பிதா தாவீதுக்கு வெற்றியளிக்கிறார்
8 1இதற்குப் பின்பு, தாவீது பெலிஸ்தரை முறியடித்து அவர்களை அடக்கினான்; அவன் பெலிஸ்தர் கையிலிருந்து மேத்தேக்-அம்மாவைப் பிடித்துக்கொண்டான். 2அவன் மோவாபையும் முறியடித்தான். அவர்களைத் தரையில் படுக்கவைத்து, ஒரு கயிற்றால் அளந்தான்: இரண்டு அளவு நீளத்தை மரணத்திற்கும், ஒரு முழு அளவு நீளத்தை உயிரோடிருப்பதற்கும் குறித்தான். இப்படியாக மோவாபியர் தாவீதுக்கு ஊழியக்காரராகி, திறை செலுத்தினார்கள்.
3ரேகோபின் மகனும் சோபாவின் ராஜாவுமாகிய ஆதாதேசர், ஐபிராத்து நதியின் அருகே தன் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டப் போனபோது, தாவீது அவனையும் முறியடித்தான். 4தாவீது அவனிடமிருந்து 1,700 குதிரைவீரரையும், 20,000 காலாட்படை வீரரையும் பிடித்துக்கொண்டு, நூறு இரதங்களுக்குப் போதுமானவற்றை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற எல்லா இரதக் குதிரைகளின் குதிக்கால் நரம்புகளையும் தறித்துப்போட்டான். 5சோபாவின் ராஜாவாகிய ஆதாதேசருக்கு உதவிசெய்யும்படி தமஸ்குவின் சீரியர் வந்தபோது, தாவீது 22,000 சீரியரைக் கொன்றுபோட்டான். 6தாவீது தமஸ்குவின் சீரியாவில் தாணையங்களை வைத்தான்; சீரியர் அவனுக்கு ஊழியக்காரராகி, திறை செலுத்தினார்கள். தாவீது போன இடமெங்கும் எங்கள் பிதா அவனுக்கு வெற்றியளித்தார். 7ஆதாதேசரின் ஊழியக்காரருக்குச் சொந்தமாயிருந்த பொன் கேடகங்களைத் தாவீது எடுத்து, அவைகளை எருசலேமுக்குக் கொண்டுவந்தான். 8ஆதாதேசரின் பட்டணங்களாகிய பேத்தாவிலும் பேரொத்தாயிலுமிருந்து தாவீது ராஜா மிகுதியான வெண்கலத்தை எடுத்துக்கொண்டான்.
9ஆதாதேசரின் படையனைத்தையும் தாவீது முறியடித்தான் என்பதை ஆமாத்தின் ராஜாவாகிய தோயி கேள்விப்பட்டபோது, 10தோயியோடு யுத்தம் செய்துவந்த ஆதாதேசரோடு தாவீது போரிட்டு அவனை முறியடித்ததற்காக, அவனை வாழ்த்தி வணக்கம் தெரிவிக்கும்படி, தன் மகனாகிய யோராமை ராஜாவாகிய தாவீதினிடத்திற்கு அனுப்பினான். யோராம் வெள்ளி, பொன், வெண்கலப் பொருள்களைக் கொண்டுவந்தான். 11தாவீது ராஜா, தான் அடக்கின எல்லா ஜாதிகளிடமிருந்தும் பிரதிஷ்டைபண்ணின வெள்ளியோடும் பொன்னோடுங்கூட, இவைகளையும் எங்கள் பிதாவுக்குப் பிரதிஷ்டைபண்ணினான். 12அவை சீரியாவிலிருந்தும், மோவாபிலிருந்தும், அம்மோன் புத்திரரிடமிருந்தும், பெலிஸ்தரிடமிருந்தும், அமலேக்கியரிடமிருந்தும், ரேகோபின் மகனும் சோபாவின் ராஜாவுமாகிய ஆதாதேசரிடமிருந்து கொள்ளையிட்டதிலிருந்தும் வந்தவை.
13தாவீது உப்புப் பள்ளத்தாக்கிலே 18,000 ஏதோமியரை முறியடித்துத் திரும்பிவந்தபோது, தனக்குப் புகழை உண்டாக்கிக்கொண்டான். 14அவன் ஏதோம் முழுவதிலும் தாணையங்களை வைத்தான்—ஏதோம் எங்கும் தாணையங்களை வைத்தான்—ஏதோமியர் எல்லாரும் தாவீதுக்கு ஊழியக்காரரானார்கள். தாவீது போன இடமெங்கும் எங்கள் பிதா அவனுக்கு வெற்றியளித்தார்.
தாவீதின் அதிகாரிகள்
15இப்படியாகத் தாவீது இஸ்ரவேல் அனைத்தையும் ஆண்டு, தன் ஜனங்கள் யாவருக்கும் நியாயத்தையும் நீதியையும் நடப்பித்துவந்தான். 16செருயாவின் மகனாகிய யோவாப் படைக்குத் தலைவனாயிருந்தான்; அகிலூதின் மகனாகிய யோசபாத் ராஜசபையின் பதிவாளனாயிருந்தான்; 17அகிதூபின் மகனாகிய சாதோக்கும், அபியத்தாரின் மகனாகிய அகிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; செராயா ராஜசபையின் எழுத்தனாயிருந்தான்; 18யோய்தாவின் மகனாகிய பெனாயா கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான்; தாவீதின் மகன்களோ ராஜாவின் முதன்மை அதிகாரிகளாயிருந்தார்கள். a a v18 தாவீதின் மகன்கள் லேவியரின் ஆசாரியர் அல்ல; இங்கே இந்தச் சொல் அவர்களை ராஜாவின் தலைமை அதிகாரிகளாகவும், அவரது பக்கத்தில் பணிசெய்யும் அந்தரங்க ஊழியர்களாகவும் குறிக்கிறது.