பிதாவானவர் எலியாவைத் தம்மிடம் சேர்த்துக்கொள்கிறார்
2 1எங்கள் பிதா எலியாவைச் சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்போகிற வேளையில், எலியாவும் எலிசாவும் கில்காலைவிட்டுப் புறப்பட்டார்கள். 2எலியா எலிசாவை நோக்கி, “நீ தயவுசெய்து இங்கே இரு; எங்கள் பிதா என்னைப் பெத்தேலுக்கு அனுப்பியிருக்கிறார்” என்றான். அதற்கு எலிசா, “எங்கள் பிதாவின் ஜீவனைக்கொண்டும், உம்முடைய ஜீவனைக்கொண்டும் சொல்லுகிறேன், நான் உம்மைவிட்டுப் பிரியேன்” என்றான். அப்படியே அவர்கள் பெத்தேலுக்குப் போனார்கள்.
3பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் எலிசாவினிடத்தில் வெளியே வந்து, “எங்கள் பிதா இன்று உன் எஜமானை உன் தலைக்குமேலிருந்து எடுத்துக்கொள்ளப்போகிறதை நீ அறிவாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “ஆம், அறிவேன்; நீங்கள் மௌனமாயிருங்கள்” என்றான்.
4எலியா அவனை நோக்கி, “எலிசா, நீ தயவுசெய்து இங்கே இரு; எங்கள் பிதா என்னை எரிகோவுக்கு அனுப்பியிருக்கிறார்” என்றான். அதற்கு அவன், “எங்கள் பிதாவின் ஜீவனைக்கொண்டும், உம்முடைய ஜீவனைக்கொண்டும் சொல்லுகிறேன், நான் உம்மைவிட்டுப் பிரியேன்” என்றான். அப்படியே அவர்கள் எரிகோவுக்குப் போனார்கள்.
5எரிகோவிலிருந்த தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் எலிசாவினிடத்தில் வந்து, “எங்கள் பிதா இன்று உன் எஜமானை உன்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்போகிறதை நீ அறிவாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “ஆம், அறிவேன்; நீங்கள் மௌனமாயிருங்கள்” என்றான்.
6எலியா அவனை நோக்கி, “நீ தயவுசெய்து இங்கே இரு; எங்கள் பிதா என்னை யோர்தானுக்கு அனுப்பியிருக்கிறார்” என்றான். அதற்கு அவன், “எங்கள் பிதாவின் ஜீவனைக்கொண்டும், உம்முடைய ஜீவனைக்கொண்டும் சொல்லுகிறேன், நான் உம்மைவிட்டுப் பிரியேன்” என்றான். அப்படியே அவ்விருவரும் நடந்துபோனார்கள்.
7தீர்க்கதரிசிகளின் கூட்டத்தாரில் ஐம்பதுபேர் போய், தூரத்திலே அவர்களுக்கு எதிராக நின்றார்கள்; அவ்விருவரும் யோர்தானண்டையில் நின்றார்கள். 8எலியா தன் சால்வையை எடுத்து, சுருட்டி, தண்ணீரை அடித்தான்; அது இருபக்கமாகப் பிரிந்தது; அவ்விருவரும் உலர்ந்த தரையின்மேல் கடந்துபோனார்கள். 9அவர்கள் கடந்துபோனபின், எலியா எலிசாவை நோக்கி, “நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுமுன், நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று கேள்” என்றான். அதற்கு எலிசா, “உம்முடைய ஆவியின் இரட்டிப்பான பங்கு எனக்குக் கிடைக்கும்படி தயவுசெய்யும்” என்றான்.
10அதற்கு எலியா, “நீ கடினமான காரியத்தைக் கேட்டாய்; ஆகிலும், நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுகிறதை நீ கண்டால், உனக்கு அப்படியாகும்; காணாவிட்டால், ஆகாது” என்றான்.
11அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினி இரதமும் அக்கினி குதிரைகளும் தோன்றி அவ்விருவரையும் பிரித்தன; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான். 12எலிசா அதைக்கண்டு, “என் தகப்பனே, என் தகப்பனே! இஸ்ரவேலின் இரதமே, அதின் குதிரைவீரரே!” என்று கூப்பிட்டான். பின்பு அவனை அவன் காணவில்லை. அப்பொழுது அவன் தன் வஸ்திரங்களைப் பிடித்து இரண்டாகக் கிழித்துப்போட்டான்.
