பிதாவானவர் நாகமானைச் சொஸ்தமாக்குகிறார்
5 1சீரியாவின் ராஜாவின் சேனாபதியாகிய நாகமான், தன் எஜமானுக்குமுன் பெரியவனும் கனம்பொருந்தினவனுமாய் இருந்தான்; ஏனெனில் அவனைக்கொண்டு எங்கள் பிதா சீரியாவுக்கு ஜெயத்தைக் கொடுத்திருந்தார். அவன் பராக்கிரமசாலியாகிய போர்வீரனாயிருந்தான், ஆனாலும் அவனுக்குத் தோல்வியாதி இருந்தது. 2சீரியர் கூட்டமாய்ப் புறப்பட்டு, இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறுபெண்ணைச் சிறைபிடித்துக் கொண்டுபோயிருந்தார்கள்; அவள் நாகமானுடைய மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள். 3அவள் தன் எஜமாட்டியை நோக்கி, “என் எஜமான் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்! அவர் இவருடைய குஷ்டரோகத்தைச் சொஸ்தமாக்குவார்” என்றாள்.
4அப்பொழுது நாகமான் உள்ளே போய், “இஸ்ரவேல் தேசத்துப் பெண் இப்படிச் சொன்னாள்” என்று தன் எஜமானுக்கு அறிவித்தான்.
5அதற்குச் சீரியாவின் ராஜா, “நீ போ; இஸ்ரவேலின் ராஜாவுக்கு ஒரு நிருபத்தை அனுப்புகிறேன்” என்றான். அப்படியே நாகமான் ஏறக்குறைய எழுநூற்று ஐம்பது ராத்தல் வெள்ளியையும், நூற்று ஐம்பது ராத்தல் பொன்னையும், பத்து ஜோடி வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.
6அவன் அந்த நிருபத்தை இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் கொண்டுவந்தான்; அதில்: “என் ஊழியக்காரனாகிய நாகமானின் தோல்வியாதியைச் சொஸ்தமாக்கும்படி, இந்த நிருபத்தோடே அவனை உம்மிடத்திற்கு அனுப்பியிருக்கிறேன்” என்று எழுதியிருந்தது.
7இஸ்ரவேலின் ராஜா அந்த நிருபத்தை வாசித்தபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, “ஒரு மனிதனுடைய தோல்வியாதியைச் சொஸ்தமாக்கும்படி இவன் என்னிடத்தில் கேட்கிறானே; கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனோ? பாருங்கள், இவன் என்னோடே சண்டைக்குக் காரணம் தேடுகிறான்” என்றான்.
8இஸ்ரவேலின் ராஜா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டதை எங்கள் பிதாவின் மனுஷனாகிய எலிசா கேள்விப்பட்டபோது, அவன் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி, “நீர் உம்முடைய வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டது ஏன்? அவன் என்னிடத்தில் வரட்டும்; இஸ்ரவேலிலே ஒரு தீர்க்கதரிசி உண்டென்று அவன் அறிந்துகொள்வான்” என்று சொல்லச்சொன்னான்.
9அப்படியே நாகமான் தன் குதிரைகளோடும் இரதங்களோடும் வந்து, எலிசாவின் வீட்டு வாசலிலே நின்றான். 10எலிசா அவனிடத்தில் ஒரு தூதனை அனுப்பி, “நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் சீர்ப்பட்டு நீ சுத்தமாவாய்” என்று சொல்லச்சொன்னான்.
11ஆனாலும் நாகமான் கோபமடைந்து போய், “அவர் நிச்சயமாய் என்னிடத்தில் வெளியே வந்து, நின்று, கர்த்தராகிய தன் தேவனுடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, தமது கையை அந்த இடத்தின்மேல் அசைத்து, வியாதியைச் சொஸ்தமாக்குவார் என்று நினைத்திருந்தேன். 12தமஸ்குவின் நதிகளாகிய அப்னாவும் பர்ப்பாரும் இஸ்ரவேலின் சகல ஜலங்களைப்பார்க்கிலும் நல்லவைகள் அல்லவா? அவைகளில் நான் ஸ்நானம்பண்ணிச் சுத்தமாகக்கூடாதா?” என்று சொல்லி, உக்கிரங்கொண்டு திரும்பிப் புறப்பட்டுப்போனான்.
13அப்பொழுது அவனுடைய ஊழியக்காரர் அவனிடத்தில் சேர்ந்து, “என் தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஏதாகிலும் பெரிய காரியத்தைச் செய்யும்படி உமக்குச் சொல்லியிருந்தால், நீர் செய்யமாட்டீரோ? ‘ஸ்நானம்பண்ணிச் சுத்தமாகும்’ என்று மாத்திரம் அவர் சொல்லும்போது, எத்தனை அதிகமாய்ச் செய்யவேண்டும்?” என்றார்கள்.
14அப்பொழுது அவன் எங்கள் பிதாவின் மனுஷன் சொன்னபடியே இறங்கிப்போய், யோர்தானில் ஏழுதரம் மூழ்கினான்; அப்பொழுது அவனுடைய மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்.
