அம்னோன் தன் சகோதரி தாமாரைக் கற்பழிக்கிறான்
13 1இதற்குப் பின்பு, தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேரழகுள்ள ஒரு சகோதரி இருந்தாள்; தாவீதின் குமாரனாகிய அம்னோன் அவளை நேசித்தான். 2அம்னோன் தன் சகோதரி தாமாரை நினைத்து மிகவும் மனம்வருந்தி, தன்னையே வியாதிப்படுத்திக்கொண்டான்; அவள் கன்னிகையாயிருந்தாள், அவளை அணுகுவதற்கு அம்னோனுக்கு வழியே தோன்றவில்லை. 3அம்னோனுக்கு யோனதாப் என்னும் ஒரு நண்பன் இருந்தான்; அவன் தாவீதின் சகோதரனாகிய சிமியாவின் குமாரன்; இந்த யோனதாப் மிகவும் தந்திரமுள்ளவனாயிருந்தான். 4அவன் அம்னோனை நோக்கி, “ராஜாவின் குமாரனே, நாளுக்குநாள் நீ ஏன் இப்படி வாடிப்போகிறாய்? எனக்குச் சொல்லமாட்டாயா?” என்றான். அதற்கு அம்னோன், “என் சகோதரனாகிய அப்சலோமின் சகோதரி தாமாரை நான் நேசிக்கிறேன்” என்றான்.
5அப்பொழுது யோனதாப் அவனை நோக்கி, “நீ படுக்கையிலே படுத்துக்கொண்டு, வியாதிக்காரன்போல் காண்பி; உன்னைப் பார்க்க உன் தகப்பன் வரும்போது, ‘என் சகோதரி தாமார் வந்து எனக்கு ஆகாரம் ஊட்டுவாளாக; அவள் நான் பார்க்கும்படி எனக்கு முன்பாகச் சமையல் செய்து, அவள் கையினால் நான் சாப்பிடும்படி செய்வாளாக’ என்று அவரிடம் சொல்” என்றான்.
6அப்படியே அம்னோன் படுத்துக்கொண்டு, வியாதிக்காரன்போல் காண்பித்தான். அவனைப் பார்க்க ராஜா வந்தபோது, அம்னோன் ராஜாவை நோக்கி, “என் சகோதரி தாமார் வந்து, நான் பார்க்கும்படி இரண்டு அப்பங்களைச் செய்து, நான் அவள் கையினால் சாப்பிடும்படி செய்யட்டும்” என்றான்.
7தாவீது அரண்மனையிலிருந்த தாமாருக்கு ஆள் அனுப்பி, “உன் சகோதரன் அம்னோனுடைய வீட்டுக்குப் போய், அவனுக்கு ஆகாரம் செய்” என்று சொல்லச்சொன்னான். 8தாமார் தன் சகோதரன் அம்னோன் படுத்திருந்த வீட்டுக்குப் போய், மாவை எடுத்துப் பிசைந்து, அவனுக்கு முன்பாக அப்பங்களைச் செய்து, அவைகளைச் சுட்டாள். 9பின்பு அவள் சட்டியை எடுத்து அவனுக்கு முன்பாகப் பரிமாறினாள்; ஆனால் அவன் சாப்பிட மறுத்து, “எல்லாரையும் என்னைவிட்டு வெளியே அனுப்பு” என்றான். அப்படியே எல்லாரும் அவனைவிட்டு வெளியே போனார்கள். 10அப்பொழுது அம்னோன் தாமாரை நோக்கி, “உன் கையினால் நான் சாப்பிடும்படி, ஆகாரத்தைப் படுக்கையறைக்குள் கொண்டுவா” என்றான். தாமார் தான் செய்த அப்பங்களை எடுத்து, படுக்கையறையிலிருந்த தன் சகோதரன் அம்னோனிடத்தில் கொண்டுவந்தாள். 11அவள் சாப்பிடும்படி அவைகளை அவனண்டையில் கொண்டுவந்தபோது, அவன் அவளைப் பிடித்து, “என் சகோதரியே, வா, என்னோடே சயனி” என்றான்.
12அதற்கு அவள், “வேண்டாம், என் சகோதரனே! என்னைக் கற்பழிக்காதே; இஸ்ரவேலிலே இப்படிப்பட்ட காரியம் ஒருபோதும் செய்யப்படுவதில்லை; இந்த மானக்கேடான காரியத்தைச் செய்யாதே. 13நான் என் அவமானத்தை எங்கே கொண்டுபோவேன்? நீயோ இஸ்ரவேலிலே அவமதிக்கப்படத்தக்க மூடரில் ஒருவனைப்போல் ஆவாய். ஆகையால் ராஜாவோடே பேசு; அவர் என்னை உனக்கு மறுக்கமாட்டார்” என்றாள்.
