எலிசா நாளைக்குள் அப்பம் கிடைக்கும் என்று வாக்குத்தத்தம் செய்கிறார்
7 1அப்பொழுது எலிசா: “எங்கள் பிதாவின் வார்த்தையைக் கேளுங்கள். எங்கள் பிதா சொல்லுகிறது என்னவென்றால்: நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலில், ஒரு படி மெல்லிய மாவு ஒரு வெள்ளிக்காசுக்கும், இரண்டு படி வாற்கோதுமை ஒரு வெள்ளிக்காசுக்கும் விற்கப்படும்” என்றார்.
2அப்பொழுது ராஜா எவன் கையின்மேல் சாய்ந்து நின்றானோ, அந்தத் தலைவன் எங்கள் பிதாவின் மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: “இதோ, எங்கள் பிதா வானத்தில் மதகுகளைத் திறந்தாலும் இது நடக்குமோ?” என்றான். அதற்கு எலிசா: “நீ அதை உன் கண்களால் காண்பாய், ஆனால் அதில் ஒன்றையும் புசிக்கமாட்டாய்” என்றார்.
எங்கள் பிதா சீரிய சேனையைச் சிதறடிக்கிறார்
3தொழுநோயுள்ள நான்கு மனுஷர் வாசல் நடையில் இருந்தார்கள்; அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: “நாம் சாகுமளவும் ஏன் இங்கே உட்கார்ந்திருக்கவேண்டும்? 4நாம், ‘பட்டணத்திற்குள் போவோம்’ என்று சொன்னால், பட்டணத்தில் பஞ்சம் இருக்கிறது, அங்கே சாவோம்; இங்கே இருந்தாலும் சாவோம். ஆகையால் வாருங்கள், சீரியரின் பாளயத்திற்குப் போவோம். அவர்கள் நம்மை உயிரோடே வைத்தால் பிழைப்போம்; நம்மைக் கொன்றால் சாவோம்” என்றார்கள்.
5அப்படியே அந்திமாலையில் சீரியரின் பாளயத்திற்குப் போக எழுந்து, பாளயத்தின் முனையில் சேர்ந்தபோது, இதோ, அங்கே ஒருவரும் இல்லை. 6ஏனெனில் சர்வவல்லமையுள்ள பிதா சீரிய சேனையின் காதுகளில் இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், பெரிய சேனையின் இரைச்சலையும் கேட்கப்பண்ணினார்; அதினால் அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: “இதோ, இஸ்ரவேலின் ராஜா நம்மைத் தாக்குவதற்கு ஏத்தியரின் ராஜாக்களையும், எகிப்தியரின் ராஜாக்களையும் நமக்கு விரோதமாகக் கூலிக்கு வாங்கியிருக்கிறான்!” என்று சொல்லிக்கொண்டார்கள். 7ஆகையால் அவர்கள் எழுந்து, அந்திமாலையில் தங்கள் கூடாரங்களையும், குதிரைகளையும், கழுதைகளையும் விட்டுவிட்டு, பாளயத்தை இருந்தபடியே விட்டு, தங்கள் உயிருக்காக ஓடிப்போனார்கள். 8தொழுநோயுள்ள அந்த மனுஷர் பாளயத்தின் முனையில் சேர்ந்தபோது, ஒரு கூடாரத்திற்குள் புகுந்து, புசித்துக் குடித்து, அங்கேயிருந்து வெள்ளியையும், பொன்னையும், வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்தார்கள். திரும்பிவந்து, வேறொரு கூடாரத்திற்குள் புகுந்து, அதிலிருந்தும் எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்தார்கள். 9பின்பு அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: “நாம் செய்கிறது சரியல்ல; இந்த நாள் நற்செய்தியின் நாளாயிருக்கிறது, நாமோ மவுனமாயிருக்கிறோம். விடியற்காலைவரைக்கும் நாம் காத்திருந்தால், தண்டனை நம்மைக் கண்டடையும். இப்போதும் வாருங்கள், போய் ராஜாவின் குடும்பத்துக்கு அறிவிப்போம்” என்றார்கள்.
10அப்படியே அவர்கள் வந்து, பட்டணத்தின் வாசல் காவலாளரைக் கூப்பிட்டு: “நாங்கள் சீரியரின் பாளயத்திற்குப் போனோம்; இதோ, அங்கே ஒருவருமில்லை, மனுஷச் சத்தமுமில்லை, கட்டப்பட்டிருந்த குதிரைகளும் கழுதைகளும் மாத்திரமே இருந்தன; கூடாரங்களும் இருந்தபடியே இருந்தன” என்று அறிவித்தார்கள்.
