தாவீது யூதாவின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்படுகிறான்
2 1இதற்குப்பின்பு, தாவீது எங்கள் பிதாவினிடத்தில், “நான் யூதாவின் பட்டணங்களில் ஒன்றிற்குப் போகலாமா?” என்று விசாரித்தான். எங்கள் பிதா, “போ” என்றார். தாவீது, “எங்கே போவேன்?” என்று கேட்டான். “எப்ரோனுக்கு” என்று அவர் சொன்னார்.
2அப்படியே தாவீது தன்னுடைய இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமோடும், கர்மேல் ஊராளாகிய நாபாலின் விதவையாயிருந்த அபிகாயிலோடும் அங்கே போனான். 3தாவீது தன்னோடிருந்த தன் மனிதரையும் அவரவர் தங்கள் குடும்பத்தோடே அழைத்துக்கொண்டு போனான்; அவர்கள் எப்ரோனின் ஊர்களில் குடியேறினார்கள். 4அப்பொழுது யூதாவின் மனிதர் வந்து, அங்கே தாவீதை யூதா குடும்பத்தின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள். சவுலை அடக்கம்பண்ணினவர்கள் யாபேஸ்கீலேயாத்தின் மனிதர் என்று தாவீதுக்கு அறிவித்தார்கள். 5அப்பொழுது தாவீது யாபேஸ்கீலேயாத்தின் மனிதரிடத்திற்குத் தூதர்களை அனுப்பி, “உங்கள் ஆண்டவனாகிய சவுலை அடக்கம்பண்ணி, அவனுக்கு இந்தத் தயவைச் செய்தபடியால், எங்கள் பிதா உங்களை ஆசீர்வதிப்பாராக. 6இப்போது எங்கள் பிதா உங்களுக்குத் தயவையும் உண்மையையும் காண்பிப்பாராக; நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்தபடியால் நானும் உங்களுக்கு நன்மை செய்வேன். 7இப்போதும் உங்கள் கைகள் பலப்படட்டும், தைரியமாயிருங்கள்; உங்கள் எஜமானாகிய சவுல் மரித்துப்போனான்; யூதா குடும்பத்தார் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணியிருக்கிறார்கள்” என்று சொல்லச்சொன்னான்.
அப்னேர் இஸ்போசேத்தை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்குகிறான்
8ஆனாலும் நேரின் மகனும் சவுலின் சேனாபதியுமாகிய அப்னேர், சவுலின் மகனாகிய இஸ்போசேத்தை அழைத்து, அவனை மகனாயீமுக்கு அக்கரையாய்க் கூட்டிக்கொண்டுபோய், 9அவனைக் கீலேயாத்தின்மேலும், ஆசூரியர்மேலும், யெஸ்ரயேலின்மேலும், எப்பிராயீமின்மேலும், பென்யமீன்மேலும், இஸ்ரவேல் அனைத்தின்மேலும் ராஜாவாக்கினான். 10சவுலின் மகனாகிய இஸ்போசேத் இஸ்ரவேலின்மேல் ராஜாவானபோது நாற்பது வயதாயிருந்து, இரண்டு வருஷம் அரசாண்டான்; ஆனாலும் யூதா குடும்பத்தார் தாவீதைப் பின்பற்றினார்கள். 11தாவீது எப்ரோனில் யூதா குடும்பத்தின்மேல் ராஜாவாயிருந்த நாட்கள் ஏழு வருஷமும் ஆறு மாதமுமாயிருந்தது.
கிபியோனில் சகோதரனுக்கு விரோதமாய் சகோதரன்
12நேரின் மகனாகிய அப்னேரும் சவுலின் மகனாகிய இஸ்போசேத்தின் ஊழியக்காரரும் மகனாயீமிலிருந்து கிபியோனுக்குப் புறப்பட்டுப்போனார்கள். 13செருயாளின் மகனாகிய யோவாபும் தாவீதின் ஊழியக்காரரும் புறப்பட்டு, கிபியோனின் குளத்தண்டையில் அவர்களைச் சந்தித்தார்கள்; ஒரு பக்கத்தார் குளத்தின் இந்தக் கரையிலும், மறுபக்கத்தார் அந்தக் கரையிலும் உட்கார்ந்தார்கள். 14அப்னேர் யோவாபை நோக்கி, “வாலிபர் எழுந்து நமக்கு முன்பாக விளையாடட்டும்” என்றான். யோவாப், “எழுந்திருக்கட்டும்” என்றான்.
