ஓசெயா, இஸ்ரவேலின் கடைசி ராஜா
17 1யூதாவின் ராஜாவாகிய ஆகாசுடைய பன்னிரண்டாம் வருஷத்தில், ஏலாவின் குமாரனாகிய ஓசெயா சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, ஒன்பது வருஷம் ஆண்டான். 2அவன் எங்கள் பிதாவின் பார்வையில் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களைப்போல் அல்ல. 3அசீரியாவின் ராஜாவாகிய சல்மனாசார் அவனுக்கு விரோதமாக எழும்பி வந்தான்; ஓசெயா அவனுக்குக் கீழ்ப்பட்டு, அவனுக்குக் கப்பம் செலுத்தினான். 4ஆனாலும் ஓசெயா துரோகம் செய்ய சதி பண்ணுகிறதை அசீரியாவின் ராஜா கண்டுபிடித்தான்: அவன் எகிப்தின் ராஜாவாகிய சோ என்பவனிடத்திற்குத் தூதர்களை அனுப்பியிருந்தான், அசீரியாவின் ராஜாவுக்கு வருஷந்தோறும் செலுத்தும் கப்பத்தையும் நிறுத்திவிட்டான். ஆகையால் அசீரியாவின் ராஜா அவனைப் பிடித்து, சிறைச்சாலையில் கட்டிப்போட்டான். 5அசீரியாவின் ராஜா தேசம் முழுவதின்மேலும் படையெடுத்து, சமாரியாவரைக்கும் வந்து, அதை மூன்று வருஷம் முற்றுகையிட்டான்.
சமாரியா அசீரியாவின் கையில் விழுகிறது
6ஓசெயாவின் ஒன்பதாம் வருஷத்தில் அசீரியாவின் ராஜா சமாரியாவைப் பிடித்து, இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக் கொண்டுபோய், அவர்களை ஆலாகிலும், கோசான் நதியாகிய ஆபோரின் ஓரத்திலும், மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.
7இஸ்ரவேலர் தங்களை எகிப்திலிருந்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் கைக்குக் கீழிருந்து புறப்படப்பண்ணின எங்கள் பிதாவுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, அந்நிய தேவர்களை வணங்கினபடியினாலும், 8எங்கள் பிதா தங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட ஜாதிகளுடைய வழக்கங்களையும், இஸ்ரவேலின் ராஜாக்கள் புகுத்தின வழக்கங்களையும் பின்பற்றினபடியினாலும், இவையெல்லாம் சம்பவித்தது. 9இஸ்ரவேலர் எங்கள் பிதாவுக்கு விரோதமாக மறைவாகச் செய்யத்தகாதவைகளைச் செய்து, காவற்கூபத்துவரைக்கும் அரணான பட்டணம்வரைக்கும் தங்கள் பட்டணங்கள் எல்லாவற்றிலும் மேடைகளைக் கட்டி, 10உயர்ந்த எல்லா மேட்டின்மேலும், பச்சையான எல்லா மரத்தின்கீழும் சிலைகளையும் விக்கிரகத்தோப்புகளையும் நிறுத்தி, 11எங்கள் பிதா தங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட ஜாதிகளைப்போல எல்லா மேடைகளிலும் தூபங்காட்டி, எங்கள் பிதாவைக் கோபமூட்டும் பொல்லாப்பானவைகளைச் செய்தார்கள்.
12“இப்படிச் செய்யவேண்டாம்” என்று எங்கள் பிதா தங்களுக்குச் சொல்லியிருந்தும், அவர்கள் விக்கிரகங்களை வணங்கினார்கள். 13எங்கள் பிதா ஒவ்வொரு தீர்க்கதரிசியின் மூலமாகவும் ஞானதிருஷ்டிக்காரன் மூலமாகவும் இஸ்ரவேலையும் யூதாவையும் எச்சரித்து: “உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பி, என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளுங்கள்; உங்கள் முன்னோர்களுக்கு நான் கட்டளையிட்டு, என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் மூலமாய் உங்களுக்கு அனுப்பின நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொள்ளுங்கள்” என்றார்.
