சேபா ராஜாவுக்கு விரோதமாய் கலகம் செய்கிறான்
20 1அங்கே பென்யமீனனாகிய பிக்கிரியின் குமாரன் சேபா என்னும் பேர்கொண்ட ஒரு பயனற்ற மனிதன் இருந்தான். அவன் எக்காளம் ஊதி, “தாவீதோடே நமக்குப் பங்கில்லை, ஈசாயின் குமாரனிடத்தில் நமக்குச் சுதந்தரமில்லை! இஸ்ரவேலே, அவனவன் தன் தன் கூடாரத்திற்குப் போங்கள்!” என்று சத்தமிட்டான்.
2அப்பொழுது இஸ்ரவேல் மனிதர் யாவரும் தாவீதைவிட்டுப் பிக்கிரியின் குமாரன் சேபாவைப் பின்பற்றிப் போனார்கள்; ஆனாலும் யூதாவின் மனிதர் யோர்தான் துவங்கி எருசலேம்வரைக்கும் தங்கள் ராஜாவோடே உறுதியாய் நின்றார்கள்.
3தாவீது எருசலேமிலுள்ள தன் அரமனைக்கு வந்தபோது, வீட்டைக் காக்கும்படி தான் விட்டுவைத்திருந்த பத்து மறுமனையாட்டிகளையும் ராஜா பிடித்துக் காவலில் வைத்தான். அவர்களைப் பராமரித்தானே தவிர அவர்களோடே சேர்ந்து உறங்கவில்லை. அவர்கள் சாகும்நாள்வரைக்கும் விதவைகளைப்போல அடைக்கப்பட்டிருந்தார்கள்.
4பின்பு ராஜா அமாசாவை நோக்கி, “நீ மூன்று நாளைக்குள் யூதாவின் மனிதரை என்னிடத்தில் கூப்பிட்டு, நீயும் இங்கே வந்திரு” என்றான்.
5அப்படியே அமாசா யூதாவைக் கூப்பிடப் போனான்; ஆனாலும் ராஜா அவனுக்குக் குறித்திருந்த காலத்தைவிடத் தாமதித்தான். 6அப்பொழுது தாவீது அபிசாயை நோக்கி, “இப்போது அப்சலோமைப் பார்க்கிலும் பிக்கிரியின் குமாரன் சேபா நமக்கு அதிக தீங்கு செய்வான். உன் ஆண்டவனுடைய மனிதரை அழைத்துக்கொண்டு அவனைப் பின்தொடர்ந்துபோ; இல்லாவிட்டால் அவன் அரண்செய்யப்பட்ட பட்டணங்களுக்குள் புகுந்து நம்மைவிட்டுத் தப்பிப்போவான்” என்றான்.
7அப்படியே யோவாபின் மனிதரும், கிரேத்தியரும், பிலேத்தியரும், சகல பலசாலிகளும் பிக்கிரியின் குமாரன் சேபாவைப் பின்தொடரும்படி எருசலேமிலிருந்து அவன் பின்னே புறப்பட்டுப் போனார்கள். 8அவர்கள் கிபியோனிலுள்ள பெரிய கல்லண்டையில் வந்தபோது, அமாசா அவர்களை எதிர்கொண்டான். யோவாப் தன் போர் அங்கியை அணிந்திருந்தான்; அவன் இடுப்பிலே உறையோடு கட்டப்பட்ட பட்டயம் இருந்தது; அவன் முன்னே நடக்கையில் அது கழன்று விழுந்தது. 9யோவாப் அமாசாவை நோக்கி, “என் சகோதரனே, சுகமாய் இருக்கிறாயா?” என்று சொல்லி, அமாசாவை முத்தமிடும்படி தன் வலதுகையினால் அவன் தாடியைப் பிடித்தான். 10யோவாபின் கையில் இருந்த பட்டயத்தை அமாசா கவனிக்கவில்லை. யோவாப் அதினால் அவன் வயிற்றில் குத்தினான்; அவன் குடல்கள் தரையிலே சிந்தின; இரண்டாம் முறை குத்தாமலே அமாசா இறந்துபோனான். பின்பு யோவாபும் அவன் சகோதரன் அபிசாயும் பிக்கிரியின் குமாரன் சேபாவைப் பின்தொடர்ந்து போனார்கள். 11யோவாபின் வாலிபரில் ஒருவன் அமாசாவண்டையில் நின்று, “யோவாபின்மேல் விருப்பமுள்ளவன் எவனோ, தாவீதின் பட்சமாய் இருக்கிறவன் எவனோ, அவன் யோவாபைப் பின்பற்றிவரட்டும்!” என்றான். 12அமாசா வழியின் நடுவிலே தன் இரத்தத்தில் புரண்டு கிடந்தான். அங்கே வந்த யாவரும் நின்றுகொண்டிருந்ததைக் கண்ட அந்த மனிதன், சேனையெல்லாம் நிற்கிறதைப் பார்த்து, அமாசாவை வழியிலிருந்து வயல்வெளிக்கு இழுத்துக்கொண்டுபோய் அவன்மேல் ஒரு வஸ்திரத்தைப் போட்டான். 13அவன் வழியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டபின், மனிதர் யாவரும் பிக்கிரியின் குமாரன் சேபாவைப் பின்தொடரும்படி யோவாபைப் பின்பற்றிப் போனார்கள். 14சேபா இஸ்ரவேலின் எல்லாக் கோத்திரங்களையும் கடந்து, பெத்மாக்காவிலுள்ள ஆபேல்மட்டும் போனான்; பிக்கிரியர் யாவரும் கூடி அவனையும் பின்பற்றிப் போனார்கள். 15அவர்கள் வந்து, பெத்மாக்காவிலுள்ள ஆபேலிலே அவனை முற்றிக்கைபோட்டார்கள். அவர்கள் பட்டணத்துக்கு விரோதமாய் ஒரு மண்மேடு கட்டி, வெளிமதிலுக்கு எதிரே நின்றார்கள்; யோவாபோடிருந்த சேனையெல்லாம் மதிலைத் தள்ளிவிழுத்தும்படி மோதிக்கொண்டிருந்தது.