14ஆனாலும் அவன் அவள் சொல்லைக் கேட்க மனதில்லாமல், அவளைப்பார்க்கிலும் பலத்தவனாயிருந்தபடியால், அவளைக் கற்பழித்து அவளோடே சயனித்தான். 15பின்பு அம்னோன் அவளை மிகுந்த வெறுப்பாய் வெறுத்தான்; அவன் அவளை வெறுத்த வெறுப்பு, அவளை நேசித்திருந்த நேசத்திலும் அதிகமாயிருந்தது. அம்னோன் அவளை நோக்கி, “எழுந்து போய்விடு” என்றான்.
16அதற்கு அவள், “வேண்டாம், என்னைத் துரத்திவிடுகிற இந்த அநியாயம், நீ ஏற்கெனவே எனக்குச் செய்த அநியாயத்திலும் கொடியது” என்றாள். ஆனாலும் அவன் அவள் சொல்லைக் கேட்க மனதில்லாதிருந்தான்.
17அவன் தனக்குப் பணிவிடை செய்கிற வேலைக்காரனைக் கூப்பிட்டு, “இந்த ஸ்திரீயை என்னைவிட்டு வெளியே தள்ளி, அவள் பின்னாலே கதவைப் பூட்டு” என்றான்.
18அவள் நெடிய அலங்காரமான அங்கியை உடுத்தியிருந்தாள்; அந்நாட்களில் ராஜாவின் கன்னிகைப் பெண்கள் இப்படிப்பட்ட வஸ்திரங்களை உடுத்தியிருந்தார்கள். அவனுடைய வேலைக்காரன் அவளை வெளியே தள்ளி, அவள் பின்னாலே கதவைப் பூட்டினான். 19தாமார் தன் தலையின்மேல் சாம்பலைப் போட்டுக்கொண்டு, தான் உடுத்தியிருந்த நெடிய அலங்காரமான அங்கியைக் கிழித்து, தன் தலையின்மேல் கையை வைத்துக்கொண்டு, சத்தமிட்டு அழுதுகொண்டே போனாள். 20அவள் சகோதரன் அப்சலோம் அவளை நோக்கி, “உன் சகோதரனாகிய அம்னோன் உன்னோடே இருந்தானோ? என் சகோதரியே, இப்பொழுது மவுனமாயிரு; அவன் உன் சகோதரன்; இந்தக் காரியத்தை மனதிலே வைக்காதே” என்றான். அப்படியே தாமார் தன் சகோதரன் அப்சலோமின் வீட்டிலே பாழாய்ப்போன ஸ்திரீயாகத் தனித்துக் குடியிருந்தாள்.
21தாவீது ராஜா இந்தச் சங்கதிகளையெல்லாம் கேள்விப்பட்டபோது, மிகவும் கோபமடைந்தான். 22அப்சலோம் அம்னோனோடே நன்மையையாகிலும் தீமையையாகிலும் பேசாதிருந்தான்; ஏனெனில் அம்னோன் தன் சகோதரி தாமாரைக் கற்பழித்தபடியால், அப்சலோம் அவனை வெறுத்திருந்தான்.
அப்சலோம் தன் சகோதரி தாமாருக்காகப் பழிவாங்குகிறான்
23இரண்டு வருஷம் முழுமையாய் முடிந்தபின்பு, எப்பிராயீமுக்குச் சமீபமான பாகால் ஆத்சோரிலே அப்சலோமுக்கு ஆட்டு மயிர் கத்தரிக்கிறவர்கள் இருந்தார்கள்; அப்பொழுது அவன் ராஜாவின் குமாரர் எல்லாரையும் அழைத்தான். 24அப்சலோம் ராஜாவினிடத்தில் போய், “இதோ, உம்முடைய அடியானுக்கு ஆட்டு மயிர் கத்தரிக்கிறவர்கள் இருக்கிறார்கள்; ராஜாவும் உம்முடைய ஊழியக்காரரும் தயவுசெய்து உம்முடைய அடியானோடே வரவேண்டும்” என்றான்.
25ராஜா அப்சலோமை நோக்கி, “வேண்டாம், என் மகனே, நாங்கள் எல்லாரும் வந்தால் உனக்குப் பாரமாயிருப்போம்” என்றான். அப்சலோம் அவனை வருந்தி அழைத்தும், அவன் போக மனதில்லாமல் அவனை ஆசீர்வதித்தான்.
