தாவீது மக்கள்தொகையைக் கணக்கிடுகிறான்
24 1மறுபடியும் எங்கள் பிதாவின் கோபம் இஸ்ரவேலுக்கு விரோதமாய் மூண்டது; அவர் தாவீதை அவர்களுக்கு விரோதமாக ஏவி, “நீ போய், இஸ்ரவேலையும் யூதாவையும் கணக்கிடு” என்றார்.
2ஆகையால் ராஜா, தன்னோடிருந்த சேனாதிபதியாகிய யோவாபை நோக்கி, “நீ இப்பொழுது தாண் தொடங்கி பெயெர்செபா வரைக்கும் இஸ்ரவேலின் எல்லாக் கோத்திரங்களிலும் போய், மக்களை எண்ணு; அப்பொழுது மக்களின் தொகை எனக்குத் தெரியவரும்” என்றான்.
3அதற்கு யோவாப் ராஜாவை நோக்கி, “மக்கள் இப்பொழுது இருக்கிறதைவிட நூறத்தனையாக உம்முடைய பிதா பெருகப்பண்ணி, ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்கள் அதைக் காணக்கடவது; ஆனாலும் ராஜாவாகிய என் ஆண்டவன் இந்தக் காரியத்தைச் செய்ய விரும்புகிறது ஏன்?” என்றான்.
4ஆனாலும் ராஜாவின் கட்டளை யோவாபையும் சேனாதிபதிகளையும் மேற்கொண்டது. ஆகையால் யோவாபும் சேனாதிபதிகளும் இஸ்ரவேல் மக்களை எண்ணும்படி ராஜாவின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டார்கள். 5அவர்கள் யோர்தானைக் கடந்து, பள்ளத்தாக்கின் நடுவில் இருக்கிற பட்டணத்திற்குத் தெற்கே, ஆரோவேருக்கு அருகே பாளயமிறங்கி, காத் நோக்கியும் யாசேர் மட்டும் போனார்கள். 6பின்பு அவர்கள் கீலேயாத்திற்கும் தாதீம் ஒத்சி நாட்டிற்கும் வந்து, தாண்யானுக்கும் வந்து, சீதோனைச் சுற்றிப்போய், 7தீருவின் அரணான பட்டணத்திற்கும், ஏவியர் கானானியரின் எல்லாப் பட்டணங்களுக்கும் வந்து, யூதாவின் தென்திசைப் பகுதியாகிய பெயெர்செபாவுக்குப் போனார்கள். 8இப்படி அவர்கள் தேசம் முழுவதையும் சுற்றிப்போய், ஒன்பது மாதம் இருபது நாட்களின் முடிவிலே எருசலேமுக்கு வந்தார்கள். 9யோவாப் மக்களின் தொகையை ராஜாவுக்கு அறிவித்தான்: இஸ்ரவேலிலே பட்டயம் உருவக்கூடிய பராக்கிரமசாலிகள் 800,000 பேரும், யூதாவிலே 500,000 பேரும் இருந்தார்கள்.
10தாவீது மக்களை எண்ணினபின்பு, அவனுடைய இருதயம் அவனை உறுத்தியது. தாவீது எங்கள் பிதாவை நோக்கி, “நான் செய்த இந்தக் காரியத்தினால் மிகவும் பாவஞ்செய்தேன்; இப்பொழுது என் பிதாவே, உமது அடியேனுடைய அக்கிரமத்தை நீக்கிவிடும்; நான் மிகவும் மதிகேடாய் நடந்துகொண்டேன்” என்றான்.
11தாவீது காலமே எழுந்தபோது, எங்கள் பிதாவின் வார்த்தை தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டாகி,
12“நீ போய் தாவீதை நோக்கி: எங்கள் பிதா சொல்லுகிறது என்னவென்றால், நான் மூன்று காரியங்களை உன்முன் வைக்கிறேன்; அவைகளில் ஒன்றைத் தெரிந்துகொள்; அப்பொழுது அதை நான் உனக்குச் செய்வேன் என்று சொல்” என்றார்.
13அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனுக்கு அறிவித்து, “உன் தேசத்தில் மூன்று வருஷப் பஞ்சம் உனக்கு வரவேண்டுமோ? அல்லது உன் சத்துருக்கள் உன்னைத் தொடர, நீ மூன்று மாதம் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உன் தேசத்தில் மூன்று நாள் கொள்ளைநோய் உண்டாகவேண்டுமோ? இப்பொழுது நீ யோசித்து, என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோகவேண்டும் என்று தீர்மானி” என்றான்.
