பிதாவின் அபிஷேகம் பண்ணப்பட்டவனைத் தாவீது தப்பவிடுகிறான்
24 1சவுல் பெலிஸ்தரைத் துரத்திவிட்டுத் திரும்பி வந்தபோது, “தாவீது என்கேதி வனாந்தரத்தில் இருக்கிறான்” என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது. 2அப்பொழுது சவுல் இஸ்ரவேலரெல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம் பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவனுடைய மனுஷரையும் வெள்ளாட்டுப் பாறைகளுக்கு எதிரே தேடிப்போனான். 3வழியருகிலிருந்த ஆட்டுத்தொழுவங்களுக்கு அவன் வந்தான்; அங்கே ஒரு குகை இருந்தது. சவுல் தன் கால்களை மூடிக்கொள்ளும்படி அதற்குள் போனான்; தாவீதும் அவனுடைய மனுஷரும் அந்தக் குகையின் உட்புறத்தில் உட்கார்ந்திருந்தார்கள். 4அப்பொழுது தாவீதின் மனுஷர் அவனை நோக்கி, “‘உன் சத்துருவை நான் உன் கையில் ஒப்புக்கொடுப்பேன், உனக்கு விருப்பமானபடி அவனுக்குச் செய்யலாம்’ என்று எங்கள் பிதா உம்மிடத்தில் சொன்ன நாள் இதுவே, இதோ” என்றார்கள். அப்பொழுது தாவீது எழுந்து, சவுலுடைய சால்வையின் ஓரத்தை மெதுவாய் அறுத்துக்கொண்டான். 5பின்பு, தான் சவுலுடைய சால்வையின் ஓரத்தை அறுத்துக்கொண்டதினால், தாவீதின் மனச்சாட்சி அவனை உறுத்தியது. 6அவன் தன் மனுஷரை நோக்கி, “என் ஆண்டவனும் அவருடைய அபிஷேகம் பண்ணப்பட்டவனுமாகிய இவனுக்கு நான் இப்படிச் செய்து, இவன்மேல் என் கையை நீட்டுவது எங்கள் பிதாவினால் விலக்கப்படுவதாக; இவன் எங்கள் பிதாவின் அபிஷேகம் பண்ணப்பட்டவனாயிருக்கிறானே” என்றான். 7இந்த வார்த்தைகளால் தாவீது தன் மனுஷர் சவுலின்மேல் எழும்பாதபடி அவர்களை அடக்கினான். சவுல் எழுந்து குகையைவிட்டுத் தன் வழியே போனான். 8பின்பு தாவீதும் எழுந்து, குகையைவிட்டுப் புறப்பட்டு, சவுலுக்குப் பின்னாலே, “ராஜாவாகிய என் ஆண்டவனே!” என்று கூப்பிட்டான். சவுல் திரும்பிப் பார்த்தபோது, தாவீது தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்.
9தாவீது சவுலை நோக்கி, “‘இதோ, தாவீது உமக்குத் தீங்குசெய்யப் பார்க்கிறான்’ என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை நீர் ஏன் கேட்கிறீர்? 10இன்று எங்கள் பிதா உம்மை இந்தக் குகையில் என் கையில் ஒப்புக்கொடுத்ததை உம்முடைய கண்கள் கண்டதே. உம்மைக் கொன்றுபோடும்படி சிலர் என்னைத் தூண்டினார்கள்; ஆனாலும் நான் உம்மைத் தப்பவிட்டு, ‘என் ஆண்டவனாகிய எங்கள் பிதாவின் அபிஷேகம் பண்ணப்பட்டவன்மேல் என் கையை நீட்டேன்’ என்றேன். 11என் தகப்பனே, பாரும்; உம்முடைய சால்வையின் ஓரம் என் கையில் இருக்கிறதே! உம்முடைய சால்வையை நான் அறுத்தேன், உம்மைக் கொல்லவில்லை. என் கையில் பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்பதை அறிந்து பாரும். நான் உமக்கு விரோதமாய்ப் பாவம் செய்யவில்லை; ஆனாலும் நீர் என் பிராணனை எடுத்துக்கொள்ள அதை வேட்டையாடுகிறீர். 12எங்கள் பிதா எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்க்கட்டும்; எங்கள் பிதா நீர் எனக்குச் செய்ததற்காக உம்மைப் பழிவாங்கட்டும்; ஆனாலும் என் கை உம்மைத் தொடாது. 13‘துன்மார்க்கரிடத்திலிருந்து துன்மார்க்கம் புறப்படும்’ என்று பழமொழி சொல்லுகிறபடியே; ஆகையால் என் கை உமக்கு விரோதமாய் இராது. 14இஸ்ரவேலின் ராஜா யாருக்கு விரோதமாய்ப் புறப்பட்டு வந்தார்? யாரைத் துரத்துகிறீர்? செத்த நாயையா? ஒரு தெள்ளுப்பூச்சியையா? 15எங்கள் பிதா நடுவராயிருந்து எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, என் காரியத்தைப் பார்த்து, எனக்காக வழக்காடி, உம்முடைய கைக்கு என்னைத் தப்புவிப்பாராக” என்றான்.
16தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலிடத்தில் சொல்லி முடித்தபோது, சவுல், “என் மகனாகிய தாவீதே, இது உன்னுடைய சத்தமா?” என்று சொல்லி, சத்தமிட்டு அழுதான். 17அவன் தாவீதை நோக்கி, “நீ என்னைப்பார்க்கிலும் நீதிமான்; நான் உனக்குத் தீமை செய்தேன், நீ எனக்கு நன்மை செய்தாய். 18எங்கள் பிதா என்னை உன் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொல்லாமல், நீ எனக்குச் செய்த நன்மையை இன்று விளங்கப்படுத்தினாய். 19ஒருவன் தன் சத்துருவைக் கண்டுபிடித்தால், அவனைச் சேதமின்றிப் போகவிடுவானோ? நீ இன்று எனக்குச் செய்ததற்காக எங்கள் பிதா உனக்கு நன்மையாய்ப் பலனளிப்பாராக. 20இப்பொழுது, இதோ, நீ நிச்சயமாய் ராஜாவாவாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்யம் உன் கையில் நிலைநிற்கும் என்றும் அறிந்திருக்கிறேன். 21ஆகையால், எனக்குப்பின் என் சந்ததியை நீ சங்கரிப்பதில்லை என்றும், என் தகப்பன் வீட்டாரில் என் நாமத்தை அழிப்பதில்லை என்றும், எங்கள் பிதாவின்பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடு” என்றான்.
22அப்படியே தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். பின்பு சவுல் தன் வீட்டுக்குப் போனான்; தாவீதும் அவனுடைய மனுஷரும் அரணான ஸ்தலத்திற்கு ஏறிப்போனார்கள்.