26அப்பொழுது அப்சலோம், “நீர் வராவிட்டால், என் சகோதரனாகிய அம்னோனாவது தயவுசெய்து எங்களோடே வரட்டும்” என்றான். ராஜா அவனை நோக்கி, “அவன் உன்னோடே ஏன் வரவேண்டும்?” என்றான்.
27ஆனாலும் அப்சலோம் அவனை வருந்திக் கேட்டுக்கொண்டதினால், அவன் அம்னோனையும் ராஜாவின் குமாரர் எல்லாரையும் அவனோடே அனுப்பினான். 28அப்சலோம் தன் வேலைக்காரருக்குக் கட்டளையிட்டு, “நன்றாய்க் கவனித்திருங்கள்; திராட்சரசத்தினால் அம்னோனுடைய மனம் மகிழ்ச்சியாயிருக்கும்போது, நான் உங்களை நோக்கி, ‘அம்னோனை வெட்டுங்கள்’ என்று சொல்லும்போது, அவனைக் கொல்லுங்கள்; பயப்படாதிருங்கள்; நான்தானே உங்களுக்குக் கட்டளையிட்டேன்? திடன்கொண்டு தைரியமாயிருங்கள்” என்றான்.
29அப்சலோம் கட்டளையிட்டபடியே அப்சலோமின் வேலைக்காரர் அம்னோனுக்குச் செய்தார்கள். அப்பொழுது ராஜாவின் குமாரர் எல்லாரும் எழுந்து, அவரவர் தங்கள் கோவேறு கழுதையின்மேல் ஏறி ஓடிப்போனார்கள்.
30அவர்கள் வழியிலே வருகையில், “அப்சலோம் ராஜாவின் குமாரர் எல்லாரையும் கொன்றுபோட்டான்; அவர்களில் ஒருவரும் மீதியாயில்லை” என்கிற செய்தி தாவீதுக்கு எட்டியது.
31அப்பொழுது ராஜா எழுந்திருந்து, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தரையிலே கிடந்தான்; அவனண்டையில் நின்ற அவனுடைய ஊழியக்காரர் எல்லாரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு நின்றார்கள். 32ஆனாலும் தாவீதின் சகோதரனாகிய சிமியாவின் குமாரன் யோனதாப் மறுமொழியாக, “ராஜாவின் குமாரராகிய வாலிபர் எல்லாரையும் கொன்றுபோட்டார்கள் என்று என் ஆண்டவன் நினைக்கவேண்டாம்; அம்னோன் மாத்திரமே செத்தான்; ஏனெனில் அம்னோன் அப்சலோமின் சகோதரி தாமாரைக் கற்பழித்த நாள்முதல், அப்சலோம் இதைத் தன் மனதிலே தீர்மானித்திருந்தான். 33ஆகையால் ராஜாவின் குமாரர் எல்லாரும் செத்துப்போனார்கள் என்று ராஜாவாகிய என் ஆண்டவன் மனதிலே வைக்கவேண்டாம்; அம்னோன் மாத்திரமே செத்தான்” என்றான்.
34இதற்குள் அப்சலோம் ஓடிப்போயிருந்தான். காவல்காக்கிற வாலிபன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, தனக்குப் பின்னாக மலைப் பக்கத்து வழியிலே அநேக ஜனங்கள் இறங்கி வருகிறதைக் கண்டான். 35அப்பொழுது யோனதாப் ராஜாவை நோக்கி, “இதோ, ராஜாவின் குமாரர் வந்துவிட்டார்கள்; உம்முடைய அடியான் சொன்னபடியே ஆயிற்று” என்றான். 36அவன் பேசி முடிக்கிறபொழுது, இதோ, ராஜாவின் குமாரர் வந்து சத்தமிட்டு அழுதார்கள்; ராஜாவும் அவனுடைய ஊழியக்காரர் அனைவரும் மிகவும் மனங்கசந்து அழுதார்கள்.
37அப்சலோமோ ஓடிப்போய், கேசூரின் ராஜாவாகிய அம்மியூதின் குமாரன் தல்மாயினிடத்தில் போய்ச்சேர்ந்தான். தாவீது நாள்தோறும் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான். 38அப்சலோம் ஓடிக் கேசூருக்குப் போய், அங்கே மூன்று வருஷம் இருந்தான். 39தாவீது ராஜா அம்னோன் மரித்ததைக்குறித்து ஆறுதலடைந்தபின்பு, அவனுடைய இருதயம் அப்சலோமினிடத்தில் போக ஏங்கிக்கொண்டிருந்தது.