தாவீதின் வம்சம் பலப்படுகிறது
3 1சவுலின் வம்சத்துக்கும் தாவீதின் வம்சத்துக்கும் இடையே நடந்த யுத்தம் நெடுங்காலம் நீடித்தது. தாவீது நாளுக்குநாள் பலப்பட்டு வந்தான்; சவுலின் வம்சமோ மேன்மேலும் பலவீனமடைந்து போயிற்று. 2எப்ரோனில் தாவீதுக்குக் குமாரர்கள் பிறந்தார்கள். அவனுடைய முதற்பேறானவன் அம்னோன்; அவனுடைய தாய் யெஸ்ரயேல் ஊரைச் சேர்ந்த அகினோவாம்; 3அவனுடைய இரண்டாம் குமாரன் கிலெயாப்; இவனை கர்மேல் ஊரைச் சேர்ந்த நாபாலின் விதவையாகிய அபிகாயில் பெற்றாள்; மூன்றாம் குமாரன் அப்சலோம்; இவன் கேசூரின் ராஜாவாகிய தல்மாயின் மகள் மாக்காளின் மகன்; 4நான்காம் குமாரன் ஆகீத்தின் மகனாகிய அதோனியா; ஐந்தாம் குமாரன் அபித்தாலின் மகனாகிய செபத்தியா; 5ஆறாம் குமாரன் இத்ரேயாம்; இவனை தாவீதின் மனைவியாகிய எக்லாள் பெற்றாள். இவர்களே எப்ரோனில் தாவீதுக்குப் பிறந்த குமாரர்கள்.
அப்னேர் தாவீதோடு சேருகிறான்
6சவுலின் வம்சத்துக்கும் தாவீதின் வம்சத்துக்கும் இடையே யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது, அப்னேர் சவுலின் வம்சத்தில் தன் நிலையைப் பலப்படுத்திக்கொண்டே வந்தான். 7சவுலுக்கு ஆயாவின் மகளாகிய ரிஸ்பாள் என்னும் பேருள்ள ஒரு மறுமனையாட்டி இருந்தாள். இஸ்போசேத் அப்னேரை நோக்கி, “என் தகப்பனுடைய மறுமனையாட்டியோடு நீ ஏன் உறவுகொண்டாய்?” என்று கேட்டான்.
8இஸ்போசேத்தின் வார்த்தைகளினால் அப்னேர் மிகவும் கோபமடைந்து சொன்னது: “நான் யூதாவுக்கு விசுவாசமாயிருக்கிற ஒரு நாய்த்தலையோ? இந்நாள்வரைக்கும் நான் உன் தகப்பனாகிய சவுலின் வம்சத்துக்கும், அவனுடைய சகோதரருக்கும், நண்பருக்கும் தயவைக் காண்பித்து, உன்னைத் தாவீதின் கையில் ஒப்புக்கொடாமல் இருந்தேன். இப்பொழுதோ இந்தப் பெண்ணைக்குறித்து என்மேல் குற்றம் சுமத்துகிறாயே! a a v8 ‘நாய்த்தலை’ என்பது அயோக்கியனாகிய ஒரு துரோகியையோ பகைவனையோ குறிக்கும் பழங்கால அவமானச் சொல். 9எங்கள் பிதா தாவீதுக்கு ஆணையிட்டபடியே நான் அவனுக்குச் செய்யாவிட்டால், எங்கள் பிதா அப்னேருக்கு அப்படியும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர்; 10அவர் ஆணையிட்டபடியே, ராஜ்யத்தை சவுலின் வம்சத்திலிருந்து மாற்றி, தாணிலிருந்து பெயெர்செபாமட்டும் இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் தாவீதின் சிங்காசனத்தை ஸ்தாபிக்கவே செய்வேன்” என்றான்.
11இஸ்போசேத் அப்னேருக்குப் பயந்திருந்தபடியால், அவனுக்கு ஒரு வார்த்தையும் மறுஉத்தரவு சொல்ல முடியாதிருந்தான்.
12அப்னேர் தன் சார்பாகத் தாவீதிடத்தில் தூதர்களை அனுப்பி, “தேசம் யாருடையது? என்னோடே உடன்படிக்கைபண்ணும்; அப்பொழுது இஸ்ரவேல் அனைத்தையும் உம்மிடத்தில் திருப்பிவிட என் கை உம்மோடிருக்கும்” என்று சொல்லச்செய்தான்.
