எப்பிராயீம் காட்டிலே அப்சலோம் விழுகிறான்
18 1தாவீது தன்னோடிருந்த ஜனங்களை எண்ணிப்பார்த்து, அவர்கள்மேல் ஆயிரம்பேருக்கு அதிபதிகளையும் நூறுபேருக்கு அதிபதிகளையும் ஏற்படுத்தினான். 2தாவீது ஜனங்களை அனுப்பினான்: ஒரு பங்கை யோவாப் கையின்கீழும், ஒரு பங்கை யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமாகிய அபிசாய் கையின்கீழும், ஒரு பங்கை கித்தியனாகிய ஈத்தாய் கையின்கீழும் அனுப்பினான். ராஜா ஜனங்களை நோக்கி, “நானும் உங்களோடேகூட நிச்சயமாய்ப் புறப்பட்டு வருவேன்” என்றான்.
3அதற்கு ஜனங்கள்: “நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் ஓடிப்போனாலும் அவர்கள் எங்களைப் பொருட்படுத்தமாட்டார்கள்; எங்களில் பாதிபேர் மடிந்தாலும் அவர்கள் எங்களைப் பொருட்படுத்தமாட்டார்கள்; நீரோ எங்களில் பதினாயிரம்பேருக்குச் சமமானவர்; ஆகையால் நீர் நகரத்திலிருந்து எங்களுக்கு உதவி அனுப்ப ஆயத்தமாயிருப்பதே நலம்” என்றார்கள்.
4ராஜா அவர்களை நோக்கி, “உங்கள் பார்வைக்கு நலமாய்த் தோன்றுகிறபடியே செய்வேன்” என்றான். பின்பு ஜனங்கள் எல்லாரும் நூறுநூறாகவும் ஆயிரம் ஆயிரமாகவும் புறப்படுகையில், ராஜா வாசலின் அருகே நின்றான்.
5ராஜா யோவாப்புக்கும் அபிசாய்க்கும் ஈத்தாய்க்கும், “என்னிமித்தம் வாலிபனாகிய அப்சலோமை மென்மையாய் நடத்துங்கள்” என்று கட்டளையிட்டான். அப்சலோமைக்குறித்து ராஜா அதிபதிகளுக்குக் கட்டளையிடுகிறதை ஜனங்கள் எல்லாரும் கேட்டார்கள்.
6ஜனங்கள் இஸ்ரவேலுக்கு விரோதமாய் வெளியில் புறப்பட்டார்கள்; யுத்தம் எப்பிராயீம் காட்டிலே நடந்தது. 7அங்கே இஸ்ரவேலின் இராணுவம் தாவீதின் மனுஷரால் முறியடிக்கப்பட்டது; அந்நாளில் இருபதினாயிரம்பேர் மடிந்த பெரிய சங்காரம் உண்டாயிற்று. 8யுத்தம் அந்த முழுப் பிரதேசமெங்கும் பரவிற்று; அந்நாளில் பட்டயம் பட்சித்ததைப்பார்க்கிலும் காடு அதிக ஜனங்களைப் பட்சித்தது.
9அப்சலோம் தாவீதின் மனுஷருக்கு எதிர்ப்பட்டான். அவன் தன் கோவேறுகழுதையின்மேல் ஏறிப்போகையில், ஒரு பெரிய கர்வாலிமரத்தின் அடர்ந்த கிளைகளின்கீழ் அவன் போனான்; அவன் தலை அந்த மரத்திலே இறுகச் சிக்கிக்கொண்டது; கீழே கோவேறுகழுதை போய்விட, அவன் வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான். 10ஒரு மனுஷன் அதைக் கண்டு யோவாப்பிடம், “இதோ, அப்சலோம் ஒரு கர்வாலிமரத்திலே தொங்குகிறதை இப்பொழுது கண்டேன்” என்று சொன்னான்.
11யோவாப் தன்னிடம் சொன்னவனை நோக்கி, “நீ அவனைக் கண்டாயே! பின்னை ஏன் அங்கே அவனைத் தரையிலே வெட்டி வீழ்த்தவில்லை? அப்படிச் செய்திருந்தால் பத்து நாள் கூலிக்குச் சமமான வெள்ளியையும் ஒரு கச்சையையும் உனக்குக் கொடுக்கக் கடமைப்பட்டிருப்பேனே” என்றான்.
