யோசியா பிதாவின் வழிகளில் நடக்கிறான்
34 1யோசியா ராஜாவானபோது எட்டு வயதுள்ளவனாயிருந்தான்; அவன் எருசலேமில் முப்பத்தொரு வருடம் அரசாண்டான். 2அவன் எங்கள் பிதாவின் பார்வையில் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில் நடந்து, வலதுபுறமாகிலும் இடதுபுறமாகிலும் விலகவில்லை.
3அவன் அரசாண்ட எட்டாம் வருடத்தில், இன்னும் இளம்பிராயமாயிருக்கும்போதே, தன் தகப்பனாகிய தாவீதின் தேவனாகிய எங்கள் பிதாவைத் தேட ஆரம்பித்தான். பன்னிரண்டாம் வருடத்தில் அவன் யூதாவையும் எருசலேமையும் மேடைகளையும், அசேரா விக்கிரகத் தூண்களையும், செதுக்கப்பட்ட விக்கிரகங்களையும், வார்ப்பிக்கப்பட்ட உலோக விக்கிரகங்களையும் நீக்கிச் சுத்திகரிக்க ஆரம்பித்தான். 4அவனுக்கு முன்பாக அவர்கள் பாகால்களின் பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; அவற்றின்மேலிருந்த தூபபீடங்களை அவன் வெட்டிப்போட்டு, அசேரா விக்கிரகத் தூண்களையும், செதுக்கப்பட்ட விக்கிரகங்களையும், வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகங்களையும் நொறுக்கி, தூளாக்கி, அவைகளுக்குப் பலியிட்டவர்களின் கல்லறைகள்மேல் அதைத் தூவினான். 5ஆசாரியர்களின் எலும்புகளை அவர்களுடைய பலிபீடங்கள்மேல் சுட்டெரித்து, இப்படியாக யூதாவையும் எருசலேமையும் சுத்திகரித்தான். 6மனாசே, எப்பிராயீம், சிமியோன் ஆகிய பட்டணங்களிலும், நப்தலிமட்டும், அவைகளைச் சுற்றியிருந்த பாழிடங்களிலும் அப்படியே செய்தான். a a v6 யோசியா சந்தித்த வடதிசைப் பட்டணங்கள், சில பத்தாண்டுகளுக்கு முன்பே அசீரியரின் வெற்றியாலும் நாடுகடத்தலாலும் பெருமளவில் பாழடைந்து கிடந்தன. 7அவன் பலிபீடங்களை இடித்து, அசேரா விக்கிரகத் தூண்களையும் செதுக்கப்பட்ட விக்கிரகங்களையும் நொறுக்கித் தூளாக்கி, இஸ்ரவேல் தேசமெங்கும் இருந்த தூபபீடங்களையெல்லாம் வெட்டிப்போட்டு, பின்பு எருசலேமுக்குத் திரும்பினான்.
8அவன் அரசாண்ட பதினெட்டாம் வருடத்தில், தேசத்தையும் ஆலயத்தையும் சுத்திகரித்தபின், எங்கள் பிதாவின் ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி, அத்சலியாவின் மகனாகிய சாப்பானையும், நகர அதிபதியாகிய மாசெயாவையும், யோவாகாசின் மகனாகிய யோவா என்னும் மந்திரியையும் அனுப்பினான். 9அவர்கள் பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் வந்து, எங்கள் பிதாவின் ஆலயத்திற்குள் கொண்டுவரப்பட்ட பணத்தை ஒப்படைத்தார்கள்; அதை வாசல்களைக் காத்த லேவியர்கள் மனாசே, எப்பிராயீம், இஸ்ரவேலில் மீதியாயிருந்த யாவரிடமிருந்தும், யூதா பென்யமீன் அனைத்திலிருந்தும், எருசலேமில் குடியிருந்தவர்களிடமிருந்தும் சேர்த்திருந்தார்கள். 