13அதற்குத் தாவீது, “நல்லது; நான் உன்னோடே உடன்படிக்கைபண்ணுவேன். ஆனாலும் நான் உன்னிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்: நீ வரும்போது, முதலில் சவுலின் மகளாகிய மீகாளை அழைத்துக்கொண்டு வந்தாலொழிய, என் முகத்தைப் பார்ப்பதில்லை” என்றான். 14பின்பு தாவீது சவுலின் மகனாகிய இஸ்போசேத்திடத்தில் தூதர்களை அனுப்பி, “நூறு பெலிஸ்தரின் நுனித்தோல்களால் நான் எனக்கு நியமித்துக்கொண்ட என் மனைவியாகிய மீகாளை எனக்குக் கொடு” என்று சொல்லச்செய்தான்.
15அப்பொழுது இஸ்போசேத் ஆள் அனுப்பி, லாயீசின் மகனாகிய பல்த்தியேல் என்னும் அவளுடைய புருஷனிடத்திலிருந்து அவளை அழைத்துவரச்செய்தான். 16அவளுடைய புருஷன் அழுதுகொண்டே பகூரிம்மட்டும் அவள் பின்னாலே போனான். அப்பொழுது அப்னேர் அவனை நோக்கி, “திரும்பிப்போ” என்று சொல்லவே, அவன் திரும்பிப்போனான்.
17அப்னேர் இஸ்ரவேலின் மூப்பர்களோடு பேசி, “தாவீது உங்கள்மேல் ராஜாவாயிருக்கவேண்டும் என்று நெடுநாளாய் நீங்கள் விரும்பினீர்களே. 18இப்பொழுது அப்படிச் செய்யுங்கள்; ஏனெனில் எங்கள் பிதா தாவீதைக்குறித்து, ‘என் தாசனாகிய தாவீதின் கையினால் என் ஜனமாகிய இஸ்ரவேலை பெலிஸ்தரின் கைக்கும் அவர்களுடைய எல்லாப் பகைவரின் கைக்கும் நீங்கலாக்கி இரட்சிப்பேன்’ என்று வாக்குக்கொடுத்தாரே” என்றான்.
19அப்னேர் பென்யமீனரோடும் பேசினான்; பின்பு இஸ்ரவேலும் பென்யமீன் வம்சத்தார் அனைவரும் செய்யச் சம்மதித்திருந்த யாவையும் தாவீதுக்கு அறிவிக்கும்படி எப்ரோனுக்குப் போனான். 20அப்னேர் இருபது பேரோடே எப்ரோனிலிருந்த தாவீதிடத்தில் வந்தபோது, தாவீது அப்னேருக்கும் அவனோடிருந்தவர்களுக்கும் விருந்து செய்தான். 21அப்னேர் தாவீதை நோக்கி, “நான் எழுந்துபோய், இஸ்ரவேல் அனைத்தையும் என் ஆண்டவனாகிய ராஜாவினிடத்தில் கூட்டிக்கொண்டு வருகிறேன்; அவர்கள் உம்மோடே உடன்படிக்கைபண்ணுவார்கள்; உம்முடைய மனவிருப்பத்தின்படியெல்லாம் நீர் ஆளுவீர்” என்றான். அப்பொழுது தாவீது அப்னேரை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடே போனான்.
யோவாப் அப்னேரைக் கொலைசெய்கிறான்
22அப்பொழுதே தாவீதின் ஊழியக்காரரும் யோவாபும் ஒரு படையெடுப்பிலிருந்து மிகுந்த கொள்ளைப்பொருளோடே திரும்பிவந்தார்கள். ஆனாலும் அப்னேர் எப்ரோனில் தாவீதோடே இல்லை; தாவீது அவனை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடே போயிருந்தான். 23யோவாபும் அவனோடிருந்த சேனையனைத்தும் வந்தபோது, “நேரின் மகனாகிய அப்னேர் ராஜாவினிடத்தில் வந்தான்; அவர் அவனை அனுப்பிவிட்டார்; அவன் சமாதானத்தோடே போனான்” என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
24அப்பொழுது யோவாப் ராஜாவினிடத்தில் போய், “நீர் என்ன செய்தீர்? இதோ, அப்னேர் உம்மிடத்தில் வந்தானே; நீர் அவனை ஏன் அனுப்பிவிட்டீர்? அவன் போய்விட்டானே! 25நேரின் மகனாகிய அப்னேர் உம்மை ஏமாற்றவும், உம்முடைய போக்குவரத்தையும் நீர் செய்கிற எல்லாவற்றையும் அறிந்துகொள்ளவும் வந்தான் என்பதை நீர் அறிவீரே” என்றான்.