14அப்பொழுது தாவீது காத்தை நோக்கி, “நான் மிகுந்த நெருக்கத்தில் இருக்கிறேன்; எங்கள் பிதாவின் இரக்கம் மிகவும் பெரிது; ஆகையால் அவருடைய கையிலே விழுவோம்; மனிதனுடைய கையிலே நான் விழாதிருப்பேனாக” என்றான்.
15அப்படியே எங்கள் பிதா அன்று காலமே தொடங்கி குறிக்கப்பட்ட வேளைவரைக்கும் இஸ்ரவேலின்மேல் கொள்ளைநோயை அனுப்பினார்; தாண் தொடங்கி பெயெர்செபா வரைக்கும் மக்களில் 70,000 பேர் மரித்தார்கள். a a v15 “குறிக்கப்பட்ட வேளை” என்பது மாலைப் பலியின் நியமிக்கப்பட்ட நேரத்தைக் குறிக்கலாம்.
16தூதன் எருசலேமை அழிக்கும்படி தன் கையை அதற்கு நேராக நீட்டினபோது, எங்கள் பிதா அந்த ஆபத்தைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, மக்களை அழித்துக்கொண்டிருந்த தூதனை நோக்கி, “போதும்! இப்பொழுது உன் கையை நிறுத்து” என்றார். அப்பொழுது எங்கள் பிதாவின் தூதன் எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்தண்டையில் இருந்தான்.
17மக்களை அழித்த தூதனை தாவீது கண்டபோது, எங்கள் பிதாவை நோக்கி, “இதோ, பாவஞ்செய்தவன் நான்தான்; அக்கிரமஞ்செய்தவன் நான்தான்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை என்மேலும் என் தகப்பன் வீட்டின்மேலும் இருப்பதாக” என்றான்.
தாவீது ஒரு பலிபீடத்தைக் கட்டுகிறான்
18அன்றையதினம் காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி, “நீ போய், எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்திலே எங்கள் பிதாவுக்கு ஒரு பலிபீடத்தை எழுப்பு” என்றான். 19எங்கள் பிதா கட்டளையிட்டபடியே, காத்தின் வார்த்தையின்படி தாவீது போனான். 20அர்வனா பார்த்து, ராஜாவும் அவனுடைய ஊழியக்காரரும் தன்னிடத்திற்கு வருகிறதைக் கண்டு, வெளியே வந்து, தரைமட்டும் முகங்குனிந்து ராஜாவை வணங்கி, 21அர்வனா, “ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியேனிடத்தில் வந்தது என்ன?” என்றான். அதற்குத் தாவீது, “மக்களைவிட்டு கொள்ளைநோய் நிறுத்தப்படும்படி, எங்கள் பிதாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படியாக, உன்னிடத்தில் இந்தக் களத்தை விலைக்கு வாங்கவே வந்தேன்” என்றான்.
22அப்பொழுது அர்வனா தாவீதை நோக்கி, “ராஜாவாகிய என் ஆண்டவன் தமது பார்வைக்கு நலமானதை எடுத்துப் பலியிடுவாராக; இதோ, தகனபலிக்கு மாடுகளும், விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும் மாட்டு நுகங்களும் இங்கே இருக்கிறது. 23ராஜாவே, இவைகளையெல்லாம் அர்வனா ராஜாவுக்குக் கொடுக்கிறேன்” என்று அர்வனா ராஜாவினிடத்தில் சொல்லி, “உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மை அங்கீகரிப்பாராக” என்றான்.
24ராஜாவோ அர்வனாவை நோக்கி, “அப்படியல்ல, நான் அதை உன்னிடத்தில் விலைகொடுத்தே வாங்குவேன்; எனக்கு ஒன்றும் செலவில்லாத தகனபலிகளை என் பிதாவுக்குச் செலுத்தமாட்டேன்” என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஏறக்குறைய 1.2 றாத்தல் வெள்ளிக்கு வாங்கினான். 25தாவீது அங்கே எங்கள் பிதாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான். அப்பொழுது எங்கள் பிதா தேசத்திற்காக செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்; கொள்ளைநோய் இஸ்ரவேலைவிட்டு நிறுத்தப்பட்டது.