எங்கள் பிதா விதவையின் எண்ணெயைப் பெருகச் செய்கிறார்
4 1தீர்க்கதரிசிகளின் புத்திரர்களில் ஒருவனுடைய மனைவி எலிசாவை நோக்கிக் கூப்பிட்டு, “உம்முடைய அடியானாகிய என் புருஷன் இறந்துபோனான்; உம்முடைய அடியான் எங்கள் பிதாவுக்குப் பயந்து நடந்தான் என்பது உமக்குத் தெரியும். இப்போது கடன்கொடுத்தவன் என் இரண்டு பிள்ளைகளையும் அடிமைகளாக்கிக்கொள்ள வருகிறான்” என்றாள்.
2எலிசா அவளை நோக்கி, “நான் உனக்கு என்ன செய்யவேண்டும்? உன் வீட்டில் என்ன இருக்கிறது, எனக்குச் சொல்” என்றான். அதற்கு அவள், “ஒரு படி எண்ணெயைத்தவிர உம்முடைய அடியாளுக்கு வீட்டில் வேறொன்றுமில்லை” என்றாள்.
3அப்பொழுது அவன், “நீ போய், வெளியே உன் அயலார் எல்லாரிடத்திலும் காலியான பாத்திரங்களைக் கடனாய் வாங்கிக்கொள்; கொஞ்சம் அல்ல, அநேகமாய் வாங்கு. 4பின்பு நீ உள்ளே போய், உன் பின்னாலும் உன் பிள்ளைகளின் பின்னாலும் கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் எண்ணெய் வார்த்து, நிறைந்தவைகளை ஒரு பக்கத்தில் வை” என்றான்.
5அப்படியே அவள் அவனிடமிருந்து போய், தன் பின்னாலும் தன் பிள்ளைகளின் பின்னாலும் கதவைப் பூட்டினாள்; அவர்கள் பாத்திரங்களைக் கொண்டுவரவே, அவள் வார்த்துக்கொண்டிருந்தாள். 6பாத்திரங்கள் நிறைந்தபோது, அவள் தன் மகனை நோக்கி, “இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா” என்றாள். அதற்கு அவன், “வேறே பாத்திரம் இல்லை” என்றான். அப்பொழுது எண்ணெய் நின்றுபோயிற்று.
7அவள் வந்து, எங்கள் பிதாவின் மனுஷனிடத்தில் அதை அறிவித்தாள்; அவன், “நீ போய், அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீதியானதைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் பிழைத்திருங்கள்” என்றான்.
சூனேமியப் பெண்ணுக்குப் பிதாவின் வாக்குத்தத்தம்
8ஒரு நாள் எலிசா சூனேமின் வழியாய்க் கடந்துபோனான்; அங்கே செல்வந்தையான ஒரு ஸ்திரீ இருந்தாள்; அவள் தங்கியிருந்து போஜனம்பண்ணும்படி அவனை வருந்திக் கேட்டுக்கொண்டாள். அதுமுதல் அவன் வழியாய்க் கடந்துபோகும்போதெல்லாம் அங்கே போஜனம்பண்ணத் தங்கினான். 9அவள் தன் புருஷனை நோக்கி, “இதோ, நமக்கு அடிக்கடி கடந்துபோகிற இந்த மனுஷன் எங்கள் பிதாவின் பரிசுத்த மனுஷன் என்று அறிந்திருக்கிறேன். 10நாம் அவனுக்கு மேல்மாடியில் ஒரு சிறிய அறையைக் கட்டி, அதில் அவனுக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், விளக்கையும் வைப்போம்; அப்பொழுது அவன் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம்” என்றாள்.
11ஒரு நாள் எலிசா அங்கே வந்து, அந்த மேல்மாடி அறையிலே போய்ப் படுத்துக்கொண்டான். 12அவன் தன் வேலைக்காரனாகிய கேயாசியை நோக்கி, “இந்தச் சூனேமியப் பெண்ணை அழைத்துவா” என்றான். அவன் அவளை அழைத்தான்; அவள் அவனுக்கு முன்பாக வந்து நின்றாள். 13அப்பொழுது அவன் கேயாசியை நோக்கி, “நீ அவளிடத்தில், ‘இதோ, நீ இந்த எல்லாக் கவலையையும் எடுத்து எங்களுக்காக வருந்தினாய்; உனக்காக நான் என்ன செய்யவேண்டும்? உனக்காக ராஜாவினிடத்திலோ படைத்தலைவனிடத்திலோ பேசவேண்டுமா’ என்று சொல்” என்றான். அதற்கு அவள், “நான் என் சொந்த ஜனங்கள் நடுவே வாசம்பண்ணுகிறேன்” என்றாள்.
14அப்பொழுது அவன், “அவளுக்காக என்ன செய்யலாம்” என்று கேட்டான். அதற்குக் கேயாசி, “அவளுக்கு மகன் இல்லை, அவளுடைய புருஷனும் முதிர்வயதானவன்” என்றான்.
