பிளவுபட்ட இருதயம் கொண்ட ஒரு ராஜா
25 1அமத்சியா இருபத்தைந்து வயதில் ராஜாவாகி, எருசலேமில் இருபத்தொன்பது வருடங்கள் அரசாண்டான். அவனுடைய தாயின் பேர் எருசலேம் ஊரைச் சேர்ந்த யோவதானாள். 2அவன் எங்கள் பிதாவின் பார்வையில் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் முழு இருதயத்தோடு அல்ல. 3ராஜ்யம் அவனுடைய கையில் உறுதிப்பட்டபோது, தன் தகப்பனாகிய ராஜாவைக் கொலைசெய்த ஊழியக்காரரை அவன் கொன்றுபோட்டான்.
4ஆனாலும் அவர்களுடைய பிள்ளைகளை அவன் கொலைசெய்யவில்லை; ஏனெனில் மோசேயின் புத்தகமாகிய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, எங்கள் பிதா கட்டளையிட்டதாவது: “பிள்ளைகளுக்காக பெற்றோர் சாகக்கூடாது, பெற்றோருக்காகப் பிள்ளைகளும் சாகக்கூடாது; அவனவன் தன் சொந்தப் பாவத்திற்காகவே சாகவேண்டும்.”
5அமத்சியா யூதாவைக் கூட்டி, யூதா, பென்யமீன் அனைவருக்கும் ஆயிரம்பேருக்கும் நூறுபேருக்கும் தலைவர்களை ஏற்படுத்தி, அவர்களை பிதாக்களின் வம்சங்களின்படி வகுத்தான். இருபது வயதுமுதல் மேற்பட்டவர்களை அவன் எண்ணிப்பார்த்தபோது, ஈட்டியையும் கேடகத்தையும் பிடிக்கத்தக்க, யுத்தத்திற்குத் தகுதியான தெரிந்துகொள்ளப்பட்ட மூன்று லட்சம் பேர் இருந்தனர். 6அவன் இஸ்ரவேலிலிருந்து ஒரு லட்சம் பலசாலிகளான போர்வீரர்களை ஏறக்குறைய ஆயிரம் தாலந்து வெள்ளிக்கும் கூலிக்கு அமர்த்தினான். 7அப்பொழுது எங்கள் பிதாவின் மனுஷன் ஒருவன் அவனிடத்தில் வந்து: “ராஜாவே, இஸ்ரவேலின் சேனை உம்முடன் போகவேண்டாம்; ஏனெனில் இந்த எப்பிராயீமர் அனைவராகிய இஸ்ரவேலோடு எங்கள் பிதா இல்லை. 8நீர் தைரியமாய் யுத்தம்செய்தாலும், எதிரிக்கு முன்பாக எங்கள் பிதா உம்மை வீழ்த்துவார்; ஏனெனில் உதவிசெய்யவும் வீழ்த்தவும் எங்கள் பிதாவுக்கு வல்லமை உண்டு” என்றான்.
9அதற்கு அமத்சியா எங்கள் பிதாவின் மனுஷனை நோக்கி: “நான் இஸ்ரவேலின் படைகளுக்குக் கொடுத்த ஏறக்குறைய ஆயிரம் தாலந்து வெள்ளியைக் குறித்து என்ன செய்வது?” என்று கேட்டான். அதற்கு அவன்: “இதைப் பார்க்கிலும் அதிகமாய் எங்கள் பிதா உமக்குக் கொடுக்க வல்லவர்” என்றான்.
10அப்பொழுது அமத்சியா, எப்பிராயீமிலிருந்து தன்னிடத்தில் வந்திருந்த படைகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டான். அவர்கள் யூதாவின்மேல் கடுங்கோபமாய் எரிந்து, மூர்க்கத்தோடு தங்கள் ஊருக்குத் திரும்பினார்கள்.
11ஆனாலும் அமத்சியா தைரியங்கொண்டு, தன் ஜனங்களை உப்புப் பள்ளத்தாக்குக்கு நடத்திக்கொண்டுபோய், சேயீரின் மனுஷரில் பதினாயிரம்பேரை வெட்டிப்போட்டான். 12யூதாவின் மனுஷர் பதினாயிரம்பேரை உயிரோடே பிடித்து, அவர்களை ஒரு கன்மலையின் உச்சிக்குக் கொண்டுபோய், அங்கிருந்து தள்ளிவிட்டதால் அவர்கள் அனைவரும் நொறுங்கிச் சிதறிப்போனார்கள். 13இதற்கிடையில், தன்னோடு யுத்தத்திற்கு வரவிடாமல் அமத்சியா திருப்பியனுப்பிய படைகள், சமாரியா தொடங்கி பெத்தொரோன்வரையுள்ள யூதாவின் பட்டணங்களைக் கொள்ளையடித்து, மூவாயிரம் பேரை வெட்டிப்போட்டு, அதிக கொள்ளைப்பொருளையும் எடுத்துக்கொண்டு போனார்கள்.
