால், நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் நாமம் உங்களில் மகிமைப்படும், நீங்களும் அவரில் மகிமைப்படுவீர்கள்.