12அதற்கு அந்த மனுஷன் யோவாப்பை நோக்கி, “ஆயிரம் நாள் கூலிக்குச் சமமான வெள்ளி என் உள்ளங்கையில் நிறுத்துக் கொடுக்கப்பட்டாலும், நான் ராஜாவின் குமாரன்மேல் என் கையை நீட்டமாட்டேன்; ஏனெனில், ‘என்னிமித்தம் வாலிபனாகிய அப்சலோமைக் காப்பாற்றுங்கள்’ என்று ராஜா உமக்கும் அபிசாய்க்கும் ஈத்தாய்க்கும் கட்டளையிட்டதை நாங்கள் எல்லாரும் கேட்டோமே. 13இல்லாவிட்டால், நான் என் பிராணனை வீணாய்க் கழித்திருப்பேன்; ஏனெனில் ராஜாவுக்கு மறைவானது ஒன்றுமில்லை; அப்பொழுது நீரும் என்னைவிட்டு விலகி நின்றிருப்பீர்” என்றான்.
14அப்பொழுது யோவாப்: “இப்படி உன்னோடே நான் நேரத்தை வீணாக்கமாட்டேன்” என்று சொல்லி, மூன்று ஈட்டிகளைத் தன் கையில் எடுத்து, கர்வாலிமரத்தின் நடுவிலே இன்னும் உயிரோடிருந்த அப்சலோமின் இருதயத்திலே அவைகளைப் பாய்ச்சினான். 15யோவாபின் ஆயுததாரிகளாகிய பத்து வாலிபர் அப்சலோமைச் சூழ்ந்துகொண்டு, அவனை அடித்துக் கொன்றார்கள். 16பின்பு யோவாப் எக்காளம் ஊதினான்; யோவாப் ஜனங்களைத் தடுத்ததால், அவர்கள் இஸ்ரவேலைப் பின்தொடர்வதை நிறுத்தினார்கள். 17அவர்கள் அப்சலோமை எடுத்து, காட்டிலிருந்த ஒரு பெரிய பள்ளத்திலே போட்டு, அவன்மேல் மகா பெரிய கற்குவியலைக் குவித்தார்கள். இஸ்ரவேலர் யாவரும் அவரவர் தங்கள் வீட்டுக்கு ஓடிப்போனார்கள்.
18அப்சலோம் உயிரோடிருக்கையில், “என் நாமத்தை நினைவுகூரும்படி எனக்கு ஒரு குமாரனும் இல்லை” என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கு ஒரு தூணை நாட்டி வைத்திருந்தான். அவன் அந்தத் தூணுக்குத் தன் பேரையே சூட்டினான்; அது இந்நாள்வரைக்கும் அப்சலோமின் நினைவுத்தூண் என்று அழைக்கப்படுகிறது. a a v18 அப்சலோமுக்குக் குமாரர் பிறந்திருந்தார்கள் (2 சாமுவேல் 14:27), ஆனால் அவர்கள் அவனுக்கு முன்பே மரித்துப்போனதாகத் தெரிகிறது; இதனால் அவன் நாமத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்த வாரிசு எவரும் அவனுக்கு இல்லாமற்போயிற்று.
தன் மகன் அப்சலோமுக்காக தாவீது அழுகிறான்
19சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ்: “நான் ஓடிப்போய், எங்கள் பிதா ராஜாவை அவருடைய சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி நீதிசெய்தார் என்று அவருக்கு அறிவிக்கிறேன்” என்றான்.
20யோவாப் அவனை நோக்கி, “இன்று நீ செய்தி கொண்டுபோகிறவன் அல்ல; வேறொரு நாளில் நீ செய்தி கொண்டுபோகலாம்; ஆனால் ராஜாவின் குமாரன் மரித்துப்போனபடியால், இன்று நீ ஒரு செய்தியும் கொண்டுபோகவேண்டாம்” என்றான்.
21பின்பு யோவாப் கூஷியனை நோக்கி, “நீ போய், கண்டதை ராஜாவுக்கு அறிவி” என்றான். கூஷியன் யோவாப்பை வணங்கி ஓடினான்.
22சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ் மறுபடியும் யோவாப்பை நோக்கி, “எது நேரிட்டாலும் நேரிடட்டும், நானும் கூஷியன் பின்னாலே ஓடிப்போக தயவுசெய்து அனுமதியும்” என்றான். அதற்கு யோவாப்: “என் மகனே, நீ ஏன் ஓடவேண்டும்? பரிசுக்குரிய செய்தி உன்னிடத்தில் இல்லையே” என்றான்.
23அதற்கு அவன்: “எது நேரிட்டாலும், நான் ஓடுவேன்” என்றான். “ஓடு” என்று யோவாப் சொன்னான். அப்பொழுது அகிமாஸ் சமபூமி வழியாய் ஓடி, கூஷியனை முந்திக்கொண்டான்.
24தாவீது இரண்டு வாசல்களுக்கு நடுவே உட்கார்ந்திருந்தான். ஜாமக்காரன் மதிலின் அருகிலிருந்த வாசலின் மேல்தளத்தில் ஏறி, தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, ஒரு மனுஷன் தனியே ஓடிவருகிறதைக் கண்டான். 25ஜாமக்காரன் சத்தமிட்டு ராஜாவுக்கு அறிவித்தான். ராஜா: “அவன் தனியே வந்தால், அவன் வாயில் செய்தி உண்டு” என்றான். ஓடிவந்தவன் மேலும் சமீபமாய் வந்துகொண்டிருந்தான்.
26ஜாமக்காரன் வேறொரு மனுஷன் ஓடிவருகிறதைக் கண்டு, வாசல் காக்கிறவனை நோக்கி, “இதோ, இன்னொரு மனுஷன் தனியே ஓடிவருகிறான்” என்று கூப்பிட்டான். ராஜா: “அவனும் செய்தி கொண்டுவருகிறான்” என்றான்.
27ஜாமக்காரன்: “முந்தினவன் ஓடுகிற ஓட்டம் சாதோக்கின் குமாரனாகிய அகிமாசின் ஓட்டம்போல் இருக்கிறது” என்றான். ராஜா: “அவன் நல்ல மனுஷன்; அவன் நற்செய்தியோடே வருகிறான்” என்றான்.
28அகிமாஸ் ராஜாவைப் பார்த்து, “சமாதானம்!” என்று கூப்பிட்டு, ராஜாவுக்கு முன்பாகத் தரைமட்டும் முகங்குனிந்து பணிந்து, “ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினவர்களை ஒப்புக்கொடுத்த உம்முடைய பிதாவுக்கு ஸ்தோத்திரம்” என்றான்.
29ராஜா: “வாலிபனாகிய அப்சலோம் சேமமாய் இருக்கிறானா?” என்று கேட்டான். அதற்கு அகிமாஸ்: “ராஜாவின் ஊழியக்காரனையும் உமது அடியேனையும் யோவாப் அனுப்புகையில், பெரிய அமளியைக் கண்டேன்; ஆனால் அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை” என்றான்.
30ராஜா: “ஒரு பக்கமாய் விலகி இங்கே நில்” என்றான். அப்படியே அவன் ஒரு பக்கமாய் விலகி அமைதியாய் நின்றான்.
31அப்பொழுது கூஷியன் வந்து, “ராஜாவாகிய என் ஆண்டவனே, நற்செய்தி! உமக்கு விரோதமாய் எழும்பின யாவரின் கைக்கும் கர்த்தர் உம்மை இன்று நீங்கலாக்கி விடுவித்தார்” என்றான்.
32ராஜா கூஷியனை நோக்கி, “வாலிபனாகிய அப்சலோம் சேமமாய் இருக்கிறானா?” என்று கேட்டான். அதற்கு கூஷியன்: “ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களும், உமக்குத் தீங்குசெய்ய உமக்கு விரோதமாய் எழும்புகிற யாவரும், அந்த வாலிபனைப்போல் ஆகக்கடவர்கள்” என்றான்.
33அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, வாசலின் மேல் அறைக்கு ஏறிப்போய், அழுதுகொண்டே நடந்து: “என் மகனே அப்சலோமே! என் மகனே, என் மகனே அப்சலோமே! உனக்குப் பதிலாக நானே செத்திருந்தால் நலமாயிருக்குமே; அப்சலோமே, என் மகனே, என் மகனே!” என்று புலம்பினான்.