14அமத்சியா ஏதோமியரை முறியடித்துவந்தபின்பு, சேயீர் ஜனங்களின் தேவர்களைக் கொண்டுவந்து, அவைகளைத் தனக்கு தேவர்களாக நிறுத்தி, அவைகளுக்கு முன்பாகப் பணிந்து, அவைகளுக்குத் தூபங்காட்டினான். 15ஆகையால் எங்கள் பிதாவின் கோபம் அமத்சியாவின்மேல் மூண்டது; அவர் ஒரு தீர்க்கதரிசியை அவனிடத்தில் அனுப்பினார். அவன்: “இந்த ஜனங்களின் தேவர்கள் தங்கள் சொந்த ஜனங்களை உன் கையினின்று விடுவிக்கமாட்டாதிருந்தும், அவைகளை நீ ஏன் தேடினாய்?” என்றான்.
16அவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ராஜா அவனை நோக்கி: “உன்னை ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக நியமித்தோமோ? நிறுத்து! நீ ஏன் அடித்துக் கொல்லப்படவேண்டும்?” என்றான். அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி நிறுத்தி: “நீ இதைச் செய்து என் ஆலோசனையைக் கேளாமற்போனபடியால், உன்னை அழிக்க எங்கள் பிதா தீர்மானித்திருக்கிறார் என்று அறிவேன்” என்றான்.
17அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய அமத்சியா தன் ஆலோசனைக்காரரோடு ஆலோசனைபண்ணி, ஏகூவின் குமாரனாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில்: “வா, ஒருவரையொருவர் யுத்தத்தில் சந்திப்போம்” என்று சொல்லியனுப்பினான்.
18அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்குச் சொல்லியனுப்பினதாவது: “லீபனோனிலுள்ள ஒரு முள்ளுச்செடி, லீபனோனிலுள்ள ஒரு கேதுரு மரத்திடத்தில்: ‘உன் மகளை என் மகனுக்கு மனைவியாகக் கொடு’ என்று சொல்லியனுப்பிற்று. ஆனால் லீபனோனிலுள்ள ஒரு காட்டு மிருகம் கடந்துபோய் அந்த முள்ளுச்செடியை மிதித்துப்போட்டது. 19‘இதோ, ஏதோமை முறியடித்தேன்’ என்று சொல்லி உன் இருதயம் இறுமாப்புற்று பெருமைபாராட்டுகிறாய். இப்பொழுது உன் வீட்டிலேயே இரு. நீயும் உன்னோடே யூதாவும் விழத்தக்கதாய், ஏன் ஆபத்தைத் தேடிக்கொள்கிறாய்?” என்றான்.
20ஆனாலும் அமத்சியா கேளாதேபோனான்; இது எங்கள் பிதாவினால் நேரிட்டது; ஏனெனில் அவர்கள் ஏதோமின் தேவர்களைத் தேடினதினிமித்தம் அவர்களை ஒப்புக்கொடுக்க அவர் தீர்மானித்திருந்தார். 21அப்படியே இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் புறப்பட்டுவந்தான்; அவனும் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவும் யூதாவிலுள்ள பெத்ஷிமேசில் ஒருவரையொருவர் சந்தித்தார்கள். 22யூதா இஸ்ரவேலால் முறியடிக்கப்பட்டது; ஒவ்வொருவனும் தன்தன் வீட்டுக்கு ஓடிப்போனான்.
23இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ், யோவாகாசின் குமாரனாகிய யோவாசுடைய குமாரன் அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவை பெத்ஷிமேசிலே பிடித்து, அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்து, எப்பிராயீம் வாசல்முதல் மூலைவாசல்வரையிலும் ஏறக்குறைய இருநூறு முழ நீளத்திற்கு எருசலேமின் மதிலை இடித்துப்போட்டான். 24ஓபேத்-ஏதோமின் காவலிலிருந்த எங்கள் பிதாவின் ஆலயத்தில் காணப்பட்ட எல்லாப் பொன்னையும், வெள்ளியையும், சகல பணிமுட்டுகளையும், அரண்மனையின் பொக்கிஷங்களையும், பிணையாளிகளையும் எடுத்துக்கொண்டு, அவன் சமாரியாவுக்குத் திரும்பினான்.
25இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் மரித்தபின்பு, யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா பதினைந்து வருடங்கள் உயிரோடிருந்தான். 26அமத்சியாவின் மற்ற செய்திகள், முதல்முதல் கடைசிமட்டும், யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் எழுதியிருக்கவில்லையா? 27அமத்சியா எங்கள் பிதாவைப் பின்பற்றுவதைவிட்டு விலகிப்போன காலமுதல், எருசலேமில் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடு பண்ணினார்கள்; அவன் லாகீசுக்கு ஓடிப்போனான். ஆனால் அவர்கள் அவனைப் பின்தொடர்ந்து அங்கே ஆட்களை அனுப்பி, அவனைக் கொன்றுபோட்டார்கள். 28அவனைக் குதிரைகள்மேல் ஏற்றிக்கொண்டுவந்து, யூதாவின் நகரத்தில் அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.