14ஆனாலும் அவர்கள் கேளாமல், எங்கள் பிதாவை நம்பாதிருந்த தங்கள் முன்னோர்களைப்போல, தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள். 15அவர்கள் அவருடைய கட்டளைகளையும், தங்கள் முன்னோர்களோடே அவர் செய்த உடன்படிக்கையையும், அவருடைய எச்சரிப்புகளையும் புறக்கணித்து, வீணான விக்கிரகங்களைப் பின்பற்றி வீணராகிப்போய், எங்கள் பிதா அவர்களைப்போல் செய்யவேண்டாமென்று தடுத்திருந்த சுற்றிலுமிருந்த ஜாதிகளைப் பின்பற்றினார்கள். 16அவர்கள் எங்கள் பிதாவின் கற்பனைகள் யாவையும் விட்டுவிட்டு, தங்களுக்கு இரண்டு கன்றுக்குட்டி விக்கிரகங்களை வார்ப்பித்து, ஒரு விக்கிரகத்தோப்பையும் உண்டாக்கி, வானத்தின் நட்சத்திரசேனைக்கெல்லாம் பணிந்துகொண்டு, பாகாலைச் சேவித்தார்கள். 17அவர்கள் தங்கள் குமாரரையும் குமாரத்திகளையும் தீக்கடந்துபோகப்பண்ணி, குறிசொல்லுதலையும் சகுனம் பார்த்தலையும் நடப்பித்து, எங்கள் பிதாவின் பார்வையில் பொல்லாப்பானதைச் செய்யத் தங்களை விற்றுப்போட்டு, அவரைக் கோபமூட்டினார்கள். 18ஆகையால் எங்கள் பிதா இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபங்கொண்டு, அவர்களைத் தமது சமுகத்தைவிட்டு அகற்றினார்; யூதா கோத்திரம் மாத்திரமே மீதியாயிருந்தது. 19யூதாவும் எங்கள் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொள்ளாமல், இஸ்ரவேலர் புகுத்தின வழக்கங்களைப் பின்பற்றினது. 20ஆகையால் எங்கள் பிதா இஸ்ரவேலின் சந்ததியார் அனைவரையும் புறக்கணித்து, அவர்களை உபத்திரவப்படுத்தி, தம்முடைய சமுகத்தைவிட்டு அவர்களைத் தள்ளிவிடுமட்டும் கொள்ளையிடுகிறவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார். 21எங்கள் பிதா இஸ்ரவேலை தாவீதின் குடும்பத்தைவிட்டுப் பிரித்தபோது, அவர்கள் நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமை ராஜாவாக்கினார்கள்; யெரொபெயாம் இஸ்ரவேலை எங்கள் பிதாவைப் பின்பற்றாதபடி விலக்கி, அவர்களைப் பெரும்பாவத்திற்குள் இழுத்தான். 22இஸ்ரவேலர் யெரொபெயாம் செய்த எல்லாப் பாவங்களிலும் நிலைத்திருந்து, அவைகளைவிட்டுத் திரும்பாதிருந்தார்கள். 23முடிவில் எங்கள் பிதா தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகள் எல்லாரின் மூலமாய்ச் சொல்லியிருந்தபடியே, இஸ்ரவேலைத் தமது சமுகத்தைவிட்டு அகற்றினார். அப்படியே இஸ்ரவேல் தன் தேசத்திலிருந்து அசீரியாவுக்குச் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டு, இந்நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது.
அந்நியர் தேசத்தில் குடியேறுகிறார்கள்
24அசீரியாவின் ராஜா பாபிலோனிலும், கூத்தாவிலும், ஆபாவிலும், ஆமாத்திலும், செப்பர்வாயிமிலும் இருந்து ஜனங்களைக் கொண்டுவந்து, இஸ்ரவேலருக்குப் பதிலாக அவர்களைச் சமாரியாவின் பட்டணங்களில் குடியேற்றினான்; அவர்கள் சமாரியாவைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதின் பட்டணங்களில் குடியிருந்தார்கள். 25அவர்கள் அங்கே குடியிருக்கத் தொடங்கின காலத்தில், எங்கள் பிதாவை வணங்காதிருந்தார்கள்; ஆகையால் அவர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அவை அவர்களில் சிலரைக் கொன்றுபோட்டன. 26அப்பொழுது அவர்கள் அசீரியாவின் ராஜாவுக்கு: “நீர் சமாரியாவின் பட்டணங்களில் குடியேற்றின ஜாதிகள் அந்தத் தேசத்தின் தேவன் கேட்கிறதை அறியாதிருக்கிறார்கள்; ஆகையால் அவர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அந்தத் தேசத்தின் தேவன் கேட்கிறதை அவர்கள் அறியாதபடியால், அவைகள் அவர்களைக் கொன்றுபோடுகின்றன” என்று சொல்லியனுப்பினார்கள்.
27அதற்கு அசீரியாவின் ராஜா: “நீங்கள் சமாரியாவிலிருந்து சிறைபிடித்துக் கொண்டுவந்த ஆசாரியர்களில் ஒருவனை அங்கே திரும்பி அனுப்புங்கள்; அவன் அங்கே போய்க் குடியிருந்து, அந்தத் தேசத்தின் தேவன் கேட்கிறதை ஜனங்களுக்குப் போதிக்கட்டும்” என்று கட்டளையிட்டான்.