15அப்படியே அவர்கள் எழுந்து, பென்யமீனுக்காகவும் சவுலின் மகனாகிய இஸ்போசேத்துக்காகவும் பன்னிரண்டுபேரும், தாவீதின் ஊழியக்காரரில் பன்னிரண்டுபேரும் என எண்ணிக்கையின்படி கடந்துவந்தார்கள். 16அவனவன் தன் எதிராளியின் தலையைப் பிடித்து, தன் பட்டயத்தை அவனுடைய விலாவில் பாய்ச்சினான்; அப்படியே அவர்கள் ஒருமித்து விழுந்தார்கள். ஆகையால் கிபியோனில் இருக்கிற அந்த இடத்திற்கு எல்காத்-அசூரிம் என்று பேரிடப்பட்டது. a a v16 எல்காத்-அசூரிம் என்பதற்கு “பட்டயமுனைகளின் வயல்” என்று அர்த்தம் — அங்கே நடந்த கொடிய கைகலப்புச் சண்டையினிமித்தம் அந்த இடத்திற்கு இப்பேர் வந்தது. 17அன்றையதினம் யுத்தம் மிகவும் கடினமாயிருந்தது; அப்னேரும் இஸ்ரவேலின் மனிதரும் தாவீதின் ஊழியக்காரருக்கு முன்பாக முறியடிக்கப்பட்டார்கள். 18அங்கே செருயாளின் மூன்று மகன்களாகிய யோவாப், அபிசாய், ஆசகேல் என்பவர்கள் இருந்தார்கள்; ஆசகேல் காட்டு வெளிமான்போல வேகமான காலுள்ளவனாயிருந்தான். 19ஆசகேல் அப்னேரைப் பின்தொடர்ந்து, வலதுபுறமும் இடதுபுறமும் விலகாமல் அவனைப் பின்தொடர்ந்தான். 20அப்னேர் திரும்பிப்பார்த்து, “நீ ஆசகேல்தானா?” என்றான். அவன், “நான்தான்” என்றான்.
21அப்பொழுது அப்னேர் அவனை நோக்கி, “நீ வலதுபுறமாகிலும் இடதுபுறமாகிலும் விலகி, வாலிபரில் ஒருவனைப் பிடித்து, அவனுடைய ஆயுதங்களை எடுத்துக்கொள்” என்றான். ஆனாலும் ஆசகேல் அவனைப் பின்தொடர்வதை விடமாட்டேன் என்றான். 22அப்னேர் மறுபடியும் ஆசகேலை நோக்கி, “நீ என்னைவிட்டுத் திரும்பிப்போ; நான் உன்னை ஏன் தரையிலே வெட்டிவிழத்தட்டவேண்டும்? அப்படிச் செய்தால் உன் சகோதரனாகிய யோவாபின் முகத்தை நான் எப்படிப் பார்ப்பேன்?” என்றான். 23அப்படியிருந்தும் அவன் விலகமாட்டேன் என்றபடியால், அப்னேர் தன் ஈட்டியின் பின்முனையால் அவனை வயிற்றிலே குத்தினான்; அது அவனுடைய முதுகைப் பிளந்து புறப்பட்டது; அவன் அங்கேயே விழுந்து அந்த இடத்திலேயே மரித்தான். ஆசகேல் விழுந்து மரித்துக்கிடந்த இடத்திற்கு வந்தவர்கள் எல்லாரும் அங்கே நின்றுவிட்டார்கள். 24யோவாபும் அபிசாயும் அப்னேரைப் பின்தொடர்ந்தார்கள்; சூரியன் அஸ்தமிக்கிறபோது, கிபியோன் வனாந்தரத்திற்குப் போகிற வழியில் கீயாவுக்கு எதிரான அம்மா என்னும் மேட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். 25பென்யமீன் புத்திரர் அப்னேருக்குப் பின்னாக ஒன்றாய்க் கூடிவந்து, ஒரே கூட்டமாகி, ஒரு மேட்டின்மேல் நின்றார்கள். 26அப்பொழுது அப்னேர் யோவாபைக் கூப்பிட்டு, “பட்டயம் என்றைக்கும் பட்சித்துக்கொண்டேயிருக்கவேண்டுமோ? இதின் முடிவு கசப்பாயிருக்குமென்று உனக்குத் தெரியாதா? தங்கள் சகோதரரைப் பின்தொடராமல் திரும்பும்படி மக்களுக்கு நீ எத்தனை நேரத்திற்குச் சொல்லாதிருப்பாய்?” என்றான்.
27அதற்கு யோவாப், “நீ இப்படிப் பேசாதிருந்தால், மக்கள் இன்று விடியற்காலம்மட்டும் தங்கள் சகோதரரைப் பின்தொடர்ந்துகொண்டேயிருப்பார்களென்று, எங்கள் பிதா ஜீவனுள்ளவர் என்பது நிச்சயம்” என்றான். 28பின்பு யோவாப் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சேனையெல்லாம் நின்று, இனி இஸ்ரவேலைப் பின்தொடராமலும் யுத்தம்பண்ணாமலும் இருந்தார்கள். 29அப்னேரும் அவனுடைய மனிதரும் அந்த இராமுழுவதும் அரபா வழியாய் நடந்து, யோர்தானைக் கடந்து, பித்ரோன் முழுவதையும் கடந்துபோய், மகனாயீமுக்கு வந்து சேர்ந்தார்கள்.
30யோவாப் அப்னேரைப் பின்தொடர்வதைவிட்டுத் திரும்பி, சேனையெல்லாத்தையும் கூட்டினபோது, ஆசகேலைத் தவிர, தாவீதின் மனிதரில் பத்தொன்பதுபேர் இல்லாமற்போனதைக் கண்டான். 31ஆனாலும் தாவீதின் ஊழியக்காரர் அப்னேரோடிருந்த பென்யமீன் மனிதரில் முந்நூற்று அறுபதுபேரை வெட்டி வீழ்த்தினார்கள். 32அவர்கள் ஆசகேலை எடுத்து, பெத்லகேமிலிருந்த அவன் தகப்பனுடைய கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; யோவாபும் அவன் மனிதரும் இராமுழுவதும் நடந்து, விடியற்காலத்தில் எப்ரோனுக்கு வந்து சேர்ந்தார்கள்.