10எங்கள் பிதாவின் ஆலயத்தின் வேலையை மேற்பார்வையிட்ட வேலைக்காரரிடத்தில் அதைக் கொடுத்தார்கள்; எங்கள் பிதாவின் ஆலயத்தில் வேலைசெய்தவர்கள் அதைப் பழுதுபார்த்து புதுப்பிக்கும்படி பயன்படுத்தினார்கள். 11யூதாவின் ராஜாக்கள் பாழாகப் போகவிட்டிருந்த கட்டிடங்களுக்கு, செதுக்கப்பட்ட கல்லையும், சட்டங்களுக்கும் உத்திரங்களுக்கும் வேண்டிய மரங்களையும் வாங்கும்படி, தச்சர்களுக்கும் கட்டிடம் கட்டுகிறவர்களுக்கும் அவர்கள் கூலி கொடுத்தார்கள். 12அந்த மனிதர்கள் உண்மையாய் வேலைசெய்தார்கள். மெராரியின் மகன்களாகிய லேவியரில் யாகாத்தும் ஒபதியாவும், கோகாத்தியரில் சகரியாவும் மெசுல்லாமும் அவர்கள்மேல் விசாரிப்புக்காரராயிருந்து வேலையை நடத்தினார்கள்; இசையில் தேர்ந்த லேவியர் யாவரும், 13சுமைசுமக்கிறவர்கள்மேலும் இருந்து, ஒவ்வொரு வேலைவேலையாய் எல்லா வேலைக்காரரையும் நடத்தினார்கள். லேவியரில் சிலர் எழுத்தர்களாகவும், அதிகாரிகளாகவும், வாசல் காவலாளர்களாகவும் இருந்தார்கள்.
நியாயப்பிரமாண புத்தகத்தை இல்க்கியா கண்டெடுக்கிறான்
14எங்கள் பிதாவின் ஆலயத்திற்குள் கொண்டுவரப்பட்ட பணத்தை அவர்கள் வெளியே எடுக்கிறபோது, மோசே மூலமாய்க் கொடுக்கப்பட்ட எங்கள் பிதாவின் நியாயப்பிரமாண புத்தகத்தை ஆசாரியனாகிய இல்க்கியா கண்டெடுத்தான். 15இல்க்கியா எழுத்தனாகிய சாப்பானை நோக்கி, “எங்கள் பிதாவின் ஆலயத்தில் நியாயப்பிரமாண புத்தகத்தைக் கண்டெடுத்தேன்” என்று சொல்லி, அந்தப் புத்தகத்தைச் சாப்பானிடத்தில் கொடுத்தான்.
16சாப்பான் அந்தப் புத்தகத்தை ராஜாவினிடத்தில் கொண்டுவந்து, “உம்முடைய ஊழியக்காரர் தங்கள் கையில் ஒப்புவிக்கப்பட்ட எல்லாவற்றையும் செய்துவருகிறார்கள். 17எங்கள் பிதாவின் ஆலயத்தில் காணப்பட்ட பணத்தை அவர்கள் கொட்டி, மேற்பார்வைக்காரர் கையிலும் வேலைக்காரர் கையிலும் ஒப்படைத்தார்கள்” என்று அறிவித்தான். 18எழுத்தனாகிய சாப்பான் ராஜாவை நோக்கி, “ஆசாரியனாகிய இல்க்கியா ஒரு புத்தகத்தை எனக்குக் கொடுத்தான்” என்று சொல்லி, அதை ராஜாவுக்கு முன்பாக வாசித்தான்.
19ராஜா நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டான். 20ராஜா இல்க்கியாவுக்கும், சாப்பானின் மகனாகிய அகீக்காமுக்கும், மீகாவின் மகனாகிய அப்தோனுக்கும், எழுத்தனாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டதாவது: 21“நீங்கள் போய், கண்டெடுக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளைக்குறித்து, எனக்காகவும் இஸ்ரவேலிலும் யூதாவிலும் மீதியாயிருக்கிறவர்களுக்காகவும் எங்கள் பிதாவினிடத்தில் விசாரியுங்கள். நம்முடைய முன்னோர் இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியும் செய்யும்படி எங்கள் பிதாவின் வார்த்தையைக் கைக்கொள்ளாதபடியால், நம்மேல் ஊற்றப்பட்ட அவருடைய கோபம் மிகவும் பெரிது” என்றான்.
