யோசபாத் ஆகாபோடு கூட்டுசேர்தல்
18 1யோசபாத்துக்கு மிகுந்த ஐசுவரியமும் கனமும் இருந்தது; அவன் ஆகாபோடு விவாகத்தினால் கூட்டுசேர்ந்தான். 2சில வருடங்களுக்குப் பின்பு அவன் சமாரியாவிலிருந்த ஆகாபிடத்திற்குப் போனான்; ஆகாப் அவனுக்காகவும் அவனோடிருந்த ஜனங்களுக்காகவும் ஏராளமான ஆடுகளையும் மாடுகளையும் அடித்து, ராமோத்கிலேயாத்தின்மேல் யுத்தம்பண்ண அவனைத் தூண்டினான். 3இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி, “நீர் என்னோடேகூட ராமோத்கிலேயாத்திற்கு வருவீரா?” என்று கேட்டான். அதற்கு அவன், “நான் உம்மைப்போலவும், என் ஜனங்கள் உம்முடைய ஜனங்களைப்போலவும் இருக்கிறோம்; நாங்கள் யுத்தத்தில் உம்மோடு சேருகிறோம்” என்றான்.
4ஆனாலும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி, “முதலில் எங்கள் பிதாவின் வார்த்தையைத் தேடும்” என்றான்.
5அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தீர்க்கதரிசிகளாகிய நானூறு பேரைக் கூட்டி, அவர்களை நோக்கி, “நாங்கள் ராமோத்கிலேயாத்தின்மேல் யுத்தம்பண்ணப் போகலாமா, அல்லது பொறுத்திருக்கலாமா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “போம், தேவன் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார்” என்றார்கள்.
6ஆனாலும் யோசபாத், “நாம் விசாரிக்கத்தக்கதாய் எங்கள் பிதாவின் தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இன்னும் இல்லையா?” என்றான்.
7இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி, “நாம் எங்கள் பிதாவினிடத்தில் விசாரிக்கத்தக்கதாய் இன்னும் ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன், ஏனெனில் அவன் என்னைக்குறித்து நன்மையல்ல, தீமையையே எப்பொழுதும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான். அவன் இம்லாவின் குமாரனாகிய மிகாயா” என்றான். அதற்கு யோசபாத், “ராஜா அப்படிச் சொல்லலாகாது” என்றான்.
8அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஒரு அதிகாரியை அழைத்து, “இம்லாவின் குமாரனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா” என்றான்.
9இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் ராஜவஸ்திரம் தரித்து, சமாரியாவின் ஒலிமுகவாசலுக்கு முன்பாக இருந்த களத்திலே அவரவர் தம்தம் சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தார்கள்; தீர்க்கதரிசிகள் எல்லாரும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். 10கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா இரும்புக் கொம்புகளை உண்டாக்கி, “தேவன் சொல்லுகிறது: ‘இவைகளால் நீர் சீரியரை அழியுமட்டும் முட்டுவீர்’” என்றான்.
11தீர்க்கதரிசிகள் எல்லாரும் அப்படியே தீர்க்கதரிசனம் சொல்லி, “ராமோத்கிலேயாத்திற்குப் போய் ஜெயங்கொள்ளும்; எங்கள் பிதா அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார்” என்றார்கள்.
12மிகாயாவை அழைக்கப்போன ஸ்தானாபதி அவனை நோக்கி, “இதோ, தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகள் எல்லாம் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையைச் சொல்லுகிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களுடைய வார்த்தையைப்போல இருக்கட்டும்; நன்மையாய்ச் சொல்லும்” என்றான்.
13அதற்கு மிகாயா, “எங்கள் பிதா உயிரோடிருக்கிறது நிச்சயம்போல, என் பிதா சொல்லுகிறதையே நான் சொல்லுவேன்” என்றான்.
14அவன் வந்தபோது ராஜா அவனை நோக்கி, “மிகாயாவே, நாங்கள் ராமோத்கிலேயாத்தின்மேல் யுத்தம்பண்ணப் போகலாமா, அல்லது நான் பொறுத்திருக்கலாமா?” என்று கேட்டான். அதற்கு அவன், “போய் ஜெயங்கொள்ளும்; அவர்கள் உங்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்” என்றான்.
15ஆனாலும் ராஜா அவனை நோக்கி, “எங்கள் பிதாவின் நாமத்திலே சத்தியத்தையே எனக்குச் சொல்லும்படி நான் எத்தனைதரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும்?” என்றான்.
16அப்பொழுது மிகாயா, “மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல இஸ்ரவேலரெல்லாரும் மலைகளின்மேல் சிதறியிருக்கிறதைக் கண்டேன். அப்பொழுது எங்கள் பிதா, ‘இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் சமாதானத்தோடே தம்தம் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவர்கள்’ என்று சொன்னார்” என்றான்.
17அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி, “இவன் என்னைக்குறித்து நன்மையல்ல, தீமையையே தீர்க்கதரிசனம் சொல்லுவான் என்று நான் உமக்குச் சொல்லவில்லையா?” என்றான்.
18அதற்கு மிகாயா, “அப்படியானால் எங்கள் பிதாவின் வார்த்தையைக் கேளுங்கள்: எங்கள் பிதா தம்முடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிறதையும், பரலோகத்தின் சேனைகளெல்லாம் அவருடைய வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.