15பின்பு நாகமான் தன் எல்லாக் கூட்டத்தோடும் எங்கள் பிதாவின் மனுஷனிடத்திற்குத் திரும்பிவந்து, அவனுக்கு முன்பாக நின்று, “இதோ, இஸ்ரவேலிலே தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லையென்று இப்பொழுது அறிந்தேன்; ஆகையால் உம்முடைய அடியேனிடத்திலிருந்து ஒரு காணிக்கையை ஏற்றுக்கொள்ளும்” என்றான்.
16அதற்கு எலிசா, “நான் யாருக்குமுன்பாக நிற்கிறேனோ, அந்த எங்கள் பிதாவின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன், நான் ஒன்றும் ஏற்றுக்கொள்ளேன்” என்றான். அவன் அதை ஏற்றுக்கொள்ளும்படி நாகமான் வருந்திக் கேட்டும், அவன் மறுத்துவிட்டான்.
17அப்பொழுது நாகமான், “அப்படியானால், இரண்டு கோவேறுகழுதைகள் சுமக்கத்தக்க மண்ணை உம்முடைய அடியேனுக்குக் கொடுக்கவேண்டும்; ஏனெனில் இனிமேல் உம்முடைய அடியேன் கர்த்தருக்கேயன்றி வேறே தேவர்களுக்குச் சர்வாங்க தகனபலியையாவது பலியையாவது செலுத்துவதில்லை. 18இந்த ஒரு காரியத்தில் மாத்திரம் கர்த்தர் உம்முடைய அடியேனுக்கு மன்னிப்பாராக: என் எஜமான் ஆராதனைசெய்ய ரிம்மோனுடைய கோவிலுக்குள் நுழையும்போது, என் கையின்மேல் சாய்ந்துகொள்வார்; அப்பொழுது நான் ரிம்மோனுடைய கோவிலில் பணிந்துகொள்ளுவேன்; நான் அங்கே பணிந்துகொள்ளும்போது, கர்த்தர் உம்முடைய அடியேனுக்கு மன்னிப்பாராக” என்றான்.
19அதற்கு எலிசா, “சமாதானத்தோடே போ” என்றான். அப்படியே நாகமான் அவனிடத்திலிருந்து புறப்பட்டு, கொஞ்சதூரம் போனான்.
20ஆனாலும் எங்கள் பிதாவின் மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரனாகிய கேயாசி, “இதோ, இந்தச் சீரியனாகிய நாகமான் கொண்டுவந்ததை என் எஜமான் ஏற்றுக்கொள்ளாமல் அவனை மிக இலகுவாய் விட்டுவிட்டாரே; எங்கள் பிதாவின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன், நான் அவன் பின்னே ஓடிப்போய், அவனிடத்தில் ஏதாகிலும் வாங்கிக்கொள்ளுவேன்” என்று நினைத்தான்.
21அப்படியே கேயாசி நாகமானின் பின்னே ஓடினான். நாகமான் தன் பின்னே ஓடிவருகிறவனைக் கண்டு, அவனுக்கு எதிர்கொண்டுபோக இரதத்திலிருந்து இறங்கி, “எல்லாம் சுகமா?” என்றான்.
22அதற்குக் கேயாசி, “சுகந்தான்; ‘இதோ, இப்பொழுது எப்பிராயீம் மலைநாட்டிலிருந்து தீர்க்கதரிசிகளின் புத்திரரில் இரண்டு வாலிபர் என்னிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்கு ஏறக்குறைய எழுபத்தைந்து ராத்தல் வெள்ளியையும் இரண்டு ஜோடி வஸ்திரங்களையும் தயவுசெய்து கொடும்’ என்று சொல்ல என் எஜமான் என்னை அனுப்பினார்” என்றான்.
23அதற்கு நாகமான், “தயவுசெய்து நூற்று ஐம்பது ராத்தலை வாங்கிக்கொள்ளும்” என்று அவனை வருந்திக் கேட்டு, நூற்று ஐம்பது ராத்தல் வெள்ளியை இரண்டு பைகளில் இரண்டு ஜோடி வஸ்திரங்களோடே கட்டி, தன் வேலைக்காரர் இரண்டுபேர்கையில் கொடுத்தான்; அவர்கள் அவைகளை அவனுக்கு முன்னாக சுமந்துகொண்டு போனார்கள். 24அவன் மேட்டிடத்திற்கு வந்தபோது, கேயாசி அவைகளை அவர்கள் கையிலிருந்து வாங்கி வீட்டிலே வைத்து, அந்த மனுஷரை அனுப்பிவிட்டான்; அவர்கள் போய்விட்டார்கள். 25பின்பு அவன் உள்ளே போய், தன் எஜமானுக்கு முன்பாக நின்றான். எலிசா அவனை நோக்கி, “கேயாசியே, எங்கேயிருந்து வருகிறாய்?” என்று கேட்டதற்கு, அவன், “உம்முடைய அடியேன் எங்கேயும் போகவில்லை” என்றான்.
26அப்பொழுது எலிசா அவனை நோக்கி, “அந்த மனுஷன் உனக்கு எதிர்கொண்டுவரத் தன் இரதத்திலிருந்து திரும்பினபோது, என் இருதயம் உன்னோடே வரவில்லையா? பணத்தையும் வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிற காலமா இது? 27ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியையும் என்றென்றைக்கும் பற்றிக்கொள்ளும்” என்றான். அப்பொழுது கேயாசி உறைந்த மழையைப்போல வெண்மையான குஷ்டரோகியாய் அவனுடைய சமுகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போனான்.