எங்கள் பிதாவின் பெட்டி இஸ்ரவேலுக்குத் திரும்பி வருகிறது
6 1எங்கள் பிதாவின் பெட்டி பெலிஸ்தரின் தேசத்தில் ஏழு மாதம் இருந்தது. 2பெலிஸ்தர் ஆசாரியர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் அழைத்து: “கர்த்தருடைய பெட்டியை நாங்கள் என்ன செய்யவேண்டும்? அதை அதின் இடத்திற்கு எப்படித் திருப்பி அனுப்பவேண்டும் என்று எங்களுக்குச் சொல்லுங்கள்” என்றார்கள்.
3அதற்கு அவர்கள்: “இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியைத் திருப்பி அனுப்பினால், அதை வெறுமையாய் அனுப்பாமல், அவருக்குக் குற்றநிவாரண காணிக்கையை எவ்விதத்திலும் செலுத்துங்கள். அப்பொழுது நீங்கள் சொஸ்தமாவீர்கள், அவருடைய கை உங்களை விட்டு விலகாதிருந்ததின் காரணத்தையும் அறிவீர்கள்” என்றார்கள்.
4அப்பொழுது அவர்கள்: “நாங்கள் அவருக்குச் செலுத்தவேண்டிய குற்றநிவாரண காணிக்கை என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள்: “பெலிஸ்தரின் அதிபதிகளின் எண்ணிக்கைக்குச் சரியாக ஐந்து பொன் மூலவியாதி உருவங்களும் ஐந்து பொன் எலிகளும் செலுத்துங்கள்; ஏனெனில் உங்கள் அனைவரையும் உங்கள் அதிபதிகளையும் ஒரே வாதை தாக்கிற்று.
5ஆகையால் உங்கள் மூலவியாதிகளின் உருவங்களையும் தேசத்தைப் பாழாக்குகிற எலிகளின் உருவங்களையும் உண்டாக்கி, இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமையைச் செலுத்துங்கள்; ஒருவேளை அவர் தமது கையை உங்களைவிட்டும் உங்கள் தேவர்களைவிட்டும் உங்கள் தேசத்தைவிட்டும் விலக்குவார். 6எகிப்தியரும் பார்வோனும் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினதுபோல, நீங்கள் ஏன் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்துகிறீர்கள்? அவர் அவர்களை கடினமாய் நடத்தினபின்பு, அவர்கள் ஜனங்களை அவர்கள் வழியே போகவிட்டார்கள் அல்லவா?” என்றார்கள்.
7“இப்பொழுது நீங்கள் ஒரு புது வண்டியைச் செய்து, நுகம் பூட்டப்படாத, கறவையான இரண்டு பசுக்களைப் பிடித்து, அவைகளை வண்டியிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை அவைகளிடமிருந்து பிரித்து அடைத்துவையுங்கள். 8பின்பு கர்த்தருடைய பெட்டியை எடுத்து, அதை வண்டியின்மேல் வைத்து, நீங்கள் அவருக்குக் குற்றநிவாரண காணிக்கையாகச் செலுத்தும் பொன் வஸ்துக்களை அதின் பக்கத்தில் ஒரு சிறிய பெட்டியிலே வைத்து, அதை அனுப்பிவிடுங்கள். 9பின்பு கவனித்துப் பாருங்கள்: அது தன் சொந்த எல்லைக்குப் போகிற வழியாய் பெத்செமேசுக்கு ஏறிப்போனால், இந்தப் பெரிய அநர்த்தத்தை நமக்குச் செய்தவர் அவரே; இல்லாவிட்டால், அவருடைய கை நம்மைத் தாக்கவில்லை என்றும், அது தற்செயலாய் நமக்கு நேரிட்டது என்றும் அறிவோம்” என்றார்கள்.