15அப்பொழுது அவன், “அவளை அழைத்துவா” என்றான். அவன் அவளை அழைத்தான்; அவள் வாசற்படியிலே வந்து நின்றாள். 16அப்பொழுது அவன், “அடுத்த வருஷம் இந்தக் காலத்தில் நீ ஒரு மகனை அணைத்துக்கொண்டிருப்பாய்” என்றான். அதற்கு அவள், “வேண்டாம், என் ஆண்டவனே, எங்கள் பிதாவின் மனுஷனே, உம்முடைய அடியாளுக்குப் பொய் சொல்லாதேயும்” என்றாள்.
17எலிசா அவளுக்குச் சொன்னபடியே, அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, அடுத்த வருஷம் அந்தக் காலத்தில் ஒரு மகனைப் பெற்றாள்.
18அந்தப் பிள்ளை வளர்ந்தபின், ஒரு நாள் அவன் அறுப்பறுக்கிறவர்களிடத்தில் தன் தகப்பனிடம் வெளியே போனான். 19அவன் தன் தகப்பனை நோக்கி, “என் தலை, என் தலை” என்றான். அதற்குத் தகப்பன் ஒரு வேலைக்காரனை நோக்கி, “இவனை அவன் தாயினிடத்திற்குச் சுமந்துகொண்டுபோ” என்றான்.
20அவன் இவனைச் சுமந்து, அவன் தாயினிடத்திற்குக் கொண்டுவந்தான்; அந்தப் பிள்ளை மத்தியானமட்டும் அவள் மடியில் உட்கார்ந்திருந்து இறந்துபோனான். 21அப்பொழுது அவள் ஏறிப்போய், அவனை எங்கள் பிதாவின் மனுஷனுடைய கட்டிலின்மேல் வைத்து, கதவைப் பூட்டி வெளியே வந்தாள். 22அவள் தன் புருஷனைக் கூப்பிட்டு, “நான் எங்கள் பிதாவின் மனுஷனிடத்தில் ஓடிப்போய்த் திரும்பிவரும்படி, ஒரு வேலைக்காரனையும் ஒரு கழுதையையும் எனக்கு அனுப்பும்” என்றாள்.
23அதற்கு அவன், “இன்று அவனிடத்தில் ஏன் போகிறாய்? இது அமாவாசியும் அல்ல, ஓய்வுநாளும் அல்லவே” என்றான். அதற்கு அவள், “நலமாயிருக்கும்” என்றாள்.
24பின்பு அவள் கழுதையின்மேல் சேணம் வைத்து, தன் வேலைக்காரனை நோக்கி, “ஓட்டிக்கொண்டு போ; நான் சொன்னாலொழிய வழியில் தாமதிக்காதே” என்றாள். 25அப்படியே அவள் புறப்பட்டு, கர்மேல் மலையிலிருந்த எங்கள் பிதாவின் மனுஷனிடத்திற்கு வந்தாள். எங்கள் பிதாவின் மனுஷன் அவள் தூரத்தில் வருகிறதைக் கண்டு, தன் வேலைக்காரனாகிய கேயாசியை நோக்கி, “இதோ, அந்தச் சூனேமியப் பெண். 26நீ அவளுக்கு எதிர்கொண்டு ஓடிப்போய், ‘நீ சுகமாயிருக்கிறாயா? உன் புருஷன் சுகமாயிருக்கிறானா? பிள்ளை சுகமாயிருக்கிறதா?’ என்று கேள்” என்றான். அதற்கு அவள், “எல்லாம் சுகம்” என்றாள்.
27அவள் மலையிலிருந்த எங்கள் பிதாவின் மனுஷனிடத்தில் வந்தபோது, அவனுடைய கால்களைப் பிடித்துக்கொண்டாள். கேயாசி அவளைத் தள்ளிவிடும்படி அருகில் வந்தான்; ஆனால் எங்கள் பிதாவின் மனுஷன், “அவளை விட்டுவிடு; அவளுடைய ஆத்துமா கசப்பான துயரத்தில் இருக்கிறது; எங்கள் பிதா அதை எனக்கு அறிவியாமல் மறைத்துவைத்திருக்கிறார்” என்றான்.
28அப்பொழுது அவள், “நான் என் ஆண்டவனிடத்தில் ஒரு மகனைக் கேட்டேனா? ‘என் நம்பிக்கையைப் பொய்யாக்காதேயும்’ என்று நான் சொல்லவில்லையா” என்றாள்.
29எலிசா கேயாசியை நோக்கி, “உன் அரையைக் கட்டிக்கொண்டு, என் கோலை உன் கையில் பிடித்துக்கொண்டு போ; வழியில் யாரையாவது சந்தித்தால் அவனை வாழ்த்தாதே; யாராவது உன்னை வாழ்த்தினால் அவனுக்கு மறுமொழி சொல்லாதே; என் கோலைப் பிள்ளையின் முகத்தின்மேல் வை” என்றான்.
30ஆனால் பிள்ளையின் தாய், “எங்கள் பிதாவின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன், நான் உம்மைவிட்டுப் போவதில்லை” என்றாள். அப்பொழுது அவன் எழுந்து அவளுக்குப் பின்னே போனான்.
