ஒரு தேசம் தன் ராஜாவை விட்டு விலகுகிறது
8 1சாமுவேல் முதிர்வயதானபோது, அவர் தம்முடைய குமாரர்களை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக ஏற்படுத்தினார். 2அவருடைய மூத்த குமாரன் யோவேல், இரண்டாவது குமாரன் அபியா; இவர்கள் பெயெர்செபாவில் நியாயாதிபதிகளாய் இருந்தார்கள். 3அவருடைய குமாரர்கள் அவருடைய வழிகளில் நடவாமல், அநியாய ஆதாயத்தைப் பின்பற்றி, லஞ்சம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.
4அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடி, ராமாவிலிருந்த சாமுவேலிடம் வந்து, 5அவரை நோக்கி, “இதோ, நீர் முதிர்வயதானீர், உம்முடைய குமாரர்களோ உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; இப்போதும் மற்ற எல்லா தேசங்களையும்போல எங்களை ஆளுவதற்கு ஒரு ராஜாவை எங்களுக்கு ஏற்படுத்தும்” என்றார்கள். 6“எங்களை ஆளுவதற்கு ஒரு ராஜாவைத் தாரும்” என்று அவர்கள் சொன்னது சாமுவேலுக்கு விருப்பமாய் இருக்கவில்லை; அவர் எங்கள் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணினார்.
7அப்பொழுது எங்கள் பிதா சாமுவேலை நோக்கி, “ஜனங்கள் உன்னிடம் சொல்லும் எல்லாவற்றிலும் அவர்களுடைய சத்தத்திற்குச் செவிகொடு; அவர்கள் உன்னைப் புறக்கணிக்கவில்லை; தங்களுக்கு ராஜாவாய் இராதபடிக்கு என்னையே புறக்கணித்தார்கள். 8நான் அவர்களை எகிப்திலிருந்து கொண்டுவந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும், அவர்கள் என்னை விட்டுவிட்டு, அந்நிய தேவர்களைச் சேவித்தார்களே; அப்படியே உனக்கும் செய்கிறார்கள். 9இப்போதும் அவர்களுடைய சத்தத்திற்குச் செவிகொடு; ஆனாலும் அவர்களை உறுதியாய் எச்சரித்து, அவர்களை ஆளும் ராஜா நடக்கும் முறையை அவர்களுக்கு அறிவி” என்றார்.
ராஜாவின் நடைமுறைகளைக் குறித்து சாமுவேல் எச்சரிக்கிறார்
10அப்படியே சாமுவேல், தன்னிடம் ஒரு ராஜாவைக் கேட்ட ஜனங்களுக்கு எங்கள் பிதாவின் வார்த்தைகளையெல்லாம் சொன்னார். 11அவர் சொன்னது: “உங்களை ஆளும் ராஜா நடக்கும் முறை இதுவே: அவன் உங்கள் குமாரர்களை எடுத்து, தன் இரதங்களுக்கும் தன் குதிரைவீரருக்கும் நியமித்து, தன் இரதங்களுக்கு முன்பாக ஓடும்படி வைப்பான். 12அவன் தனக்காக ஆயிரத்துக்கு அதிபதிகளையும் ஐம்பதுக்கு அதிபதிகளையும் ஏற்படுத்தி, சிலரைத் தன் நிலத்தை உழுவதற்கும் தன் விளைச்சலை அறுப்பதற்கும், மற்றவர்களைத் தன் ஆயுதங்களையும் இரத சாமான்களையும் செய்வதற்கும் நியமிப்பான். 13அவன் உங்கள் குமாரத்திகளைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல்காரிகளாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் எடுத்துக்கொள்வான். 14அவன் உங்கள் நல்ல வயல்களையும், திராட்சத்தோட்டங்களையும், ஒலிவமரத் தோப்புகளையும் எடுத்து, தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான். 15அவன் உங்கள் தானியத்திலும் திராட்சப்பழத்திலும் பத்தில் ஒரு பங்கை எடுத்து, தன் அதிகாரிகளுக்கும் ஊழியக்காரருக்கும் கொடுப்பான். 16அவன் உங்கள் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும், உங்கள் நல்ல வாலிபரையும், உங்கள் கழுதைகளையும் எடுத்து, தன் வேலைக்குப் பயன்படுத்துவான். 17அவன் உங்கள் மந்தைகளில் பத்தில் ஒரு பங்கை எடுத்துக்கொள்வான்; நீங்களே அவனுக்கு அடிமைகளாவீர்கள். 18அந்நாள் வரும்போது, நீங்கள் உங்களுக்காகத் தெரிந்துகொண்ட ராஜாவின் நிமித்தம் கூக்குரலிடுவீர்கள்; ஆனாலும் அந்நாளில் எங்கள் பிதா உங்களுக்கு உத்தரவு கொடுக்கமாட்டார்” என்றார்.
19ஆனாலும் ஜனங்கள் சாமுவேலின் சத்தத்திற்குச் செவிகொடுக்க மறுத்து, “அப்படியல்ல! எங்கள்மேல் ஒரு ராஜா இருக்கவேண்டும்; 20அப்பொழுது நாங்களும் மற்ற எல்லா தேசங்களையும்போல் இருப்போம்; எங்கள் ராஜா எங்களை ஆண்டு, எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, எங்கள் யுத்தங்களை நடத்துவான்” என்றார்கள்.
21சாமுவேல் ஜனங்களின் வார்த்தைகளையெல்லாம் கேட்டபோது, அவைகளை எங்கள் பிதாவின் செவிகளில் விளங்கச்சொன்னார்.
22எங்கள் பிதா சாமுவேலை நோக்கி, “அவர்களுடைய சத்தத்திற்குச் செவிகொடு; அவர்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்து” என்றார். அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேலின் மனிதர்களை நோக்கி, “நீங்கள் அவரவர் தம்தம் ஊருக்குப் போங்கள்” என்றார்.