13அவன் எலியாவின்மேலிருந்து விழுந்த சால்வையை எடுத்துக்கொண்டு, திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்றான். 14அவன் எலியாவின்மேலிருந்து விழுந்த சால்வையை எடுத்து, தண்ணீரை அடித்து, “எலியாவின் தேவனாகிய எங்கள் பிதா எங்கே?” என்றான். அவன் தண்ணீரை அடித்தபோது, அது வலதுபுறமும் இடதுபுறமும் பிரிந்தது; எலிசா கடந்துபோனான்.
15எரிகோவிலே அவனுக்கு எதிரே இருந்த தீர்க்கதரிசிகள் அதைக்கண்டு, “எலியாவின் ஆவி எலிசாவின்மேல் தங்கியிருக்கிறது” என்று சொல்லி, அவனுக்கு எதிர்கொண்டுபோய், தரைமட்டும் அவனை வணங்கினார்கள். 16“இதோ, உம்முடைய அடியாரிடத்தில் ஐம்பது பலசாலிகள் இருக்கிறார்கள்; அவர்கள் போய் உம்முடைய எஜமானைத் தேடட்டும்; ஒருவேளை எங்கள் பிதாவின் ஆவி அவரை எடுத்து, ஏதோ ஒரு மலையிலாவது, ஏதோ ஒரு பள்ளத்தாக்கிலாவது போட்டிருக்கும்” என்றார்கள். அதற்கு எலிசா, “வேண்டாம், அனுப்பாதேயுங்கள்” என்றான்.
17அவர்கள் அவனை வெட்கப்படத்தக்கதாய் மிகவும் வருந்திக்கேட்டதினால், அவன், “அனுப்புங்கள்” என்றான். அப்பொழுது அவர்கள் ஐம்பதுபேரை அனுப்பினார்கள்; அவர்கள் மூன்றுநாள் தேடியும் அவனைக் காணவில்லை.
18எரிகோவிலே தங்கியிருந்த எலிசாவினிடத்தில் அவர்கள் திரும்பிவந்தபோது, அவன் அவர்களை நோக்கி, “போகாதேயுங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா?” என்றான்.
பிதாவானவர் எரிகோவின் தண்ணீரைச் சொஸ்தமாக்குகிறார்
19அந்த ஊரார் எலிசாவை நோக்கி, “இதோ, எங்கள் ஆண்டவனே, நீர் காண்கிறபடி இந்தப் பட்டணத்தின் இருப்பிடம் நன்றாயிருக்கிறது; ஆனாலும் தண்ணீர் கெட்டதாயும், நிலம் பலனற்றதாயும் இருக்கிறது” என்றார்கள்.
20அதற்கு அவன், “ஒரு புது பாத்திரத்தை என்னிடத்தில் கொண்டுவந்து, அதிலே உப்புப் போடுங்கள்” என்றான்; அவர்கள் அதை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
21அவன் நீரூற்றண்டைக்குப் போய், அதிலே உப்பைப் போட்டு, “எங்கள் பிதா சொல்லுகிறது என்னவென்றால்: இந்தத் தண்ணீரை நான் சொஸ்தமாக்கினேன்; இனி இது மரணத்தையும் பலனற்ற தன்மையையும் உண்டாக்காது என்கிறார்” என்றான்.
22எலிசா சொன்ன வார்த்தையின்படியே, அந்தத் தண்ணீர் இந்நாள்வரைக்கும் சுத்தமாயிருக்கிறது.
23அவ்விடம்விட்டு எலிசா பெத்தேலுக்குப் போனான். அவன் வழியிலே நடந்துபோகையில், சிறு பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து, “மொட்டைத்தலையா, ஏறிப்போ; மொட்டைத்தலையா, ஏறிப்போ” என்று அவனைப் பரியாசம்பண்ணினார்கள். 24அவன் திரும்பி அவர்களைப் பார்த்து, எங்கள் பிதாவின் நாமத்திலே அவர்களைச் சபித்தான். அப்பொழுது காட்டிலிருந்து இரண்டு கரடிகள் வந்து, அந்தப் பிள்ளைகளில் நாற்பத்திரண்டுபேரைப் பீறிப்போட்டன. 25பின்பு அவன் அவ்விடம்விட்டுக் கர்மேல் மலைக்குப் போய், அங்கேயிருந்து சமாரியாவுக்குத் திரும்பினான்.