31கேயாசி அவர்களுக்கு முன்னே போய், அந்தக் கோலைப் பிள்ளையின் முகத்தின்மேல் வைத்தான்; ஆனால் சத்தமும் இல்லை, அசைவும் இல்லை. அப்பொழுது அவன் எலிசாவுக்கு எதிர்கொண்டு திரும்பிவந்து, “பிள்ளை விழிக்கவில்லை” என்றான்.
32எலிசா வீட்டிற்குள் வந்தபோது, இதோ, பிள்ளை இறந்து அவனுடைய கட்டிலின்மேல் கிடந்தது. 33அப்பொழுது அவன் உள்ளே போய், தங்கள் இருவருக்கும் பின்னாலே கதவைப் பூட்டி, எங்கள் பிதாவை நோக்கி விண்ணப்பம்பண்ணினான். 34பின்பு அவன் ஏறி, பிள்ளையின்மேல் படுத்து, தன் வாயை அவன் வாயின்மேலும், தன் கண்களை அவன் கண்களின்மேலும், தன் கைகளை அவன் கைகளின்மேலும் வைத்தான்; அவன்மேல் விரிந்துபடுத்திருக்கும்போது பிள்ளையின் சரீரம் அனல்கொண்டது. 35அவன் எழுந்து, அறையிலே ஒருதரம் இங்கும் அங்கும் நடந்து, திரும்பவும் ஏறி, பிள்ளையின்மேல் விரிந்துபடுத்தான்; அப்பொழுது பிள்ளை ஏழுதரம் தும்மி, தன் கண்களைத் திறந்தது. 36எலிசா கேயாசியைக் கூப்பிட்டு, “இந்தச் சூனேமியப் பெண்ணை அழைத்துவா” என்றான். அவன் அவளை அழைத்தான்; அவள் அவனிடத்தில் வந்தபோது, அவன், “உன் மகனை எடுத்துக்கொள்” என்றான்.
37அப்பொழுது அவள் வந்து, அவன் கால்களில் விழுந்து, தரைமட்டும் பணிந்து, தன் மகனை எடுத்துக்கொண்டு வெளியே போனாள்.
பிதா மரணகரமான கூழைக் குணமாக்குகிறார்
38எலிசா திரும்பக் கில்காலுக்கு வந்தான்; அப்பொழுது தேசத்தில் பஞ்சம் இருந்தது. தீர்க்கதரிசிகளின் புத்திரர் அவனுக்கு முன்பாக உட்கார்ந்திருக்கும்போது, அவன் தன் வேலைக்காரனை நோக்கி, “பெரிய பானையை அடுப்பில் வைத்து, தீர்க்கதரிசிகளின் புத்திரருக்குக் கூழ் காய்ச்சு” என்றான்.
39ஒருவன் கீரை பறிக்கிறதற்கு வெளியே வயலுக்குப் போய், ஒரு காட்டுக்கொடியைக் கண்டு, அதிலிருந்து காட்டு விதைச்சுரைக்காய்களை மடிநிறையப் பறித்துக்கொண்டுவந்து, கூழ்ப்பானையிலே அரிந்துபோட்டான்; அவைகள் என்னவென்று ஒருவருக்கும் தெரியாது. 40அவர்கள் அந்த மனுஷர் சாப்பிடும்படி வார்த்தார்கள்; ஆனால் அவர்கள் கூழைச் சாப்பிடும்போது, “எங்கள் பிதாவின் மனுஷனே, பானையிலே மரணம் இருக்கிறது” என்று கூப்பிட்டார்கள்; அதை அவர்களால் சாப்பிடமுடியவில்லை.
41அப்பொழுது அவன், “மாவைக் கொண்டுவாருங்கள்” என்று சொல்லி, அதைப் பானையிலே போட்டு, “ஜனங்கள் சாப்பிடும்படி வார்” என்றான். அப்பொழுது பானையிலே தீங்கானது ஒன்றும் இல்லாமற்போயிற்று.
42பாகால்சலீஷா ஊரிலிருந்து ஒரு மனுஷன் எங்கள் பிதாவின் மனுஷனுக்கு முதற்பலனான அப்பங்களைக் கொண்டுவந்தான்; அவைகள் இருபது வாற்கோதுமை அப்பங்களும், தன் மூட்டையிலே கொண்டுவந்த பச்சைக் கதிர்களுமாயிருந்தன. அப்பொழுது எலிசா, “இதை ஜனங்களுக்குச் சாப்பிடக் கொடு” என்றான்.
43அதற்கு அவனுடைய வேலைக்காரன், “இதை நான் நூறுபேருக்கு முன்பாக எப்படி வைப்பேன்” என்றான். அவன் திரும்பவும், “இதை ஜனங்களுக்குச் சாப்பிடக் கொடு; அவர்கள் சாப்பிடுவார்கள், மீதியும் இருக்கும் என்று எங்கள் பிதா சொல்லுகிறார்” என்றான்.
44அப்படியே அவன் அதை அவர்கள் முன்பாக வைத்தான்; எங்கள் பிதா சொன்னபடியே அவர்கள் சாப்பிட்டார்கள், மீதியும் இருந்தது.