28அப்படியே சமாரியாவிலிருந்து சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்ட ஆசாரியர்களில் ஒருவன் வந்து, பெத்தேலிலே குடியிருந்து, எங்கள் பிதாவை எப்படி வணங்கவேண்டுமென்று அவர்களுக்குப் போதித்தான்.
29ஆனாலும் ஒவ்வொரு ஜாதியாரும் தங்கள் தங்கள் தேவர்களை உண்டாக்கி, சமாரியர் கட்டியிருந்த மேடைகளின் கோவில்களில் அவைகளை வைத்தார்கள்; ஒவ்வொரு ஜாதியாரும் தாங்கள் குடியிருந்த பட்டணங்களில் அப்படியே செய்தார்கள். 30பாபிலோன் மனுஷர் சுக்கோத் பெனோத்தையும், கூத் மனுஷர் நெர்கலையும், ஆமாத் மனுஷர் அசீமாவையும் உண்டாக்கினார்கள். 31ஆபியர் நிபிகாசையும் தர்தாக்கையும் உண்டாக்கினார்கள்; செப்பர்வாயீமியர் தங்கள் பிள்ளைகளை செப்பர்வாயிமின் தேவர்களாகிய அத்ரமலேக்குக்கும் அனாமலேக்குக்கும் பலியாக அக்கினியில் தகனித்தார்கள். 32அவர்கள் எங்கள் பிதாவை வணங்கியும், தங்களுக்குள்ளே சகலவித மனுஷரையும் மேடைகளுக்கு ஆசாரியராக ஏற்படுத்தினார்கள்; அவர்கள் அவர்களுக்காக மேடைகளின் கோவில்களில் பலியிட்டார்கள். 33அவர்கள் எங்கள் பிதாவை வணங்கியும், தாங்கள் எந்தந்த ஜாதிகளிலிருந்து சிறைபிடித்துக் கொண்டுவரப்பட்டார்களோ, அந்த ஜாதிகளின் வழக்கத்தின்படியே தங்கள் சொந்த தேவர்களையும் சேவித்தார்கள். 34இந்நாள்வரைக்கும் அவர்கள் தங்கள் முந்தின வழக்கங்களின்படியே நடக்கிறார்கள்; அவர்கள் எங்கள் பிதாவை வணங்குகிறதுமில்லை, எங்கள் பிதா இஸ்ரவேல் என்று பேரிட்ட யாக்கோபின் பிள்ளைகளுக்குக் கட்டளையிட்ட கட்டளைகளின்படியும், நியமங்களின்படியும், நியாயப்பிரமாணத்தின்படியும், கற்பனையின்படியும் நடக்கிறதுமில்லை.
35எங்கள் பிதா அவர்களோடே உடன்படிக்கைபண்ணி, அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: “அந்நிய தேவர்களை வணங்காமலும், அவைகளுக்குப் பணியாமலும், அவைகளைச் சேவியாமலும், அவைகளுக்குப் பலியிடாமலும் இருங்கள். 36உங்கள் பிதாவே மகா வல்லமையினாலும் ஓங்கிய புயத்தினாலும் உங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; அவரையே வணங்குங்கள்; அவருக்கே பணியுங்கள்; அவருக்கே பலிகளை இடுங்கள். 37அவர் உங்களுக்காக எழுதிக் கொடுத்த கட்டளைகளையும், நியமங்களையும், நியாயப்பிரமாணத்தையும், கற்பனையையும் நித்தமும் கவனமாய்க் கைக்கொள்ளுங்கள்; அந்நிய தேவர்களை வணங்காதிருங்கள். 38நான் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை மறவாதிருங்கள்; அந்நிய தேவர்களை வணங்காதிருங்கள். 39உங்கள் பிதாவையே வணங்குங்கள்; அப்பொழுது அவர் உங்கள் எல்லா சத்துருக்களின் கைக்கும் உங்களைத் தப்புவிப்பார்” என்பதே.
40ஆனாலும் அவர்கள் கேளாமல், தங்கள் முந்தின வழக்கத்தின்படியே செய்துவந்தார்கள். 41இந்த ஜாதிகள் எங்கள் பிதாவை வணங்கியும், தங்கள் விக்கிரகங்களையும் சேவித்தார்கள்; இந்நாள்வரைக்கும் அவர்களுடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் தங்கள் முன்னோர்கள் செய்ததுபோலவே செய்துவருகிறார்கள்.