10அப்படியே அந்த மனிதர் செய்தார்கள்: கறவையான இரண்டு பசுக்களைப் பிடித்து, அவைகளை வண்டியிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை வீட்டிலே அடைத்துவைத்தார்கள். 11எங்கள் பிதாவின் பெட்டியையும், பொன் எலிகளையும் தங்கள் மூலவியாதிகளின் உருவங்களையும் வைத்திருந்த சிறிய பெட்டியையும் வண்டியின்மேல் வைத்தார்கள். 12அந்தப் பசுக்கள் வலதுபுறமோ இடதுபுறமோ சாயாமல், கூப்பிட்டுக்கொண்டே ஒரே பாதையில் பெத்செமேசுக்கு நேராகச் சென்றன. பெலிஸ்தரின் அதிபதிகள் பெத்செமேசின் எல்லைமட்டும் அவைகளின் பின்னாலே போனார்கள். 13பெத்செமேசின் மனிதர் பள்ளத்தாக்கிலே கோதுமை அறுப்பு அறுத்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்து, பெட்டியைக் கண்டு, அதைப் பார்த்து மகிழ்ந்தார்கள். 14அந்த வண்டி பெத்செமேசானாகிய யோசுவாவின் வயலிற்கு வந்து, அங்கே ஒரு பெரிய கல்லண்டையிலே நின்றது. அப்பொழுது அவர்கள் வண்டியின் மரத்தைப் பிளந்து, அந்தப் பசுக்களை எங்கள் பிதாவுக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தினார்கள். 15லேவியர் எங்கள் பிதாவின் பெட்டியையும், அதின் பக்கத்தில் பொன் வஸ்துக்களை வைத்திருந்த சிறிய பெட்டியையும் இறக்கி, அவைகளை அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள். அன்றையதினம் பெத்செமேசின் மனிதர் எங்கள் பிதாவுக்குச் சர்வாங்க தகனபலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்தினார்கள். 16பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும் இதையெல்லாம் கண்டு, அன்றையதினமே எக்ரோனுக்குத் திரும்பிப்போனார்கள். 17பெலிஸ்தர் எங்கள் பிதாவுக்குக் குற்றநிவாரண காணிக்கையாகச் செலுத்தின பொன் மூலவியாதி உருவங்கள் இவைகளே: அஸ்தோத்துக்கு ஒன்று, காசாவுக்கு ஒன்று, அஸ்கலோனுக்கு ஒன்று, காத்துக்கு ஒன்று, எக்ரோனுக்கு ஒன்று. 18பொன் எலிகளோ, அரணிப்பான பட்டணங்களும் மதிலில்லாத கிராமங்களுமாகிய ஐந்து அதிபதிகளுக்குரிய பெலிஸ்தரின் எல்லாப் பட்டணங்களின் எண்ணிக்கைக்குச் சரியாய் இருந்தன. அவர்கள் எங்கள் பிதாவின் பெட்டியை வைத்த அந்தப் பெரிய கல் பெத்செமேசானாகிய யோசுவாவின் வயலிலே இந்நாள்வரைக்கும் சாட்சியாய் இருக்கிறது. 19ஆனாலும் பெத்செமேசின் மனிதரில் சிலர் எங்கள் பிதாவின் உடன்படிக்கைப் பெட்டிக்குள்ளே பார்த்ததினால், அவர் அவர்களை அடித்து, எழுபதுபேரைக் கொன்றுபோட்டார். அவர் ஜனங்களை இவ்வளவு பெரிய அடியாய் அடித்ததினால், அவர்கள் துக்கித்தார்கள். 20அப்பொழுது பெத்செமேசின் மனிதர்: “பரிசுத்தமுள்ள தேவனாகிய எங்கள் பிதாவுக்கு முன்பாக நிற்கத் தக்கவன் யார்? அவர் எங்களைவிட்டு யாரிடத்திற்கு ஏறிப்போவார்?” என்றார்கள்.
21பின்பு அவர்கள் கீரியாத்யாரீமின் குடிகளிடத்திற்கு ஆட்களை அனுப்பி: “பெலிஸ்தர் எங்கள் பிதாவின் பெட்டியைத் திருப்பிக் கொடுத்தார்கள்; நீங்கள் இறங்கிவந்து, அதை உங்களிடத்திற்கு எடுத்துக்கொண்டுபோங்கள்” என்று சொல்லச்சொன்னார்கள்.