19அப்பொழுது எங்கள் பிதா, ‘இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் ராமோத்கிலேயாத்திற்குப் போய் விழும்படி அவனை ஆசைகாட்டி இணங்கப்பண்ணுகிறவன் யார்?’ என்று கேட்டார். அதற்கு ஒருவன் இப்படியும், மற்றொருவன் அப்படியும் சொன்னார்கள்.
20அப்பொழுது ஒரு ஆவி வந்து, எங்கள் பிதாவுக்கு முன்பாக நின்று, ‘நான் அவனை ஆசைகாட்டி இணங்கப்பண்ணுவேன்’ என்றது. எங்கள் பிதா அதை நோக்கி, ‘எப்படி?’ என்று கேட்டார்.
21அதற்கு அது, ‘நான் புறப்பட்டுப்போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாருடைய வாயிலும் பொய்யின் ஆவியாயிருப்பேன்’ என்றது. அப்பொழுது எங்கள் பிதா, ‘நீ அவனை ஆசைகாட்டி மேற்கொள்ளுவாய்; புறப்பட்டுப்போய் அப்படியே செய்’ என்றார்.
22இப்போதும், இதோ, எங்கள் பிதா உம்முடைய இந்தத் தீர்க்கதரிசிகளின் வாயிலே பொய்யின் ஆவியை வைத்தார்; எங்கள் பிதா உம்மைக்குறித்துத் தீமையைத் தீர்மானித்திருக்கிறார்” என்றான்.
23அப்பொழுது கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா அருகில் வந்து, மிகாயாவைக் கன்னத்தில் அறைந்து, “தேவனுடைய ஆவி என்னைவிட்டு உன்னோடே பேசும்படிக்கு எந்த வழியாய்ப் போயிற்று?” என்றான்.
24அதற்கு மிகாயா, “நீ ஒளித்துக்கொள்ள உள்ளறைக்குள் போகும் அந்நாளிலே அதைக் காண்பாய்” என்றான்.
25அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, “நீங்கள் மிகாயாவைப் பிடித்து, நகரத்தலைவனாகிய ஆமோனிடத்திற்கும், ராஜாவின் குமாரனாகிய யோவாசிடத்திற்கும் திரும்பக் கொண்டுபோய், 26‘நான் சமாதானத்தோடே திரும்பிவருமட்டும் இவனைச் சிறைச்சாலையில் அடைத்து, துன்பத்தின் அப்பத்தையும் துன்பத்தின் தண்ணீரையும் இவனுக்குக் கொடுங்கள் என்று ராஜா சொல்லுகிறார்’ என்று சொல்லுங்கள்” என்றான்.
27அதற்கு மிகாயா, “நீர் சமாதானத்தோடே திரும்பிவந்தால், எங்கள் பிதா என்னைக்கொண்டு பேசவில்லை என்று அர்த்தம்” என்று சொல்லி, “ஜனங்களே, நீங்கள் எல்லாரும் கேளுங்கள்” என்றான்.
எங்கள் பிதா முன்னறிவித்தபடியே ஆகாப் விழுகிறான்
28அப்படியே இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் ராமோத்கிலேயாத்திற்குப் போனார்கள். 29இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி, “நான் மாறுவேஷம் தரித்து யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ உம்முடைய ராஜவஸ்திரங்களைத் தரித்துக்கொள்ளும்” என்றான். அப்படியே இஸ்ரவேலின் ராஜா மாறுவேஷம் தரித்துக்கொண்டு, அவர்கள் யுத்தத்தில் பிரவேசித்தார்கள். 30சீரியாவின் ராஜா தன்னுடைய இரதங்களின் தலைவர்களை நோக்கி, “நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல், இஸ்ரவேலின் ராஜாவோடே மாத்திரம் யுத்தம்பண்ணுங்கள்” என்று கட்டளையிட்டிருந்தான்.
31இரதங்களின் தலைவர்கள் யோசபாத்தைக் கண்டபோது, “இவன்தான் இஸ்ரவேலின் ராஜா” என்று சொல்லி, அவனோடே யுத்தம்பண்ண அவனைச் சூழ்ந்துகொண்டார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரலிட்டான், எங்கள் பிதா அவனுக்கு உதவிசெய்து, அவர்களை அவனைவிட்டு அப்பாலே போகும்படி ஏவினார். 32இரதங்களின் தலைவர்கள் அவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று கண்டபோது, அவனைப் பின்தொடராமல் திரும்பிவிட்டார்கள். 33ஒருவன் நினையாமல் தன் வில்லை நாணேற்றி எய்தான்; அது இஸ்ரவேலின் ராஜாவுக்குக் கவசத்தின் சந்துகளுக்கு நடுவே பட்டது. அப்பொழுது அவன் தன் இரதத்தை நடத்துகிறவனை நோக்கி, “நான் காயப்பட்டேன்; நீ இரதத்தைத் திருப்பி, என்னை யுத்தத்திலிருந்து வெளியே கொண்டுபோ” என்றான். 34அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; இஸ்ரவேலின் ராஜா சாயங்காலமட்டும் தன் இரதத்திலே சீரியருக்கு எதிராக நிறுத்தப்பட்டிருந்து, சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் மரித்தான்.