26யோவாப் தாவீதைவிட்டுப் புறப்பட்டு, அப்னேரின் பின்னாலே தூதர்களை அனுப்பினான்; அவர்கள் அவனைச் சீரா என்னும் கிணற்றண்டையிலிருந்து திரும்ப அழைத்துவந்தார்கள். தாவீதுக்கோ இது ஒன்றும் தெரியாது. 27அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பிவந்தபோது, யோவாப் அவனோடே இரகசியமாய்ப் பேசுவதுபோல, அவனை நடுவாசலுக்குள்ளே ஒரு பக்கமாய் அழைத்துக்கொண்டுபோய், தன் சகோதரனாகிய ஆசகேலின் இரத்தப்பழிக்காக, அங்கே அவனை வயிற்றில் குத்தினான்; அவன் செத்தான். 28பின்பு தாவீது இதைக் கேள்விப்பட்டபோது, “நேரின் மகனாகிய அப்னேரின் இரத்தப்பழியைக்குறித்து நானும் என் ராஜ்யமும் எங்கள் பிதாவுக்கு முன்பாக என்றென்றைக்கும் குற்றமற்றவர்கள். 29அது யோவாபின் தலையின்மேலும் அவனுடைய தகப்பன் வம்சத்தார் அனைவரின்மேலும் இறங்குவதாக! சுரப்பினாலோ, குஷ்டரோகத்தினாலோ பாதிக்கப்பட்டவனும், ஊன்றுகோலை ஊன்றி நடக்கிறவனும், பட்டயத்தால் விழுகிறவனும், அப்பத்துக்குக் குறைவுள்ளவனும் யோவாபின் வம்சத்தில் ஒருபோதும் ஒழிந்துபோகாதிருப்பார்களாக!” என்றான். 30இப்படியாக யோவாபும் அவன் சகோதரனாகிய அபிசாயும் கிபியோனில் நடந்த யுத்தத்தில் தங்கள் சகோதரனாகிய ஆசகேலைக் கொன்றதற்காக அப்னேரைக் கொன்றுபோட்டார்கள்.
தாவீது அப்னேருக்காகத் துக்கங்கொண்டாடுகிறான்
31தாவீது யோவாபையும் அவனோடிருந்த சகல ஜனங்களையும் நோக்கி, “உங்கள் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டை உடுத்திக்கொண்டு, அப்னேருக்கு முன்பாகத் துக்கங்கொண்டாடுங்கள்” என்றான். தாவீது ராஜா பாடையின் பின்னாலே நடந்துபோனான். 32அவர்கள் அப்னேரை எப்ரோனிலே அடக்கம்பண்ணினார்கள்; ராஜா அப்னேரின் கல்லறையண்டையில் சத்தமிட்டு அழுதான்; ஜனங்கள் எல்லாரும் அழுதார்கள். 33ராஜா அப்னேருக்காக இந்தப் புலம்பல் பாடலைப் பாடினான்: “மூடன் சாகிறதுபோல அப்னேர் சாகவேண்டியதோ? 34உன் கைகள் கட்டப்படவில்லை; உன் கால்கள் விலங்கிடப்படவில்லை; அக்கிரமக்காரருக்கு முன்பாக விழுகிறவனைப்போல விழுந்தாயே” என்றான். ஜனங்கள் எல்லாரும் அவனுக்காக மறுபடியும் அழுதார்கள்.
35பின்பு பொழுது இருக்கும்போதே தாவீது ஏதாவது புசிக்கும்படி ஜனங்கள் எல்லாரும் வந்து அவனை வருந்தி அழைத்தார்கள்; ஆனால் தாவீது, “பொழுதுபோகுமுன்னே நான் அப்பத்தையாகிலும் வேறெதையாகிலும் ருசிபார்த்தால், எங்கள் பிதா எனக்கு அப்படியும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர்!” என்று ஆணையிட்டான்.
36ஜனங்கள் எல்லாரும் அதைக் கவனித்து மனமகிழ்ந்தார்கள்; ராஜா செய்த யாவும் ஜனங்கள் எல்லாருக்கும் பிரியமாயிருந்தது. 37நேரின் மகனாகிய அப்னேரின் மரணத்துக்கு ராஜா காரணம் அல்ல என்று அந்நாளில் ஜனங்கள் எல்லாரும் இஸ்ரவேலர் யாவரும் அறிந்துகொண்டார்கள். 38ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி, “இன்று இஸ்ரவேலிலே ஒரு பிரபுவும் பெரிய மனுஷனும் விழுந்தான் என்பதை நீங்கள் அறியீர்களா? 39நான் அபிஷேகம்பண்ணப்பட்ட ராஜாவாயிருந்தும், இன்று பலவீனனாயிருக்கிறேன்; செருயாவின் மகன்களாகிய இந்த மனுஷர் எனக்கு மிஞ்சின வலியவர்களாயிருக்கிறார்கள். எங்கள் பிதா பொல்லாப்புச் செய்கிறவனுக்கு அவன் பொல்லாப்பின்படி பதிலளிப்பாராக” என்றான்.