16அப்பொழுது விவேகமுள்ள ஒரு ஸ்திரீ பட்டணத்திலிருந்து கூப்பிட்டு, “கேளுங்கள்! கேளுங்கள்! நான் யோவாபோடே பேசும்படி அவரை இங்கே வரச்சொல்லுங்கள் என்று சொல்லுங்கள்” என்றாள். 17அவன் அவளண்டையில் வந்தபோது, அந்த ஸ்திரீ, “நீர்தானா யோவாப்?” என்று கேட்டாள். அவன், “நான்தான்” என்றான். அப்பொழுது அவள், “உம்முடைய அடியாளின் வார்த்தைகளைக் கேளும்” என்றாள். அவன், “கேட்கிறேன்” என்றான்.
18அப்பொழுது அவள் சொன்னாள்: “பூர்வகாலத்தில், ‘ஆபேலிலே ஆலோசனை கேட்கவேண்டும்’ என்று சொல்லுவார்கள்; அப்படியே காரியம் தீர்மானமாகும். 19நான் இஸ்ரவேலிலே சமாதானமும் உண்மையுமுள்ளவர்களில் ஒருத்தி. நீர் இஸ்ரவேலிலே தாய்போன்ற ஒரு பட்டணத்தை அழிக்கப் பார்க்கிறீர். எங்கள் பிதாவின் சுதந்தரத்தை ஏன் விழுங்கவேண்டும்?” என்றாள். a a v19 ‘தாய்ப்பட்டணம்’ என்பது, சிறிய ஊர்கள் வழிகாட்டுதலுக்காகவும் பாதுகாப்புக்காகவும் சார்ந்திருந்த ஒரு பெரிய பிரதேச மையமாயிருந்தது.
20அதற்கு யோவாப், “விழுங்குவதும் அழிப்பதும் என்னைவிட்டு ஒருபோதும், ஒருபோதும் தூரமாயிருப்பதாக! 21காரியம் அப்படியல்ல; எப்பிராயீம் மலைநாட்டானாகிய பிக்கிரியின் குமாரன் சேபா என்பவன் ராஜாவாகிய தாவீதுக்கு விரோதமாய்க் கலகம் செய்தான். அந்த ஒருவனை மாத்திரம் ஒப்புக்கொடும்; அப்பொழுது நான் பட்டணத்தைவிட்டுப் பின்வாங்குவேன்” என்றான். அந்த ஸ்திரீ யோவாபை நோக்கி, “இதோ, அவன் தலை மதில்மேலாய் உம்மிடத்தில் எறியப்படும்” என்றாள்.
22பின்பு அந்த ஸ்திரீ தன் விவேகமான ஆலோசனையோடே சகல ஜனங்களிடத்திற்கும் போனாள். அவர்கள் பிக்கிரியின் குமாரன் சேபாவின் தலையை வெட்டி, யோவாபிடத்தில் எறிந்தார்கள். அப்பொழுது அவன் எக்காளம் ஊத, அவர்கள் பட்டணத்தைவிட்டு அவனவன் தன் தன் வீட்டிற்குச் சிதறிப்போனார்கள். யோவாப் எருசலேமிலிருக்கிற ராஜாவினிடத்திற்குத் திரும்பிப் போனான்.
23யோவாப் இஸ்ரவேலின் சர்வ சேனைக்கும் தலைவனாயிருந்தான்; யோய்தாவின் குமாரன் பெனாயா கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான்; 24அதோராம் கட்டாய வேலைக்காரருக்கு அதிகாரியாயிருந்தான்; அகிலூதின் குமாரன் யோசபாத் மந்திரியாயிருந்தான்; 25சேபா சம்பிரதியாயிருந்தான்; சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியராயிருந்தார்கள்; 26யவீரியனாகிய ஈரா என்பவனும் தாவீதுக்கு ஆசாரியனாயிருந்தான்.