11வாசல் காவலாளர் அந்தச் செய்தியைக் கூப்பிட்டுச் சொல்ல, அது ராஜாவின் குடும்பத்திற்குள்ளே அறிவிக்கப்பட்டது.
12அந்த இராத்திரியிலே ராஜா எழுந்து, தன் ஊழியக்காரரை நோக்கி: “சீரியர் நமக்கு விரோதமாகச் செய்கிற தந்திரத்தை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நாம் பட்டினியாயிருக்கிறதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்; ஆகையால், ‘அவர்கள் பட்டணத்திலிருந்து வெளியே வரும்போது, அவர்களை உயிரோடே பிடித்து, பட்டணத்திற்குள் புகுவோம்’ என்று நினைத்து, வயல்வெளியில் ஒளிந்துகொள்ளப் பாளயத்தைவிட்டுப் போயிருக்கிறார்கள்” என்றான்.
13அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன்: “பட்டணத்தில் மீதியாயிருக்கிற குதிரைகளில் ஐந்தைச் சிலரை எடுத்துக்கொண்டுபோகச் செய்யும்; இங்கே மீதியாயிருக்கிற இஸ்ரவேல் கூட்டத்தார் எல்லாரையும்போலும், ஏற்கெனவே மடிந்துபோன இஸ்ரவேலர் எல்லாரையும்போலும் அவர்களுக்கும் நேரிடும்; அவர்களை அனுப்பிப் பார்ப்போம்” என்றான்.
14அப்படியே அவர்கள் குதிரைகள் பூட்டிய இரண்டு இரதங்களை எடுத்துக்கொண்டார்கள்; ராஜா அவைகளைச் சீரிய சேனையைப் பின்தொடரும்படி அனுப்பி: “போய் விசாரித்துப் பாருங்கள்” என்றான். 15அவர்கள் யோர்தான்வரைக்கும் அவர்களைப் பின்தொடர்ந்துபோனார்கள்; இதோ, சீரியர் தாங்கள் விரைந்து ஓடிப்போகையில் எறிந்துவிட்ட வஸ்திரங்களாலும் தட்டுமுட்டுகளாலும் வழியெல்லாம் நிறைந்திருந்தது. அந்தத் தூதர் திரும்பிவந்து ராஜாவுக்கு அறிவித்தார்கள்.
16அப்பொழுது ஜனங்கள் வெளியே போய், சீரியரின் பாளயத்தைக் கொள்ளையிட்டார்கள். அதினால் எங்கள் பிதா சொன்னபடியே, ஒரு படி மெல்லிய மாவு ஒரு வெள்ளிக்காசுக்கும், இரண்டு படி வாற்கோதுமை ஒரு வெள்ளிக்காசுக்கும் விற்கப்பட்டது. 17ராஜா எவன் கையின்மேல் சாய்ந்து நின்றானோ, அந்தத் தலைவனை வாசலின்மேல் கண்காணியாக வைத்திருந்தான்; ஜனங்கள் அவனை வாசலில் மிதித்துப்போட்டார்கள், அவன் செத்தான்; ராஜா எங்கள் பிதாவின் மனுஷனிடத்தில் இறங்கிவந்தபோது அவர் சொல்லியிருந்தபடியே ஆயிற்று. 18எங்கள் பிதாவின் மனுஷன் ராஜாவுக்கு: “நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலில், இரண்டு படி வாற்கோதுமை ஒரு வெள்ளிக்காசுக்கும், ஒரு படி மெல்லிய மாவு ஒரு வெள்ளிக்காசுக்கும் விற்கப்படும்” என்று சொல்லியிருந்தபடியே நடந்தது. 19அந்தத் தலைவன் எங்கள் பிதாவின் மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: “இதோ, எங்கள் பிதா வானத்தில் மதகுகளைத் திறந்தாலும் அப்படிப்பட்ட காரியம் நடக்குமோ?” என்று சொல்லியிருந்தான்; அதற்கு அவர்: “நீ அதை உன் கண்களால் காண்பாய், ஆனால் அதில் ஒன்றையும் புசிக்கமாட்டாய்” என்று சொல்லியிருந்தார். 20அப்படியே அவனுக்கு நடந்தது; ஜனங்கள் அவனை வாசலில் மிதித்துப்போட்டார்கள், அவன் செத்தான்.