22அப்படியே இல்க்கியாவும் ராஜாவின் மனிதர்களும், தீர்க்கதரிசியாகிய உல்தாள் என்னும் ஸ்திரீயினிடத்தில் போனார்கள்; அவள் வஸ்திரசாலையின் காவலனாகிய அஸ்ராவின் மகனாகிய தொக்காத்தின் மகனாகிய சல்லூமுடைய மனைவி. அவள் எருசலேமின் இரண்டாம் பகுதியில் குடியிருந்தாள். அவர்கள் இதைக்குறித்து அவளோடே பேசினார்கள்.
23அவள் அவர்களை நோக்கி, “இஸ்ரவேலின் தேவனாகிய எங்கள் பிதா சொல்லுகிறது என்னவென்றால்: உங்களை என்னிடத்தில் அனுப்பின மனிதனிடத்தில் சொல்லுங்கள்: 24எங்கள் பிதா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, யூதாவின் ராஜாவுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதியிருக்கிற சகல சாபங்களாகிய தீங்கை நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதில் குடியிருக்கிறவர்கள்மேலும் வரப்பண்ணுவேன். 25அவர்கள் என்னைவிட்டு விலகி, அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டி, தங்கள் கைகளின் செய்கைகளால் எனக்குக் கோபமூட்டினபடியால், என் உக்கிரம் இந்த ஸ்தலத்தின்மேல் ஊற்றப்படும்; அது அணைக்கப்படாது. 26என்னிடத்தில் விசாரிக்க உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்திலோ இப்படிச் சொல்லுங்கள்: நீ கேட்ட வார்த்தைகளைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய எங்கள் பிதா சொல்லுகிறது என்னவென்றால்: 27இந்த ஸ்தலத்திற்கும் இதில் குடியிருக்கிறவர்களுக்கும் விரோதமான அவருடைய வார்த்தைகளை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, எங்கள் பிதாவுக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்தி, எனக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தி, உன் வஸ்திரங்களைக் கிழித்து, எனக்கு முன்பாக அழுதபடியால், நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று எங்கள் பிதா சொல்லுகிறார். 28இதோ, நான் உன்னை உன் முன்னோரிடத்தில் சேர்ப்பேன்; நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் வைக்கப்படுவாய். நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகள்மேலும் வரப்பண்ணும் எல்லா தீங்கையும் உன் கண்கள் காணாதிருக்கும்” என்றாள். அவர்கள் ராஜாவுக்கு இந்த மறுமொழியைக் கொண்டுவந்தார்கள்.
29அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலும் இருந்த மூப்பர் யாவரையும் வரவழைத்தான். 30ராஜா யூதாவின் மனிதர் அனைவரோடும், எருசலேமின் குடிகளோடும், ஆசாரியரோடும், லேவியரோடும், சிறியோர் பெரியோர் ஆகிய சகல ஜனங்களோடும் எங்கள் பிதாவின் ஆலயத்திற்குப் போனான். எங்கள் பிதாவின் ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை புத்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான். 31ராஜா தன் ஸ்தானத்தில் நின்று, எங்கள் பிதாவைப் பின்பற்றவும், அவருடைய கட்டளைகளையும், சாட்சிகளையும், நியமங்களையும் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் கைக்கொள்ளவும், இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றவும் எங்கள் பிதாவுக்கு முன்பாக உடன்படிக்கை பண்ணினான். 32எருசலேமிலும் பென்யமீனிலும் காணப்பட்ட எல்லாரையும் அதற்கு உடன்படப்பண்ணினான்; எருசலேமின் குடிகள் தங்கள் முன்னோரின் தேவனாகிய எங்கள் பிதாவின் உடன்படிக்கையின்படியே செய்தார்கள். 33யோசியா இஸ்ரவேல் புத்திரரின் தேசங்களிலிருந்த சகல அருவருப்புகளையும் நீக்கிப்போட்டு, இஸ்ரவேலில் இருந்த எல்லாரையும் தங்கள் தேவனாகிய எங்கள் பிதாவை சேவிக்கும்படி செய்தான். அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவர்கள் தங்கள் முன்னோரின் தேவனாகிய எங்கள் பிதாவைப் பின்பற்றுவதைவிட்டு விலகவில்லை.